• Latest News

    July 19, 2014

    படுத்திருக்கும் யானை பலமற்ற யானை என்று தப்புக்கணக்குப் போடப்படாது : முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

    அரசாங்க அதிகாரிகள் சிலர் நரிவேலை செய்து வருகின்றார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு வருகின்றோம். ஆவன செய்வோம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    சாவகச்சேரி நகராட்சி மன்ற, பொன்விழா நகர மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போவேர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரை,

    சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்பதில் மனமகிழ்ச்சி அடைகின்றேன். இம் மண்டபமானது உள்ளூராட்சி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. வேலைகளில் மாற்றம் ஏற்பட்டதால் கட்டிடம் முழுமை பெறவில்லை. இது பற்றி ஜனாதிபதிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் சாவகச்சேரி நகராட்சி மன்ற தவிசாளரால் தெரிவிக்கப்பட்டபோது, கட்டிட வேலையை முழுமை பெறச் செய்ய ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படும் என்று எல்லோர் முன்னிலையிலும் ஜனாதிபதி கூறிவிட்டு இரு வாரங்களின் பின்னர் கையை விரித்து விட்டார்.
    எனக்கு இவ்வருடம் ஜனவரி மாதம் 2ந் திகதியின் பின்னர் நேர்ந்த அதேகதிதான் உங்கள் உள்ளூராட்சி மன்றத்திற்கும் நடந்திருப்பதை அவதானிக்கின்றேன். அந்த நேரத்திற்குச் சுற்றில் இருப்போர் மனங் குளிர ஒன்றைக் கூறுவது பின்னர் அதற்கு நேர்மாறாக நடப்பது ஜனாதிபதிக்குக் கைவந்த கலையாகியுள்ளது. எனக்குத் 'தருகிறேன்' என்று ஜனவரி 2ந் திகதி கூறியவற்றில் ஒன்றை, அதாவது பிரதம செயலாளரை உடனே மாற்றுகின்றேன் என்பதைத், தொடர்ந்து ஜனவரி 19ந் திகதி வரையில் அதாவது தெல்லிப்பளை புற்றுநோய்க் கட்டிடத் திறப்பு விழா மட்டும் 'இந்தா தருகின்றேன், அந்தா தருகின்றேன்' என்று கூறியிருந்தார். கூட்டம் முடிந்ததும் நொண்டிச் சாட்டொன்றைக் கூறி 'முடியாமைக்கு வருந்துகிறேன்' என்றார். அதாவது எங்கள் பிரதம செயலாளரை மாற்றினால் அவரின் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்.

    ஆகவே உடனே அதைச் செய்ய முடியாது என்றார். நான் கூட்டத்தை முடித்து வெளியில் வந்ததுந்தான் தெரிந்து கொண்டேன் எங்கள் மாகாணசபை பிரதம செயலாளர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட உடனேயே அவர் பொது நிர்வாக சேவை தொழிற்சங்கத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து இருக்கக் கூடிய தகைமையை இழந்து விட்டார் என்று. எனவே எங்கள் பிரதம செயலாளர் சார்பில் எவருமே தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிந்து கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் உண்மைக்குப் புறம்பான விதத்தில் எனக்குப் பதில் அளித்தார். அதே போல்த்தான் உங்களுக்கும் நடந்திருக்கின்றது. 'தருவேன்' என்று தரணி கேட்கக் கூறிவிட்டு 'தரமாட்டேன்' என்று இரு கிழமைகளில் ஆளை விட்டுக் கூறுவது அவரின் ஒரு குணாதிசயத்தை வெளிக்காட்டுகின்றது. 'தரமாட்டேன்' என்று எங்கள் பிரதம செயலாளர் ஊடாகத் தான் ஜனாதிபதி தெரிவித்தார். அதாவது வடமாகாண பிரதம செயலாளர் வடமாகாணத்தின் மீது கரிசனை கொள்ளாது ஜனாதிபதியின் கருத்தை வெளியிடும் கருவியாக அங்கு மாறியிருந்தார். அவர் அவ்வாறு கருவியாகக் கடமையாற்றுவதால்த்தான் எமது வேலைகள் தடைபெறுகின்றன் தாமதம் அடைகின்றன் தடுக்கப்படுகின்றன.

    எது எவ்வாறிருப்பினும் எமது பிரதம செயலாளர் ஜனாதிபதி தருவதாகக் கூறிய தொகையைத் தரமுடியாதென்று அறிவித்ததும் உங்கள் நகராட்சி மன்றம் அதனால்த் துவண்டுவிடவில்லை. அதன் பின்னர் நடைபெற்ற நகராட்சி மன்ற சபைக் கூட்டத்தில் சபை நிதியில் இருந்து மிகுதி வேலைகளை கட்டம் கட்டமாகச் செய்வதாகத் தீர்மானித்தீர்கள். அதன் பெறுபேறாக வைப்பு நிதியில் இருந்து 20 மில்லியன் ரூபா மீளப் பெறப்பட்டு தற்போது வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது இந்தக் கட்டிடம்.

    அதே போல் சபை நிதியில் இருந்து உள்ளூரில் 20 வீதிகள் வரை புனரமைக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றேன். அதைவிட நெல்சிப் திட்டத்தில் 13 வீதிகளும் CARE திட்டத்தில் 13 வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி மன்ற ஆதனவரிப் பகுதி கணனி மயப்படுத்தப் பட்டமை சம்பந்தமாக எமக்கு அண்மையில் உள்ளூராட்சி மன்றங்கள் பற்றியதான கருத்தரங்கம் ஒன்றில் குறிப்பிடப்பட்டது. எனவே தருவதாகக் கூறிய பணம் கிடைக்கவில்லையே என்று உங்கள் நகராட்சி துவண்டு விடாமல் செயற்பட்டு வருவது போல்த்தான் எங்கள் வடமாகாணசபையும் செயற்பட்டு வருகின்றது. நாங்கள் மாற்றார் கையை நம்பி இராமல் எம்கையே எமக்குதவி என்றவாறு எமது காரியங்களைச் சாதித்துச் செல்வதே இன்றைய காலகட்டத்தில் உசிதமென எமக்குத் தெரிகின்றது.

    இப்பொழுது இன்னுமொரு நாடகத்தை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. மாகாணசபை தானாக ஏதேனும் ஒரு செயற் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்த எத்தனித்தால் உடனே அரசசார்புடைய அரசியல்வாதிகள் அதே இடத்திற்குச் சில தினங்களுக்கு முன்னர் போய்த் தாங்களே அச்செயற்திட்டத்திற்குக் காரண கர்த்தாக்கள் என்று மக்களுக்குக் கூறி வருகின்றார்கள். மாவை கந்தசாமி ஆலய புனருத்தாரணம் பற்றி நாங்கள் உரிய அமைச்சருடன் கதைத்திருக்க நேற்றைய தினம் சிலர் கோயிலுக்குப் போய் உதவிகள் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்கள். எமது மாகாண சபையினர் இதற்காகப் போட்டா போட்டியில் இறங்கி அரசியல் முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் மக்கள் நலன் கருதி எதனையும் அனுசரித்துச் சென்று வருகின்றார்கள். இத்தனை பெருந் தெருக்களைப் போட்ட அரசின் சார்பான அரசியல் கட்சிகளை எதிர்கொண்டு எமக்கு வாக்களித்த எமது மக்களுக்குத் தெரியாதா இக்கட்சிகளினதும் அரசாங்கத்தினதும் திருகு தாளங்கள்! ஆனால் சுற்றி நிற்கும் நரிக் கூட்டங்கள். படுத்திருக்கும் யானை பலமற்ற யானை என்று தப்புக்கணக்குப் போடப்படாது. அண்மையில் இன்னுமொரு ஒரு நடவடிக்கை நடந்தது. அதே ஆளுநரை மீண்டும் நியமித்து விட்டார்கள். ஆகவே யானை படுத்தது படுத்தே விட்டது. இனி எழ மாட்டாது என்று எக்காளம் ஊதின தெற்கில் உள்ள பத்திரிகைகள். யானையைப் படுக்க வைக்க அத்தனை மும்முரம் தெற்குப் பத்திரிகைகளுக்கு! என்னிடம் கேட்ட பத்திரிகைகள் யாவற்றிற்கும் நான் கொடுத்த பதில் ஒன்றுதான். 'தான்தோன்றித்தனமாகத் தப்புக்கணக்குப் போடாதீர்கள். எங்கள் பணி சிறப்பாகத் தொடர்ந்து கொண்டு போகின்றது. சில்லறைக் கனவுகளில் திளைக்காதீர்கள்' என்றேன்.

    இன்று எங்கள் பிரதிநிதிகள் மக்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டு மக்கள் சேவையாற்றி வருகின்றனர். பலவிதமான சவால்களையும் எதிர் கொண்டு முன்நோக்கி நடந்து செல்கின்றார்கள். ஆளணிபற்றாக்குறை, அறிவு செறிந்த, அனுபவம் நிறைந்த அலுவலர் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை ஒருபுறம், இராணுவ உள்ளீடல்களும் தலையீடுகளும் மறுபுறம், அதிகாரத்த துஷ்பிரயோகங்கள் இன்னொரு புறம், கரவான குடியேற்றங்கள் வேறொருபுறம், 13வது திருத்தச் சட்டத்தின் கையாலாகாத நிலை மேலும் ஒரு புறம் - இவ்வாறு பல சவால்களின் மத்தியிலும் எமது வடமாகாணசபை வெற்றிநடைபோட்டுச் செல்வதைப் பார்க்கச் சகிக்காதவர்கள் 'என்ன செய்தீர்கள்?' என்று கேட்கின்றார்கள். எமது சேவையைப் பெற்ற எங்கள் சகோதர சகோதரிமாரிடம் போய்க் கேளுங்கள் இந்தக் கேள்வியை. செருப்பெடுத்து அடிப்பார்கள்.

    பிறநாட்டார் நிதியத்தில் பாரிய செயற்திட்டங்களை உருவாக்கி எம்மைக் கடனாளிகளாக ஆக்கி அவற்றின் நிழலில் இருந்து கொண்டு தமது பைகளையும் நிரப்பிக் கொண்டு பத்திரிகைகளுக்கும் அறிக்கை கொடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படவில்லை என்பதை எம்மிடம் கேள்வி கேட்பவர்களுக்குக் கூறி வைக்கின்றோம். தொடர்ந்து எங்கள் சேவைகள் மக்களுக்குக் கிடைக்கும் என்பதை இத்தால் கூறி வைக்கின்றேன். ஆனால் இவை 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் எமக்குக் கிடைத்த அனுசரணைகள் என்று கூற முடியாது. 13வது திருத்தச் சட்டத் தேர்தல் எம்மை அதிகாரத்தில் ஆழ்த்தியது. எமது அந்தப் பொது அதிகாரத்தை முன்வைத்தே நாம் எமது சேவைகளை ஆற்றி வருகின்றோம். நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் 13வது திருத்தச் சட்டம் ஒரு தோல்வி என்றே கூற வேண்டும். உரிய தருணத்தில் எங்கள் சாதனைகள் வெளிவருவன. நாம் சாதிப்பனவற்றைச் சரியச் செய்ய சதி செய்யும் எமது எதிர்க்கட்சிச் சகோதரர்களுக்கு நாங்கள் எமது சாதனைகளைக் கூறவேண்டிய அவசியம் கிடையாது!.

    ஆனால் எவ்வாறு எம்மை ஏமாற்றிக் காரியங்களை நடத்த அரசாங்கத்தில் உள்ளோர் நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதை ஊரறியச் செய்ய ஒரு உதாரணம் கூறுகின்றேன். அண்மையில் வடமாகாண தேவைகள் பற்றி, போரில் இருந்து வெளிவந்த எங்கள் மக்களின் தனித்துவமான தேவைப்பாடுகள் பற்றி, அவற்றை எதிர் கொள்ளும் உபாயங்கள் பற்றி ஒரு ஆய்வு நடாத்தி ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் கேட்டிருந்தேன். முழுமையாக ஒத்துழைப்பது போலத் தோன்றியது. ஆனால் நடந்தது என்ன? எம்மைப் புறக்கணித்து விட்டு அதே ஆய்வினைச் செய்யப் போவதாக அரசாங்க அமைச்சர் ஒருவருடன் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டார். அதே அமைச்சர் தான் தம்மை நான் காண வர வேண்டும் என்று பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருந்தவர். அதுவும் எமக்குத் தெரியாமல் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி இந்த ஒப்பந்தத்தைத் தன்னோடு இயற்ற அவர் வழிவகுத்தார். ஏன் என்று பிரதிநிதியிடம் கேட்டதற்கு 'நாங்கள் அரசாங்கத்துடன் தான் ஒப்பந்தங்கள் கையெழுத்திடலாம் மாகாண அரசுடன் அன்று' என்றார். எதற்காக எமக்கு அறிவிக்காமல் இதைச் செய்தீர்கள் என்ற கேள்விக்குப் பொறுப்பான பதில் ஏதும் தரவில்லை. அது மட்டுமல்ல. நடைமுறைப்படுத்தும் குழுவில் கூட எமது வடமாகாண சபை உள்ளடக்கப்படவில்லையே என்று கேட்டதற்கு உங்களைக் கட்டாயம் கலந்தாலோசித்து கடமையில் இறங்குவோம் என்றார் வதிவிடப் பிரதிநிதி. இவ்வாறு காகத்தின் கூட்டில் குயில் முட்டை இடுவது போல் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

    அரசியல் என்றால் அறத்திற்குப் புறம்பான நடத்தையே என்பதை நாடு பூராகவும் அறியச் செய்து வருகின்றன இந்த அரசாங்கமும் அதற்கு அடிவருடி வருங் கூட்டங்களும். ஆனால் அதற்காக அதே வழியில் நாம் போவதாக இல்லை. எமது மார்க்கம் அற மார்க்கம். அன்பு மார்க்கம். அரவணைக்கும் மார்க்கம். மக்களின் நன்மையே எமது குறிக்கோள். யார் தருகின்றார்கள் யாருக்குப் புகழ் செல்ல வேண்டும் என்பது எமக்கு முக்கியமல்ல. யார் தமக்குப் பேர் சூட்ட வேண்டும் என்று சதிகளில இறங்குகின்றார்களோ அவர்களை நாங்கள் மன்னித்து முன்னேறி வருகின்றோம்.

    ஒரேயொரு தடங்கல். அதாவது சில அதிகாரிகள் நரிவேலை செய்து வருகின்றார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு வருகின்றோம். ஆவன செய்வோம். என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: படுத்திருக்கும் யானை பலமற்ற யானை என்று தப்புக்கணக்குப் போடப்படாது : முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top