• Latest News

    March 28, 2014

    ஜெனிவாவில் ஏற்பட்ட தோல்வி மனவேதனையை தருகிறது: கரு ஜயசூரிய

    ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்தமையானது தனக்கும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

    இதனால் இந்த சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்பட போவதில்லை எனவும் இந்த பிரச்சினையில் அரசாங்கத்திற்கு உதவி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
    கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கரு ஜயசூரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    இப்படியான பிரேரணை இதற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட போது நாட்டில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியது.

    ஆனால் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. 17வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியன் மூலம் அரச இயந்திரத்தின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்திற்கு அரசாங்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

    அரசாங்கத்தின் இவ்வாறான ஒருதலைப்பட்சமான நடவடிக்கை காரணமாக அயல் நாடுகளும் ஜனநாயக நாடுகளும் இலங்கை விட்டு தூர விலகியுள்ளன.

    இதனால் அரசாங்கம் தற்போதாவது அடக்குமுறை, தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

    அதுவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல,

    2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இவ்வாறான பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன.

    அரசாங்கம் 2009 ஆம் ஆண்ட ஐ.நா மனித உரிமை பேரவையிடம் எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை குறித்து இம்முறை கொண்டு வரப்பட்ட பிரேரணையில் முதல் பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி அயல் நாடுகளை கைவிட்டு ஆப்பிரிக்கா நாடுகளின் பின்னால் ஓடினார். ஆனால் பிரேரணைக்கு எதிராக இலங்கை ஆதரவாக இரண்டு ஆப்பிரிக்க நாடுகளே வாக்களித்துள்ளன.

    இலங்கைக்கு ஆதரவு வழங்கிய 12 நாடுகள் இலங்கையை போன்ற ஜனநாயக நெருக்கடியை சந்தித்த நாடுகள். எந்த ஜனநாயக நாடும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜெனிவாவில் ஏற்பட்ட தோல்வி மனவேதனையை தருகிறது: கரு ஜயசூரிய Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top