• Latest News

    April 11, 2014

    முஸ்லிம் அரசியல் சோரம் போய் விட்டது : முஸ்லிம் மக்கள் கட்சி

     எஸ்.அஷ்ரப்கான்;
    வடமாகாண முஸ்லிம்களின் பிரதிநிதியும், முஸ்லிம் காங்கிரசும் அரசுக்கு பலமாக முட்டுக்கொடுத்தும் மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற பிரச்சினை தீரவில்லை என்பதன் மூலம் முஸ்லிம் அரசியல் சோரம் போய் விட்டது என்பதையே  காட்டுகிறது என்று முஸ்லிம் மக்கள் கட்சி  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி மேலும் தெரிவித்துள்ளதாவது,
    மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பொது பல சேனா தலையிடுகிறது என்றால் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரும்பாத அரசு இந்த பலசேனாவை களமிறக்கி காரியம் சாதிக்கிறது என்பதைக்கூட புரியாத அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளுமே முஸ்லிம்கள் மத்தியில் உள்ளமை கவலைக்குரியதாகும்.

    யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் தாண்டியும் மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற பிரச்சினை இன்னமும் தீரவில்லை என்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவி மோகத்துக்கான சரணாகதி அரசியலே காரணமாகும். இத்தனை முஸ்லிம்கள் அரசுக்கு முட்டுக்கொடுத்தும் அப்பாவி மன்னார் முஸ்லிம்கள் இன்னமும் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்றால் அதற்குரிய முழு பொறுப்பையும் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களும், அவர்களுக்கு வாக்குப்போடும் முஸ்லிம் மக்களுமே ஏற்க வேண்டும்.

    மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பொது பல சேனா தலையிடுகிறது என்றால் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரும்பாத அரசு இந்த பலசேனாவை களமிறக்கி காரியம் சாதிக்கிறது என்பதைக்கூட புரியாத அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளுமே முஸ்லிம்கள் மத்தியில் உள்ளமை கவலைக்குரியதாகும். இந்த நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்த ஜனாதிபதிக்கு மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் வாழ்விடமின்றி தவிக்கிறார்கள் என்பதும், அவர்கள் அரசு காணி வழங்காமை காரணமாகவே அங்கமிங்கும் குடிசைகள் அமைத்துக்கொண்டு தவிக்கிறார்கள் என்பதுவும் தெரியாத ஒருவர் என்று நினைத்துக்கொண்டு முஸ்லிம் அமைப்புக்கள் கடிதம் எழுதி தம்மையும், முஸ்லிம் சமூகத்தையும் ஏமாற்றும் அப்பாவித்தனத்தையே காண்கிறோம்.

    எம்மைப் பொறுத்த வரை அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு உரிமைகளை பேச முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அரசாங்கம் ஒரு சமாதான தூதுவர் பதவி தந்தாலோ அல்லது இணைப்பாளர் பதவி தந்தாலோ அதனை பெரியதொரு சாதனையாக நினைப்பதையே ஹக்கீம் காங்கிரசும், ரிசாத் காங்கிரசும் அதாவுள்ளா காங்கிரசும் கருதுகின்றமையாலேயே அரசு இவர்களுக்கு மிட்டாயை கொடுத்து கோவணத்தையும் உருவிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சோரம் போன அரசியல் மூலம் அரசிடமிருந்து  பிச்சையைத்தான் பெற முடியும். அதைக்கூட அரசு ஒரு கையால் வழங்குவது போல் காட்டிவிட்டு இன்னொரு கையால் பொதுபல சேனாவை பயன்படுத்தி பறித்து வருகிறது.

    இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் அரசியல் வழிப்புணர்வு பெற வேண்டும். அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் கட்சிகளை பகிரங்கமாக நிராகரிப்பதோடு இத்தகையவர்கள் தமது பகுதிகளுக்கு வரும் போது அவர்களின் சோரம் போன அரசியலை எதிர்க்குமுகமாக கறுப்புக்கொடிகளை காட்டுவதன் மூலம் தமது ஜனநாயக உரிமைகளை பயன்படுத்த முன்வரவேண்டும்.

    அதே போல்; அரசின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளையும், கையாலாக முஸ்லிம் தலைமைகளையும் எதிர்க்கும் மாற்று முஸ்லிம் கட்சிகளை அழைத்து  மக்கள் தமது பகுதிகளில் கூட்டங்களை நடத்த முன்வர வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் எங்கே தங்களது முகவரிகளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்திலாவது முஸ்லிம் அமைச்சர்கள் சமூகத்துக்காக பாடு பட முன்வருவார்கள். இதற்கு முஸ்லிம் பொது மக்கள் முன்வராத வரை எமது உரிமைகளை பெறுவோமோ இல்லையோ இருப்பவை அனைத்தையும் இழக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறோம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் அரசியல் சோரம் போய் விட்டது : முஸ்லிம் மக்கள் கட்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top