இலங்கைக்கும், வியட்நாமிற்கும் இடையே சிறைக்கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் வியட்நாம் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பேராசிரியர் கலாநிதி ஜெனரல் டிரான் டாய் குவாங்க், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் திங்கள் கிழமை (07) முற்பகல் கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் கைச்சாத்திட்டனர்.
நீதியமைச்சர் ஹக்கீமுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வியட்நாம் அல்லது இலங்கையைச் சேர்ந்த கைதிகள் தமது சொந்த நாட்டில் சிறைவாசம் அனுபவிக்கும் வாய்ப்பினை பெறுவதற்கு வழிவகுக்கப்படும்.
முன்னர் நீதியமைச்சர் ஹக்கீம் வியட்நாமுக்கு விஜயம் செய்திருந்த போதும், பின்னர் சட்ட மா அதிபர் பாலித பெர்ணான்டோ தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு இவ்வாண்டு மார்ச் மாதம் அந் நாட்டுக்குச் சென்றிருந்த போதும், இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது.
இலங்கையின் 1995 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க குற்றவாளிகளை இடமாற்றும் சட்டத்தில் உள்ளடங்கியுள்ள சரத்துக்களின் படி இலங்கை நீதிமன்றமொன்றில் தண்டனை விதிக்கப்படும் வேறொரு நாட்டைச் சேர்ந்த நபர் தாம் பிரஜையென உரிமை கொண்டாடும் நாட்டில் சிறைவாசம் அனுபவிப்பதற்கான வழிவகைகள் உள்ளன. அவ்வாறே இலங்கைப் பிரஜையொருவருக்கு வேறொரு குறிப்பிட்ட நாட்டில் குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அந்த நபர் அவரது சிறைக் வாசத்தின் எஞ்சிய காலப்பகுதியை இங்கு நிறைவு செய்யவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் இலங்கைக்கும் உடன்படிக்கை செய்துகொள்ளப்படும் மற்றைய நாட்டிற்கும் பொருந்துவதாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
நீதியமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா, மேலதிகச் செயலாளர் குமார் ஏக்கரத்தன, மேலதிகச் செயலாளர் சட்டம் சாமினி விஜேதுங்க, நீதி அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இந்தக் கைச்சாத்திடும் நிகழ்வில் பங்குபற்றினர்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்




0 comments:
Post a Comment