அதீக்;
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் கடந்த 19 ஆம் திகதி அலுவலகத்திலிருந்து எடுத்துச் சென்ற, பிரதேச சபைக்குச் சொந்தமான PB 3175 எனும் இலக்கத்தையுடைய 'பிக்அப்' ரக வாகனம் - இதுவரை அலுவலகம் திரும்பாமைக்கான காரணங்களைக் கண்டறியும் நோக்குடன், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் ஆய்வு உத்தியோகத்தர்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு நேற்று செய்வாய்கிழமை விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டதோடு, ஆவணங்கள் சிலவற்றினையும் கைப்பற்றிச் சென்றுள்னர்.
ஆயினும், மேற்படி வாகனத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் கொழும்புக்கு பயணித்திருந்தார் என அறிய முடிகிறது. இந்தியாவுக்கு தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொள்ளும் நோக்குடன் விமான நிலையம் செல்வதற்காகவே, பிரதேச சபை வாகனத்தின் மூலம் - தவிசாளர் கொழும்புக்குப் பயணித்ததாக தெரிய வருகிறது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் இந்தியா சென்றுள்ள நிலையில், அவர் எடுத்துச் சென்ற வாகனம் - இதுவரை அலுவலகம் திரும்பவில்லை. இதேவேளை, வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதியும் அலுவலகத்துக்குச் சமூகமளிக்கவில்லை என்று பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார்.
அலுவலக வாகனமொன்றினையும், அதற்குரிய எரிபொருளினையும் பிரதேச சபைத் தவிசாளரொருவர் - இவ்வாறு, தனது தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றமை சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும். இதேவேளை, தவிசாளரொருவர் தமது நிருவாக மாவட்டத்துக்கு வெளியே, அலுவலக வாகனமொன்றினைக் கொண்டு செல்வதாயின், மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் அனுமதியினைப் பெற்றுக் கொள்தல் அவசியமாகும்.
இருந்தபோதிலும், குறித்த வாகனத்தினை, இவ்வாறு கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்கான அனுமதிகள் எவற்றினையும், அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர், தன்னிடமிருந்து பெறவில்லை என்பதை அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத் உறுதிப்படுத்தினார்.
இது இவ்வாறிருக்க, பிரதேச சபைத் தவிசாளரொருவர் வெளிநாடொன்றுக்குப் பயணிப்பதாயின் அதற்கான முன்கூட்டிய அனுமதியினை மாகாண ஆளுநரிடமிருந்து பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும். அந்தவகையில், 'இந்தியா செல்வதற்கான அனுமதியை அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் பெற்றிருந்தாரா' என அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத்திடம் நாம் வினவியபோது,
இவ்வாறானதொரு நிலையிலேயே, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் பணிப்பின் பேரில், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் உத்தரவுக்கமைவாக, மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினைச் சேர்ந்த ஆய்வு உத்தியோகத்தர்கள் இருவர் -நேற்று அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குச் சென்று, அங்கு விசாரணைகளை மேற்கொண்டதோடு, ஆவணங்கள் சிலவற்றினையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

0 comments:
Post a Comment