யுத்தத்தின் பின்னர் விரைவாக அபிவிருத்தியடைந்து வரும் இலங்கையில் பயனுள்ள வர்த்தக மற்றும் தொழில் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த ஒமான் நாட்டின் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையில் புதிதாக நேரடி இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒமான் நாட்டிற்கான தூதுவர் அல்ஷெய்க் ஜூமாஹ் ஹம்தான் ஹஸன் அல் ஷெஹ்ஹி, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்
எண்ணெய் வளம் கொழிக்கும் ஒமான் நாடு இலங்கையுடன் நல்லுறவைப் பேணுவதன் ஊடாக இரு நாடுகளும் பயனடையக் கூடியதாக இருக்குமென அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உல்லாசத்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் முதலீட்டு முயற்சிகளில் ஈடுபடுவதற்கு மிகவும் சாதகமான நிலைமை காணப்படுவதாக அமைச்சர் ஹக்கீம் ஒமான் தூதுவரிடம் கூறினார்.
இஸ்லாமிய ஷரிஆ சட்டம் சம்பந்தப்பட்ட விடயங்களிலும் ஏனைய நீதித்துறை சார்ந்த விடயங்களிலும் பரஸ்பரம் கருத்துப் பறிமாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் ஏற்பாடுகளை செய்வது குறித்தும் ஆராயப்பட்டது.
அங்குள்ள நீதி முறைமையைப் பற்றி உரிய பயிற்சிகளை பெறுவதற்காக இலங்கை நீதிபதிகளை அங்கு அனுப்புவது தொடர்பிலான சாத்தியக்கூறுகள் பற்றியும் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டது.
இலங்கையில் விரைவில் அமையவுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தின் சேவைகளை உலக நாடுகள் எவையும் பெற்றுக்கொள்வதற்கு வழிவகைகள் செய்யப்படுமெனவும், ஒமான் நாடும் வர்த்தக, தொழில் பிணக்குகளுக்கு இங்கு அமையப்பெறும் நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக தீர்வுகளைக் காணக்கூடியதாக இருக்குமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் நீதிமன்ற கட்டமைப்புக்கு புறம்பாக, இணக்க சபைகளின் மூலம் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்கள் பெறுமதியான வழக்குகளுக்கு தீர்வுகளை காண்பது வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஹக்கீம் கூறிய போது இவ்வாறான இணக்க சபை நடைமுறை ஒமான் நாட்டிலும் இருப்பதாக தூதுவர் தெரிவித்தார்.
ஓமான் நாட்டில் 25 இலட்சம் சுதேச மக்களும் 13 இலட்சம் வெளிநாட்டவரும் வசித்து வருவதாகவும், அவர்கள் பல்வேறு தொழிற்துறைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தூதுவர் கூறினார். ஷாபிஈ மத்ஹப் உடன் ஏனைய இரு மத்ஹபுகளை ஓமானியர்கள் அனுசரித்து வருவதாக தூதுவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் அண்மைக்காலம் வரை நிலவி வந்த சமய சகிப்புத் தன்மைக்கு சில தீவிரவாத குழுக்களின் தலையீடு காரணமாக சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதம் ஊடுருவி இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அபாண்டமானவையெனவும் அமைச்சர் சொன்னார்.
அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

0 comments:
Post a Comment