அ. நவாஸ் -
கடந்த ஒரு வருட காலத்திற்கு முன்பாக
இலங்கை முஸ்லிம்களின் தேசிய பிரச்சினையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
ஆக்கபூர்வமான பங்களிப்பை எதிர்பார்த்து, ஏங்கி ஏங்கி ஏமாந்து போன ஒவ்வொரு
முஸ்லிமின் மனதிலும் ஒட்டுமொத்தமாக மரண அடி வாங்கிய நிலையில் இப்போது
ஏன் திடீரென முஸ்லிம் காங்கிரஸ் சுதாரித்துக்கொண்டது எனும்
கேள்வியெழுகிறது.
யா அல்லாஹ்! இது நடிப்பாகவோ ரவுப்
ஹகீமின் அரசியல் தந்திரமாகவொ இருக்கக்கூடாது என ஒரு சாரார் கவலை
கொண்டுள்ளனர். இது உண்மைதான் எனும் நிலைப்பாட்டில் தீவிர பக்தர்கள்
கருத்துப் போர் நடாத்திவருகின்றனர். அப்படியாயின் ஏன் இப்போது? உண்மையான
குரல் தேவைப்பட்ட போது ஓடி ஒளிந்தது ஏன் என இன்னொரு தரப்பு கேள்வி
கேட்கிறது. இவ்வாறு அனைத்து விடயங்களையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது
கேள்விகள் எழுவதும் நியாயமாகவே தோன்றுகிறது.
இந்நிலையில், அரச தரப்பில் அங்கம்
வங்கிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள்
மற்றும் மு.கா தலைவரால் ‘குட்டி ஷைத்தான்’ என விபரிக்கப்பட்ட ஜே.வி.பி
முஸம்மில் போன்றோர்களும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது திடீர்
தாக்குதலை ஆரம்பித்திருப்பதை சந்தர்ப்பவாதமாக பார்ப்பதா அல்லது
முரண்பாட்டின் வெளிப்பாடாகக் காண்பதா என்பதிலும் சிறு சந்தேகம் இருக்கிறது.
அதன் அடிப்படையில் கவனிக்கும் போது
தற்போது இறுதியாக வெளியாகியிருக்கும் அரச தரப்பு தகவல்களையும் கொண்டு
நோக்கும் போது குறித்த முஸ்லிம் உறுப்பினர்கள் மாபெரும் சந்தர்ப்பவாதிகள்
என்பது தெள்ளத் தெளிவாகிறது. ரவுப் ஹகீமை அரசை விட்டு விரட்டுவது
மாத்திரமன்றி கேவலப்படுத்தி முடங்க வைக்க வேண்டும் என்பதில் குறித்த
கூட்டம் மிகத் தீவிரமாக செயற்படுகிறது.
இதற்கான காரணம் ‘அடிமை அரசியல்’ என்பது
போகப் போக எமது சமூகம் கற்றுக்கொள்ளும். ஆனாலும் என்னதான்
கற்றுக்கொண்டாலும் அமைச்சர் ரிசாத் பதியுதீனைத் தவிர மற்றவர்களுக்கு
தேசியப் பட்டியல் இடமாவது கிடைக்கும் என்பதால் அவர்கள் இதைப்பற்றி
அலட்டிக்கொள்ளாத அதேவேளை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஒரே கல்லில் இரு
கனிகள் பறிக்க மேற்கொள்ளும் முயற்சியும் தெட்டத் தெளிவாக இருக்கிறது.
ஆக மொத்தத்தில் ஒரு அரசனின் காலடியில்
தவமிருப்பதில் தான் ஒட்டு மொத்தக் கூட்டத்திற்குள்ளும் போட்டியென்பதை
அவதானித்துப்பார்க்கும் போது மிகக் கேவலமாக இருப்பதை சமூக ஆர்வலர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
YMMA அஷ்ரப் ஹுசைனின் திடீர் வரவு
இந்நிலையில் அண்மைக்காலமாக அஷ்ரப்
ஹுசைனின் சமூக அக்கறையும் ஏதோ ஒரு திசை நோக்கி பட்டுத்தெறிவதையும் அவரது
சமீப கால நடவடிக்கைகள் தெளிவாக்கியிருக்கின்றன.
இலங்கை முஸ்லிம்களுக்கு பேரினவாதத்தின்
உக்கிர அழுத்தம் தரப்பட்ட காலத்தில் உண்மையில் வெளியில் நின்று குரல்
கொடுத்தவர்கள் யார் என்பதை இந்த சமூகத்திற்கு மீண்டும் ஞாபகப்படுத்த
வேண்டிய நிலையில்லை. ஆனாலும் அந்த நேரத்தில் மெளனம் காத்த முஸ்லிம்
காங்கிரசையும் அதன் தீவிர ஆதரவாளர்களையும் பொறுத்தவரை அப்போது குரல்
கொடுத்தவர்களில் ஒருவரான அசாத் சாலி போன்றோர் அவசர குடுக்கைகள்,
புத்தியற்றவர்கள், அரசியல் இலாபத்துக்காகப் பேசுபவர்கள் என்றும் முத்திரை
குத்தப்பட்டதோடு அசாத் சாலி சிறை சென்றதும் ஒரேயடியாக சமூகம் பயந்து
அடங்கியதைக் கண்டு ஏளனமும் செய்ய ஆரம்பித்தனர்.
அந்த நேரத்தில், அவ்வாறான ஒரு உணர்ச்சி
மிக்க கால கட்டத்தில் அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் மற்றும் சர்வதேச
ரீதியிலும் தம் சமூகம் மீது அக்கறை கொண்டியங்கியவர்கள், மத்திய கிழக்கில்
இருந்து கூட தம் பெயர் விபரங்களை வெளியிட்டு உணர்வுகளைக் கொட்டியவர்கள்
என்று பல தரப்பினரும், கடந்த வருட மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின்
போது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையை ஐ.நா செயலாளருக்கு கடித மூலம்
அசாத் சாலி அறிவித்த விடயம் மற்றும் சமூக மட்டத்தில் ரவுப் ஹகீம் உறங்கிக்
கிடந்த போது மேற்கொள்ளப்பட்ட இன்னோரென்ன முயற்சிகளையெல்லாம் அறியவே
அறியாதது போன்று அஷ்ரப் ஹுசைன் தனது இரண்டாவது வாய்ப்பிலேயே ரவுப் ஹகீமின்
துதி பாடுவானது சமூகத்துக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
கிழக்கே அவுஸ்திரேலியா, இந்தோனேசியா
முதல் மேற்கே கனடா, அமெரிக்கா, மத்தியகிழக்கு, ஐரோப்பா , நேபாள்,
பாகிஸ்தான் என சர்வதேச ஊடகங்களின் உதவியுடன் இந்த விடயத்தை
சர்வதேசமயப்படுத்தப் பாடுபட்ட அத்தனை பேரையும் உதறித் தள்ளியுள்ள அஷ்ரப்
ஹுசைன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தான் ஐ.நா வரை சென்றார் என புகழாரம்
சூட்டும் இச்செயலானது அவரது அறியாமை அல்லது சுயநலப் போக்குடனான அரசியல்
அபிலாஷைகளையே காட்டி நிற்கிறது.
இந்த விடயங்களை மறந்து அல்லது அறியாமலேயே
தான் அறிக்கை வெளியிடுவதாக அஷ்ரப் ஹுசைன் கூறத் தயாரா இல்லையா என்பதை அவரது
அடுத்த நடவடிக்கையில் கண்டு கொள்ளலாம். எனினும், விபரமறிந்து அவருக்கு
எத்திவைக்கக்கூடியவர்கள் முடிந்தால் அவருடைய பதிலைப் பெற்றுப்
பிரசுரியுங்கள்.
ஜனாதிபதி vs ரவுப் ஹகீம்
இப்போது இந்த சூழ்நிலையில்
ஜனாதிபதிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையிலான பிணக்கை ஆராயும் போது
நீதியமைச்சர் அவரை விரட்டியடிக்க ஏனையோர் திட்டமிடும் அதே வகையில் தானும்
ஒரு சந்தர்ப்பவாதியாகவே நடந்து கொள்கிறார் என்றும் இது சமூக அக்கறை என்பதை
விட அரசியல் ‘பேரம்’ என்பதும் இன்னொரு பார்வையாக இருக்கிறது.
இது ஏன் அரசியல் பேரமாக இருக்க வேண்டும்
எனும் கேள்விக்கு நீண்ட கால ஆய்வின் அவசியமில்லாத வகையிலே ரவுப் ஹகீமும்
ஹஸன் அலியும் மாறி மாறி பல காலங்களாக ஒரே விடயத்தைச் சொல்லி வருகிறார்கள்.
அதுதான் அரசாங்கம் விரும்பினால் எங்களை வெளியேற்றட்டும் நாங்களாக வெளியேற
மாட்டோம் என்பதாகும்.
எனவே, வெளியே போவதென்றால் போ என
ஜனாதிபதி தெரிவித்துள்ளமை உறுதியான தகவல்கள் மூலம்
ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில் நாளை கூடப்போகும் மு.கா உயர்பீடம்
எவ்வகையான அரசியல் அழுத்தத்தை அரசுக்கு வழங்க முடியும் என்று பார்த்தால்
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியது போன்று செல்லாக்காசாகியிருக்கும்
இத்தருவாயில் மீண்டும் பழைய பல்லவியை புதுப்பொலிவுடன் ஆரம்பித்து,
நீங்களாக வெளியேற்றுங்கள் அதுவரை நாங்கள் இருக்கிறோம் என்று
முடித்துக்கொள்ளக்கூடும்.
தவிரவும், இப்போது அரசை எதிர்க்கத்
துணிந்துவிட்டோம், எமது சமூகத்தைக் கை விட மாட்டோம், காட்டிக் கொடுக்க
மாட்டோம் என்றெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பேசுவதெல்லாம் தூய்மையான
பேச்சாக இருந்தால், இதோ மீண்டும் இந்த ஜெனிவா கூட்டத்தைத் தொடர்ந்து
இன்னொரு ஆட்டத்திற்கு தயாராகும் பேரினவாதத்தை ஜனநாயக போராட்டங்களால்
எதிர்த்து வழி காட்ட முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கட்டும். பதவிகளைத்
தூக்கியெறிந்து, அடிமை விலங்கை உடைத்தெறிந்து மக்களோடு தோளோடு தோள்
நிற்கட்டும். நிற்பார்களா? என்பதை அவர்கள் தான் கூறவேண்டும்.
உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாத
முதுகெலும்பற்ற தலைமையாகவே தேவைப்பட்ட காலத்தில் முடங்கிக்கிடந்த முஸ்லிம்
காங்கிரஸ் இன்று திடீரென எழுந்து நாம் சமூகத்தின் காவலர்கள் என்று
சொல்லும் போது இது உண்மையாக இருக்கக்கூடாதா எனும் ஆவல்தான் மக்கள்
மத்தியில் அதிகரிக்கிறது என்பதும் செயற்பாடற்ற பதவி மோகம் பிடித்த
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தான் இன்று மக்களால் வெறுக்கப்படுகிறது என்பதும்
தகுந்த சந்தர்ப்பத்தில், ஒருவேளை சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டால் அரசை எதிர்த்தாலும் பரவாயில்லை, உலகமே
பார்த்துக்கொண்டிருப்பதனால் தமக்கு எந்த ஆபத்தும் வரப்போவதில்லையென
ஊகித்து தான் சட்டத்தரணி ஹகீம் கணக்குப் போட்டாரா என்பதுவும் இன்னும் சில
தினங்களில் வெளிச்சத்துக்கு வரவேண்டிய உண்மைகள்.
ஏனெனில் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு
உண்மையான தலைமையும், தெளிவான கொள்கையும் கொண்ட வழி காட்டல்
தேவைப்படுகிறது. அன்று முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் மர்ஹும் அஷ்ரபிடம்
காணப்பட்ட வேகமும் விவேகமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று அவரது
வேகமும் விவேகமும் பிழையென வாதிப்பதாக இருந்தால் நமது சமூகத்திலேயே
இன்னுமொரு சாரார் கூறுவது போன்று முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாத கட்சியாக
உருவெடுத்திருக்கவே கூடாது எனும் நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளப்பட
வேண்டியதாக மாறுகிறது.
இவ்வாறிருக்க, முஸ்லிம் காங்கிரஸ் எனும்
பெயரை வைத்துக்கொண்டு எவ்வாறு அந்தக் கட்சியும் அதன் தலைமையும் கடந்த
காலத்தில் மெளனித்து இருந்தார்கள், அப்போது போராடியவர்களை
கேவலப்படுத்தினார்கள், அப்படியானால் ஏன் இப்போது அதையே இவர்கள்
செய்கிறார்கள் அதுவும் தேர்தலைத் தவிர வேறு எதுவித முக்கிய அழுத்தங்களும்
இல்லாத நிலையில் ஏன் அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள் என பல்வேறு
கேள்விகள் எழுகின்றன.
நீதியமைச்சராக ஒரு முஸ்லிம் இருக்கும்
நாட்டில் பள்ளிவாயல் ஒன்று சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கிறது என
தீர்ப்பளிக்கப்பட்டுள்ள வரலாறு நேற்று முன் தினம் பதிவாகியிருக்கிறது.
இதற்கு பதில் சொல்லும் பொறுப்பு நீதியமைச்சராகவும் இலங்கை முஸ்லிம்
காங்கிரசின் தலைவராகவும் ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதியாகவும்
அமைச்சர் ரவுப் ஹகீமுக்கு இல்லையா என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க
வேண்டும்.
அந்தப் பள்ளிவாசலுக்கு கல் வீசப்பட்டபோது
ஓடோடிச் சென்ற ஹகீம், ரிஷாத் பதியுதீனெல்லாம் நேற்று எங்கே போனார்கள்
என்ற கேள்வியும் நாளை இதை எவ்வாறு அரசியலாக்குவார்கள் எனும் கேள்வியும் கூட
இல்லாமலில்லை.
இந்த அரசியல் பின்னணியில் ரவுப் ஹகீம்
ஜனாதிபதிக்கு வழங்க முனைந்தது ஒரு அரசியல் அதிர்ச்சியா? சந்தர்ப்பவாத
தாக்குதலா? சமூகத்தை வைத்து பேசப்பட முனைந்த ‘பேரமா’ எனும் கேள்விகளும்
இருக்கின்றன.
இன்ஷா அல்லாஹ் தேர்தல் காலம் என்பதால் ஓரிரு நாட்களில் விடை தெரியாமலா போகப்போகிறது?

0 comments:
Post a Comment