• Latest News

    April 08, 2014

    இந்தோனேசிய அரசு ரூ.10 கோடி தந்ததால் மரண தண்டனையில் இருந்து தப்பிய பெண்

    சவூதி அரேபியாவில் கொலை குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தோனேசியாவை சேர்ந்த பெண், அவரது நாட்டின் அரசு, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டு (கொலைப் பணம்) தொகையாக 1.1 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை தந்ததால் உயிர் பிழைத்தார்.
    இந்தோனேசியாவை சேர்ந்த சதினா பிந்தி ஜுமாதி அஹமத்(41) என்ற பெண் சவுதியில் வீட்டு வேலை செய்வதற்காக சென்றார். கடந்த 2007-ம் ஆண்டு வேலை செய்த வீட்டில் இருந்து பணம் திருடிய குற்றத்துக்காக வீட்டின் எஜமானி அவரை தாக்கினார்.
    தற்காப்புக்காக அவர் எதிர் தாக்குதல் நடத்தியதில் வீட்டின் எஜமானி எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சதினா பிந்தி ஜுமாதி அஹமத்தை கைது செய்த போலீசார், கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். கடந்த 2011-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    இந்த தண்டனையை ரத்து செய்வதற்காக சதினா பிந்தி ஜுமாதி அஹமத்தின் உறவினர்கள் பலியானவரின் குடும்பத்தாருடன் சமரசம் பேசினர். அரபு நாடுகளின் சட்டப்படி, கொலையானவரின் குடும்பத்துக்கு இழப்பீடு (கொலைப் பணம்) வழங்க தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
    முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 1 கோடி ரியால்களை கேட்டு பிடிவாதம் பிடித்த பலியானவரின் குடும்பத்தார், பின்னர் படிப்படியாக 1.1 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை பெற்றுக் கொண்டு மன்னிப்பு வழங்க முன்வந்தனர். இந்த தொகையை ஏற்பாடு செய்ய சவுதியில் வேலை செய்யும் இந்தோனேசியாவை சேர்ந்த சிலர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
    கொலையானவரின் குடும்பத்தாருடன் கொலையாளி சமரசம் செய்து கொள்வதற்கான கெடு தேதி இம்மாதம் 3-ம் தேதிக்குள் முடிவடைவதாக இருந்த நிலையில், தங்களின் உறவினரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றுமாறு அந்த பெண்ணின் குடும்பத்தார் இந்தோனேசிய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
    இதனையேற்று, பலியானவரின் குடும்பத்துக்கு 1.1 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை (இந்திய மதிப்புக்கு 9 கோடியே 96 லட்சம் ரூபாய்) வழங்குவதாக சவூதி அரசுக்கு இந்தோனேசிய அரசு தெரிவித்தது. இதனையடுத்து, சதினா பிந்தி ஜுமாதி அஹமத் விரைவில் விடுதலையாகி தாய்நாடு திரும்ப உள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்தோனேசிய அரசு ரூ.10 கோடி தந்ததால் மரண தண்டனையில் இருந்து தப்பிய பெண் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top