ஒருபால் உறவுக்கார ஜோடிகள் சட்டப்படி மதரீதியாக
திருமணம் செய்துகொள்ள அனுமதியளிக்கின்ற சட்டம் ஐக்கிய ராஜ்ஜியத்தில்
சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
சட்டம் அமலுக்கு வந்த அடுத்த கணமே, இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பல ஒருபால் உறவுக்கார திருமணங்கள் நடந்தேறியிருக்கின்றன.
தன்னுடைய மரபுவாதக் கட்சியில் பலரும் இதனை
எதிர்க்கிறார்கள் என்றாலும் பிரிட்டனுக்கு மிகவும் முக்கியமான ஒரு தருணம்
இது என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கூறியுள்ளார்.
சட்டம் மாறிவிட்டது என்பதை ஆங்கிலிக்கன் திருச்சபை
ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் இனிமேல் இந்த விஷயத்துக்கு எதிராக அது பேசாது
என்றும் அத்திருச்சபையின் ஆன்மிகத் தலைவரான பேராயர் ஜஸ்டின் வெல்பி
கூறியுள்ளார்.
பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணமும் நடந்துள்ளது.
பிரிட்டனைப் பொறுத்தவரை 2005ஆம் ஆண்டு முதலே
இந்நாட்டில் வாழும் ஒருபால் உறவுக்கார ஜோடிகள் சிவில் பார்ட்னர்ஷிப்
எனப்படும் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஜோடிகளாக சேர்ந்து வாழ முடியும்.
திருமணம் செய்துகொண்ட ஜோடிகளுக்குரிய அதே சட்ட அங்கீகாரம் இவர்களுக்கு கிடைத்தது.
ஆனால் மத முறைப்படி திருமணம் செய்யாத்தால், சமூகம் தம்மை இரண்டாம் பட்சமாகவே பார்ப்பதாக இந்த ஜோடிகள் கருதுகின்றனர்.
சமூகக் கட்டமைப்பின் அடிப்படையாக இருக்கின்ற
குடும்பம் என்ற கூறு, ஒருபால் உறவுக்கார திருமணங்களால் சேதமடையும் என்று
ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள பல்வேறு மதக் குழுக்களும் வாதிடுகின்றன.
இந்நிலையில் ஒருபால் உறவுக்கார ஜோடிகளும் மதப்படி
திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு பிரிட்டிஷ்
நாடாளுமன்றம் சென்ற ஆண்டு ஒப்புதல் அளித்த்திருந்தது.
மதக் குழுக்கள் ஆட்சபங்களைத் தெரிவித்திருந்தும், அவற்றை மீறி ஒப்புதல் கிடைத்திருந்தது.
ஒருபால் உறவுக்கார திருமணம் என்பது உலகில் பல
நாடுகளில் இன்னும் சட்டவிரோதமான ஒரு காரியமாகவே இருந்துவருகின்ற ஒரு
சூழலில், பிரிட்டனில் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.
பிரிட்டனில் ஒருபால் உறவுக்காரர்களின்
வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்துள்ளது என்றாலும், இந்த
விவகாரம் தொடர்ந்தும் மாறுபட்ட கருத்துகளை சமூகத்திலிருந்து உண்டாக்கும்
என்பதில் ஐயமில்லை.

0 comments:
Post a Comment