• Latest News

    March 20, 2014

    எங்களைத் திட்டித் தீர்க்கும் துறவறம் பூண்ட ஞானசார தேரரை போன்று கீழ்தரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதில்லை: அமைச்சர் ஹக்கீம்

    கொழும்பு, கொம்பனித்தெருவில் காணப்படும் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வளவு இன ஐக்கியமும், நல்லுறவும் நிலவும் இவ்வாறான பிரதேசத்தில் இனப் பரம்பலை மாற்றியமைப்பதற்கு என்ன தேவையிருக்கிறது?
    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
    மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து கொழும்பு, கொம்பனித்தெரு, சேர்ச் வீதியில் புதன்கிழமை (19) இரவு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை யாரும் விமர்சிக்கலாம். அவ்வாறே அவ்வப்போது நாங்களும் ஏனைய கட்சிகளை விமர்சிக்கின்றோம். ஆனால் நாங்கள் சில வேளைகளில் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசத்தோடு பேசினாலும் எங்களைத் திட்டித் தீர்க்கும் துறவறம் பூண்ட ஞானசார தேரரை போன்று கீழ்தரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதில்லை.
    எனது சகோதர அமைச்சர்கள் சிலர் கூட இந்த பொதுபலசேனா இயக்கத்தை வழிநடத்துபவர்களின் தீவிரப் போக்கைப் பற்றி கண்டித்து வந்திருக்கிறார்கள். அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
    இலங்கையில் இந்த அளவுக்கு வெறுப்பையும், குரோதத்தையும் மக்களின் மனங்களில் விதைக்கும் காரியம் 2012 ஆம் ஆண்டில் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகளின் தோற்றத்தோடு தான் இவ்வளவு மோசமாக அரங்கேறியது.
    இலங்கையில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சமய சகிப்புத் தன்மையற்ற இனவாத செயற்பாடுகள் இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் தகவல் தொழிநுட்பத்தின் அபார வளர்ச்சியின் ஊடாக உடனுக்குடன் உலகெங்கும் சென்றடைகின்றது.
    நாங்கள் எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விதத்தில், அதீத கற்பனையில் சவால் விட்டுக்கொண்டு அரசியல் செய்ய முன்வரவில்லை. மேல் மாகாண ஆட்சியை நாங்கள் கைப்பற்றி விடுவோம் என்று சவால் விடவில்லை. ஒரு காலத்தில் அவ்வாறு அறைகூவல் விடுத்தோம். அது வேறு விடயம்.
    அன்றொருநாள் இப் பிரதேசத்தில் உள்ள ஜாவா லேன் பள்ளிவாசலுக்கு சென்ற போது எனது வயிறு பற்றியெரிந்தது. சுற்றிவர இருந்த குடியிருப்புகள் தரைமட்டமாக்கப்பட்டு அங்கு பள்ளிவாசல் மட்டும் எஞ்சியிருக்கிறது.
    அரசாங்கத்தில் இருந்து கொண்டு நாடு நகர அபிவிருத்தி சட்ட மூலம் என்ற ஒன்றை கொண்டு வந்து தங்களுக்கு தேவையான இடங்களையெல்லாம் புனிதப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்த எத்தனித்தார்கள். அந்த முயற்சியை நாங்கள் முறியடித்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த பிள்ளையானும் எங்களுடன் ஒத்துழைத்தார். கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் அந்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனது. அவ்வாறு நடந்திராவிட்டால் கண்ட கண்ட இடங்களெல்லாம் புனிதப் பிரதேசங்கள் ஆகியிருக்கும்.
    இவ்வாறான ஆபத்துகளையெல்லாம் உள்ளே இருந்துகொண்டு நாங்கள் தடுத்திருக்கிறோம். எங்களது செயலாள்  அரசாங்கத்திற்கு நன்மை இருக்கிறது. அப்படியில்லாவிட்டால் அரசாங்கம் எதேச்சாதிகாரமாக நடந்து கொள்கின்றது என்ற அவப்பெயர் ஏற்பட்டு விடும்.
    இந்த கொம்பனி வீதியில் காணப்படும் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வளவு இன ஐக்கியமும், நல்லுறவும் நிலவும் இவ்வாறான பிரதேசத்தில் இனப் பரம்பலை மாற்றியமைப்பதற்கு என்ன தேவையிருக்கிறது?
    இவற்றைப் பற்றி பேசப்போனால் நாங்கள் தேசத் துரோகிகள் என்கிறார்கள். ஆனால், இவற்றைப் பற்றி முதுகெலும்புடன் பேசக் கூடிய ஒரே அரசியல் கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே ஆகும். அதற்காக நாம் பெருமைப்படுகிறோம். அதனை துணிச்சலுடன் எதிர்கொள்ள எங்களுக்கு மக்களது ஆணை கிடைத்திருப்பதையிட்டு நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.
    மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுத்த சக்தியாக நாங்கள் விளங்குவதன் காரணமாக இவ்வாறான பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறது.
    1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது அரசியல் அமைப்பு சட்டத்தை  மாற்றியமைப்பதற்கு தீவிரவாத சக்திகள் அரசாங்கத்திற்கு துணை போவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அந்த இனவாத சக்திகளின் பணயக் கைதியாக அரசாங்கம் ஆகிவிடாமல் தடுப்பது தான் எங்களது நோக்கமாகும். அதற்கு சமாந்திரமாக நல்லாட்சி ஏற்படுவதற்கான ஒத்துழைப்பை நல்க முடியும் செய்தியை நாங்கள் விடுத்து வருகிறோம்.
    இந்த நாட்டை காப்பாற்றும் முயற்சி மற்றும் இங்கு வாழும் பல்லின மக்களையும் நல்லுறவை பேணி வாழ வைக்கும் முயற்சி என்பவற்றை முன்னோக்கிக் கொண்டு செல்வது தான் எங்களது நோக்கம்.
    நேர்மையை நிலை நாட்டும் சக்தி வாய்ந்த எமது கட்சியை இந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
    இக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி, எம்.பி, எம்.எஸ்.எம். அஸ்லம் எம்.பி, கட்சியின் மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத், பிரதித் தலைவர் யு.ரி.எம். அன்வர், தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம். நஸீர், அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி) ஆகியோர் உட்பட வேட்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
    மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
    ஊடக ஆலோசகர்
          

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எங்களைத் திட்டித் தீர்க்கும் துறவறம் பூண்ட ஞானசார தேரரை போன்று கீழ்தரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதில்லை: அமைச்சர் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top