• Latest News

    March 07, 2014

    கல்முனை மேயர் மக்களை சிங்கள மக்களிடம் காட்டிக் கொடுத்து விட்டார்: முபாறக் அப்துல் மஜீத் மௌலவி

     கல்முனை நிருபர்;
    மாடு அறுப்பது சம்பந்தமாக அரசாங்கம் விடுத்த வர்த்தமானியை வாசித்து விளங்காமல் கல்முனையில் மாடறுக்க தடையில்லை என கல்முனை மேயர்  நிசாம் காரியப்பர் அவசரப்பட்டு கூறியதன் மூலம் கல்முனை மக்களை சிங்கள பேரினவாதத்திடம் காட்டிக்கொடுத்தமை பாரிய தவறாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

    பிக்குமார் கடந்த  16 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் வைத்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதற்கு விரோதமாக உண்ணாவிரத மற்றும் தற்கொலை அச்சுறுத்தல் ஆர்ப்பாட்டம் செய்த காரணத்தால் அரசாங்கம் 19ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாடுகளுக்கு நோய் உள்ளது என்ற புதியதொரு கண்டு பிடிப்பை கூறி சில மாவட்டங்களில் மாடு அறுக்க தடை விதித்தது.

    இந்த வர்த்தமாணி அறிக்கையில் அம்பாறை மாவட்டம் உள்வாங்கப்பட்டிருந்தும் கல்முனையில்  இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவவில்லை. ஆனால் கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் 21 ஆம் திகதி ஊடகங்களுக்களித்த அறிக்கை மூலம் கல்முனையில் மாடு அறுக்க எந்தத்தடையும் இல்லை என்றும் இது ஒரு வதந்தி எனவும் தெரிவித்திருந்தார். இதனை ஊடகங்கள் மூலம் அறிந்த பேரினவாதம் பொலிசாருக்கு கொடுத்த தகவல்களினால் அட்டாளைச்சேனை கல்முனை போன்ற நகரங்களில் மாட்டிறைச்சிக்கடைகளை பொலிசார் முற்றுகையிட்டு இறைச்சிகளை பறித்தெடுத்தனர். கல்முனை மேயர் அவசரப்பட்டு குட்டையை குழப்பாமல் இருந்திருந்தால் மாட்டிறைச்சிக்கடைக்காரர்கள் பாரிய நஷ்டத்துக்கும் வறுமைக்கும் முகம் கொடுக்கும் நிலை சில காலங்களுக்கு தள்ளிப்போயிருக்கும்.

    ஆகவே, கல்முனை மாநகர மேயரின் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அவரது அரசியல் அறிவு கேள்விக்குட்படுத்தப்படுகிறது. அத்துடன் மாடு அறுப்பதை தடைசெய்ததன் மூலம் தமது வாழ்வாதாரத்தை இழந்த மாட்டு உரிமையாளர்கள் மற்றும் கல்முனையில் மாடு அறுக்க தடையில்லை எனும் மேயரின் பேச்சை நம்பி மாட்டிறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த போது பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும் கல்முனை மாநகர சபை உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மேயர் மக்களை சிங்கள மக்களிடம் காட்டிக் கொடுத்து விட்டார்: முபாறக் அப்துல் மஜீத் மௌலவி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top