• Latest News

    June 18, 2014

    உயிருள்ளவரை என் சமூகத்துக்காக முன்னிற்பேன் – ஹரீஸ் எம்பி

    ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் ;
    அளுத்கமை சம்பவமானது தற்செயலாக இடம்பெற்றதன்றி திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட வெறியாட்டமே என திகாமடுல்ல மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

    குறித்த சம்பவமான அளுத்கமை மற்றும் பேருவளை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அவர்களது இருப்புக்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலன்றி முழு நாட்டு முஸ்லிம்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே தான் பார்ப்பதாகவும் ஹரீஸ் எம்பி விடுத்துள்ள விஷேட அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
    ஹரீஸ் எம்பி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

    அளுத்கமை முஸ்லிம்கள் மீது இனவெறிபிடித்த காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரத்தை நேரடியாகச் சென்று பார்த்தபோது என் மனம் கொதிப்படைந்தது மட்டுமன்றி முஸ்லிம் உம்மத்தில் அவல நிலையை நினைத்து என்னை அறியாமலேயே கண்ணீரும் சிந்திவிட்டேன்.

    எந்தளவுக்கு மிகவும் கேவலமாக இறங்கி முஸ்லிம்களையும் அவர்களது வர்த்தகத்தையும் அழிக்க முடியுமோ அந்தளவுக்கு இனவெறியர்கள் கீழிறங்கியிருப்பதை என்னால் அங்கு உணர முடிந்தது.

    பௌத்த தேரர் மீது முஸ்லிம் இளைஞர் தாக்குதல் நடத்தியிருப்பது உண்மையென்றால் அதற்குரிய நடவடிக்கையெடுக்க பொலிஸார் இருக்கின்ற வேளையில் அந்த ஜனநாயக வழிமுறையை பின்பற்றாது இனவெறியர்கள் நடந்து கொண்டிருப்பது உண்மையில் இச்சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேறியிருக்கிறது என்பதை புலப்படுத்துகின்றது.

    இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து முஸ்லிம்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட இனவாதம் இன்று அளுத்கமை சம்பவத்துடன் அதி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

    ஹலால், ஹபாயா என்று பள்ளிகள் மீதான தாக்குதல், இறைச்சிக் கடைகள் மீதான தாக்குதல் என்று தொடங்கிய இனவாதிகளின் அராஜகம் மூன்று அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தும் நூற்றுக்கு மேற்பட்டோரை காயப்படுத்தியும் பத்துக்கு மேற்பட்ட கடைகளையும், வீடுகளையும் எரித்தும் கொல்லையிட்டும் என உச்சத்தை அடைந்துள்ளது.

    இற்றைவரையான முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சம்பவங்களும் அனைத்தும் பொலிஸார் பார்த்தக் கொண்டிருக்கும்போதே இடம்பெற்றுள்ளது. எனினும் இவர்களில் ஒருவரேனும் இதுவரை கைதுசெய்யப்படாமலிருப்பது முஸ்லிம்கள் அரசு மீது சந்தேகம் கொள்ள வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.

     நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸாரும் இராணுவத்தினரும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமன்றி இனவாதிகளிடமிருந்து தப்பியோடி இராணுவத்தினரிடம் அடைக்களம் தேடிய முஸ்லிம்கள் தாக்கப்பட்ட கொடூர சம்பவமும் அளுத்கமையில் அரங்கேரியிருக்கின்றது.

     அளுத்கமையைப் பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்கு முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளதை என்னால் உறுதியாக கூறக்கூடியதாக உள்ளது.

     அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவத்தை வெறுமனே அளுத்கமைக்கு மட்டுமே உரிய சம்பவமாக நான் பார்க்க விரும்பவில்லை. மாறாக நாடு பூராகவுமுள்ள முஸ்லிம்களுக்கு அவர்களது இருப்புக்கும் அவர்களது வர்த்தகத்துக்கும் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலாகவே நான் பார்க்கின்றேன்.

     அரசின் முக்கிய பங்காளிக்கட்சியாக உள்ள எமது முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் இந்த விடயத்தில் ஒரு தெளிவான முடிவை எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது.

     நாட்டிலுள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் அளுத்கமை விடயத்திலும் இதற்கு முன்னர் நடந்த கொடூர சம்பவங்கள் விடயத்திலும் மிகக் கடுமையான அழுத்தத்தையும் எச்சரிக்கையையும் இந்த அரசுக்குக் கொடுக்க நாட்கள் எண்ணிக் கொண்டிருப்பை பொறுப்புடன் இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

    அளுத்கமை கொடூர சம்பவத்தை அடுத்து பிரதமர் தலைமையில் அரசின் அவசர கூட்டமொன்று களுத்துறையில் இடம்பெற்றது. எனினும் கூட்டம் இடம்பெற்ற அந்த இரவே வெலிப்பென்னை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் பதுளையில் பொதுபலசேனாவினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டு அங்கு ஒரு கடை தாக்கப்பட்டும் கடை உரிமையாளர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுமுள்ளது. இதேநிலை துந்துவை என்ற பகுதியிலும் இடம்பெற்றுள்ளது.

    இந்தநிலையைப் பார்க்கும் போது 1915ம் ஆண்டு கம்பளையில் வேண்டுமென்று திட்டமிட்டு சிங்கள இன வெறியாளர்களால் எவ்வாறு சிங்கள – முஸ்லிம் கலவரம் தோற்றுவிக்கப்பட்டதோ அதேபோன்று சரியாக 100 வருடங்களின் பின்னர் அவ்வாறானதோர் சிங்கள – முஸ்லிம் கலவரத்தைத் தூண்ட இன்று அளுத்கமையில் அடித்தளமிடப்பட்டுள்ளதா? என்ற நியாயமான கேள்வி எம்முன் எழுகின்றது.

    எனவே முஸ்லிம் இளைஞர்கள் விழிப்பாக இருங்கள். நாட்டிலுள்ள முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களான உங்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.

     எமது சமூகத்தின் மீதான இனவெறியர்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஜனநாயக முறையில் தயாராகுங்கள். சமூக வலையத்தளங்களைப் பயன்படுத்தி எமக்கெதிரான அட்டூழியங்களை அராஜகங்களை சர்வதேசமயப்படுத்துங்கள். ஆங்கிலம்இ அரபு மொழி தெரிந்தவர்கள் இந்த விடயத்தில் கூடிய அக்கறை செலுத்துங்கள்.

    மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடு பூராணவும் ஜனநாயக வழிமுறைகளுக்கமைய அமைதி ஊர்வலங்களை நடத்துங்கள். கட்சி பேதங்களைத் துறந்து ஒன்றுபடுங்கள். உங்களுக்கு என்றும் ஆதரவளிக்க என் உயிருள்ளவரை முன்னிற்பேன் என்றும் ஹரீஸ் எம்பி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உயிருள்ளவரை என் சமூகத்துக்காக முன்னிற்பேன் – ஹரீஸ் எம்பி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top