சர்வதேச
விசாரணைக்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டால், அந்த குழுவை இலங்கைக்குள்
அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கும்
என்று, அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார்.
விசாரணை குழு ஒன்று வீசா இன்றி
இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது. இந்த நிலையில் அந்த குழு வீசாவுக்கு
விண்ணப்பிக்கும் போது, அந்த குழு நாட்டுக்குள் பிரவேசிக்கும் பொருட்டு வீசா
வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கும்.
இதன்படி ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
நவநீதம்பிள்ளை, விசாரணை குழு ஒன்றின் ஊடாக இலங்கையில் போர் நடைபெற்ற
காலத்ததில் இருத்தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள்
குறித்து விசாரணை நடத்துவார்.
இந்த விசாரணைக்கு எந்த வகையில் உதவ
போவதில்லை என்பது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில்,
மனித உரிமை ஆணையாளர் தன்னிச்சையான விசாரணைகளை நடத்துவார் என முன்னாள்
இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின்
மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை நிராகரிப்பதாக
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதி இந்த கருத்தினை தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நிராகரித்துள்ள ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ, இலங்கைக்கே தனித்துவமான நல்லிணக்க செயற்பாட்டை
கட்டியெழுப்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இந்த
பிரேரணை பொருத்தமற்றதாகும் என்பதுடன், அதன் மூலம் எந்த விதமான நன்மைகளும்
கிட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் இதன் ஊடாக அதைரியம்
அடையப்போவதில்லை எனக் கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தாம்
ஆரம்பித்துள்ள நல்லிணக்க செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக பிரான்ஸ்
செய்திச் சேவைக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment