• Latest News

    April 15, 2014

    தமிழ்நாட்டில் மோடி அலை வீசுகிறதா?

    இந்தியா சந்திக்கும் இந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் வியூகம் வித்தியாசமானது.
    பிரதமர் பதவிக்கான வேட்பாளராக குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடியை தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறி்வித்திருக்கும் பாரதிய ஜனதாக் கட்சி, இந்தியா முழுவதுமே மோடியின் அலை வீசுவதாக தொடர்ந்து கூறிவருகிறது.
    இந்திய ஊடகங்களி்லும் இந்த விவகாரம் தொடர்ந்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
    எல்லாத் தலைவர்களுமே மோடி அலை குறித்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

    இந்த நிலையில் இதுபற்றிப் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என பெரு நகரம், சிறு நகரங்கள், முதல் முறை வாக்காளர்கள் என பல தரப்பினரிடமும் கேட்டபோது கிடைத்த பதில்கள் பல்வேறுவிதமாக இருந்தன.
    கோயம்புத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணன் வடஇந்தியாவில் அப்படி ஒரு அலை இருக்கலாம் என்றாலும் தமிழகத்தில் அப்படி அலை ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார்.
    மதுரையைச் சேர்ந்த அசோக்கும் இதே கருத்தையே எதிரொலிக்கிறார். ஆனால், அது மோடிக்கான அலையா அல்லது காங்கிரஸிற்கான எதிர்ப்பலையா என்பதைக் கவனிக்க வேண்டும் என்கிறார் இவர்.
    இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கோவையின் உக்கடம் போன்ற பகுதிகளில் மோடிக்கு கடும் எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான விஜயன் என்பவர் மோடி அலை என்பது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்கிறார்.
    மதுரையைச் சேர்ந்த குடும்பத் தலைவியான உஷா, நாட்டின் நிர்வாகம் மோசமாக இருக்கும் நிலையில் மோடிக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என்கிறார்.
    முதன் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களைப் பொறுத்தவரை, தற்போதய மத்திய அரசின் மீதான விமர்சனமும் குஜராத்தில் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படும் வளர்ச்சியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
    ஆனால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரான டி ராஜா, தனி நபர்களை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்பது இந்திய நாடாளுமன்ற அரசியலுக்கே எதிரானது என்கிறார். இது ஒன்றும் அதிபர் தேர்தலைப் போன்றதல்ல என்றும் கொள்கைகளையும் வேலைத் திட்டத்தையும் வைத்துமே தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்கிறார் அவர்.
    மூத்த பத்திரிகையாளரான பகவான் சிங்கிடம் இது குறித்துப் பேசியபோது, திராவிடக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தமிழகத்தில் மோடியின் பெயர் அறியப்பட்டிருப்பதே குறிப்பிடத்தக்க விஷயம் என்கிறார். மோடியின் பெயர் தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டிருக்கும் நிலையில், அது அ.தி.மு.கவின் வாக்கு வங்கியைத்தான் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார் பகவான் சிங். நகர்ப்புறங்களில் இருவரது வாக்கு வங்கியும் ஒன்றே என்கிறார் அவர்.
    ஆக, மோடி அலை தமிழகத்தில் வீசுகிறதா, அது வாக்குகளாக மாறி பா.ஜ.க கூட்டணிக்கு இடங்களைப் பெற்றுத்தருமா என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, மோடியின் பெயர் பரவலாக அறியப்பட்டிருக்கிறது என்பதே குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.
    BBC -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழ்நாட்டில் மோடி அலை வீசுகிறதா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top