யுத்தம் ஓய்ந்து, அமைதி நிலவும் சூழ்நிலையில் முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பகுதிக்குட்பட்ட பெருமுறிப்பு சவாரத்துவெளி, காதர் மீரான்குளம், தண்ணிமுறிப்பு குடியேற்றக்காணிகளை மீண்டும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதில் 600 வருடங்கள் பழமை வாய்ந்ததும், இலங்கை வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததுமான, முஸ்லிம்களுக்கே சொந்தமான காதர் மீரான் குளம் அந்த வரைபடத்தில் இருந்து முற்றாக நீக்கப்பட்டு நிக்கவௌ 1, நிக்கவௌ 2 என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெரும்பான்மையின இனத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டிருப்பதை வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத்தீவு மு.கா வேட்பாளர் தந்தை ரஹீம் உட்பட அப் பிரதேச முக்கியஸ்தர்கள் அமைச்சர் ஹக்கீமிடம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர்.
பிரஸ்தாப தண்ணிமுறிப்பு குடியேற்றத்திற்கென 1976 ஆம் ஆண்டு உட்கட்ட அமைப்புக்களும் உட்கட்ட வசதிகளுமான 5 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட முஃதண்ணிமுறிப்பு அ.தா.கா பாடசாலை, உப தபால் அலுவலகம், கோவில், பள்ளிவாசல், முல்லைத்தீவு நகரிலிருந்து தண்ணிமுறிப்பு குளம் வரைக்குமான இ.போ.ச போக்குவரத்துச் சேவை என்பன அன்றைய அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் போது அண்மையில் அமைந்துள்ள சிங்களக் கிராமங்களில் வசித்து வந்த மக்களை பாதுகாப்பதற்காக அங்கிருந்த இராணுவத்தினர் இத் தண்ணிமுறிப்பு குடியேற்றத் திட்டத்தில் வசித்த தமிழர்கள் சிலரை சுட்டுக் கொன்றமையினாலும், முஸ்லிம்களை சிலரை சுட்டுக் காயப்படுத்தியதாலும் அச்சத்தின் காரணமாக இக் கிராமத்தில் வசித்த தமிழ் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து முள்ளியவளை தண்ணீர் ஊற்று கிராமத்தில் வசிக்க நேர்ந்ததாகவும் தந்தை ரஹீம் அமைச்சரிடம் கூறினார்.
1990 ஆம் ஆண்டு வடக்கிலுள்ள முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட போது, இக் குடியேற்றத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் தொடர்ந்து 24 வருடங்களாக புத்தளம் பிரதேசத்தில் அகதி முகாம்களில் காலம் கடத்தி 2010 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் வந்து மீள்குடியேறலாயினர்.
சுமார் 33 வருடங்களின் பின்னர் இத் தண்ணிமுறிப்பு மீள்குடியேற்ற கிராமம் முற்றாகக் கைவிடப்பட்டிருந்த நிலையில் பற்றைக் காடுகளாக மாறியிருந்தது. இந்த விடயத்தை முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் தந்தை ரஹீம் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, பாரம்பரிய காணி உரிமையாளர்களுக்கு அக் காணிகளை துப்புரவு செய்து அங்கு வீடுகளை அமைத்து, குடியேறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
இதனை அமைச்சர் ஹக்கீம், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிரி, வட மாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
ஊடக ஆலோசகர்

0 comments:
Post a Comment