ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்காது
போனால், தடைகள் உள்ளிட்ட தீவிரமான நடவடிக்கைகளை எதிர்காள்ள
வேண்டியிருக்கும் என்று, போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறல் தொடர்பான
ஐ.நாவின் முன்னாள் ஆலோசகர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
“தடைகள் பல்வேறு வடிவங்களில் விதிக்கப்படலாம். அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று என்னால் கருத்துக் கூறமுடியாது. அனைத்துலக விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்காது போனால் அல்லது அதனை
நிராகரித்தால், தடைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பது தெரியும்.
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநதம்பிள்ளையின் முடிவை நிராகரிப்பதாக அது
அர்த்தமாகாது, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முடிவை நிராகரிப்பதாகவே
கருதப்படும்.
அரசஅதிகாரிகள் மீதான பயணத்தடை, சொத்துகளை முடக்குதல், வெளிநாட்டு
முதலீடுகளை கைவிடுதல், அமெரிக்க டொலரை பரிமாற்றுவதற்கான தடை, என்று பல
விதமான தடைகளை எதிர்கொள்ள நேரலாம்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் பிராந்திய
நாடுகளுடனான தீவிரமான கலந்துரையாடல்களின் பின்னரே, பொருத்தமான நடவடிக்கை
என்னவென்று தீர்மானிக்கப்படும் என்று நான் அனுமானிக்கிறேன். தடைகள், ஒரு நாட்டின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும்.
அண்மையில் கிரீமியா விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும், ரஸ்யா மீது தடைகளை விதித்துள்ளன. அதுபோல, நடப்பதை நான் விரும்பவில்லை.
எனவே, விசாரணைகளில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடன் ஒத்துழைக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறேன்.
எந்தவகையிலும் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
நீங்கள் உங்களை விசாரணை செய்ய முடியுமா என்பதே முக்கியமான கேள்வி. அதுதான் பிரச்சினை. சுதந்திரமான விசாரணைக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை விடுத்துள்ள அழைப்பை சிறிலங்கா அதிபர் நிராகரித்துள்ளது அதிர்ச்சி தருகிறது.
சிறிலங்கா நல்லிணக்கத்தை எட்டுவதற்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது. நம்பிக்கை, நீதி, பொறுப்புக்கூறல் இன்றி, நல்லிணக்கத்தை நாம் அடைய முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment