• Latest News

    July 19, 2014

    சம்மாந்துறைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்குமா?

    எஸ்.றிபான் -
    கடந்த 2004, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சம்மாந்துறை தொகுதி மக்கள் தங்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கின்றார்குள். இந்நிலையில் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் சம்மாந்துறை தொகுதி மக்கள் தங்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளுமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு வருகின்றது.

    கடந்த பொதுத் தேர்தல்களில் சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி எல்லாக்கட்சிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். வாக்குகள் பல கட்சிகளுக்கு சிறதடிக்கப்பட்டன. இதனால், சுமார் 35 வருடங்களாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்று வந்த சம்மாந்துறை மக்கள் கைகளை சொறிந்தவர்களாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தார்கள்.
    தற்போது, தங்களுக்கான மக்கள் பிரதிநிதித்துவத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவா சம்மாந்துறை மக்களிடையே அதிகமாகவே காணப்படுகின்றன. அதற்கான வேலைகளையும், கருத்தரங்குகளையும் ஒரு குழுவினர் இப்போதே மேற்கொண்டும் வருகின்றார்கள். அவர்கள் சம்மாந்துறைக்கான மக்கள் பிரதிநிதியை மு.காவின் மூலமே பெற்றுக் கொள்ள முடியுமென்று கடந்த பொதுத் தேர்தல்களில் பெற்றுக் கொண்ட அனுபவத்தை உதாரணமாகக் காட்டி பிரச்சாரங்களில் ஈடுபட்டும் வருகின்றார்கள்.

    சம்மாந்துறைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்றாக வேண்டுமென்ற எண்ணம் மக்களிடையே காணப்பட்டாலும், யார் யார் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்றதொரு சிக்கலும் இல்லாமலில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக சம்மாந்துறை பிரதேசபை தவிசாளர் ஏ.எம்.நௌஷாட், ஐ.தே.கவின் சார்பில் எம்.ஏ.ஹஸன்அலி ஆகியோர்கள் போட்டியிடுவார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. ஆனால், மு.காவின் சார்பில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்பதில் இழுபறி நிலையே காணப்படுகின்றது. இதனிடையே தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் இஸ்மாயிலும் பொதுத் தேர்தலில் சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட இருப்பதாகவும், அவர் எந்தக் கட்சியில் போட்டியிடுவார் என்பதில் தெளிவற்ற நிலை இருப்பதாகவும் ஆங்காங்கே கதைக்கப்படுகின்றன.

    எதிர்வரும் பொதுத் தேர்தலில் மு.காவின் சார்பில் சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ. மன்சூர்,  மு.காவின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.முஸ்தபா ஆகியோர்கள் போட்டியிடுவதற்கு விருப்பங் கொண்டுள்ளார்கள். இவைகளிடையே மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிமும் சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் எம்மிடம் தெரிவித்தார்கள்.

    ஆயினும், சம்மாந்துறை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் மன்சூர் அதிக நாட்டங் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி தலைவர் ரவூப் ஹக்கிம் போட்டியிட்டால் மௌனம் சாதித்துக் கொள்வதற்கு சம்மதத்துடன் இருப்பதாகவும், அதற்கு பகரமாக கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை அல்லது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தலைவர் தனக்கு தருவார் என்ற ஆசையில் அவர் இருப்பதாகவும் மு.காவின் சம்மாந்துறை ஆதரவாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    தலைவர் போட்டியிடாத பட்சத்தில் தானே சம்மாந்துறையின் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென்பதில் அமைச்சர் மன்சூர் உறுதியாக உள்ளார். இதனை சம்மாந்துறையில் 31.05.2014 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் அவர் ஆற்றிய நீண்ட உரை தொட்டுக்காட்டுவதாக இருக்கின்றது.

    ஆனால், அமைச்சர் மன்சூர் பொதுத் தேர்தலில் மு.காவில் போட்டியிட வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டிருந்தாலும், அவர் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். சம்மாந்துறையில் அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை விடவும் அதிகமான வாக்குகள் சம்மாந்துறைக்கு வெளியே அளிக்கப்பட்டன. சம்மாந்துறையில் அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை போதாமை காரணமாக தோல்வி கண்டார்.

    இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், சம்மாந்துறை பெற்றுள்ள அனுபவத்தின் காரணமாக மு.காவிற்கு அதிகவாக்குகளை அளிப்பார்கள். சம்மாந்துறைக்கு வெளியே தனக்கான வாக்குகளும் சேர்ந்து வெற்றி கம்பத்தை அடைந்து கொள்ளலாமென்று அமைச்சர் மன்சூர் கணிப்பிடுகின்றார். இவ்வாறு நடந்தால் அவரின் வெற்றி நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும்.

    ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் சம்மாந்துறைக்கு வெளியே அமைச்சர் மன்சூர் பெற்றுக் கொண்ட வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் பெற்றுக் கொள்வாரா என்ற கேள்வியும் இல்லாமலில்லை. சில வேளை, கடந்த முறையை விடவும் அதிகவாக்குகளையும் பெறலாம். அதற்கான அடித்தளத்தை அவர் போட்டிருந்தால்?

    இவர் கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சராக நியமனம் பெற்றுக் கொள்வதற்கு மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள் சிலரின் பங்களிப்பு அளப்பரியதாகும். மன்சூர் கிழக்கு மாகாண சபையின் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமென்று வரிந்து கட்டிக் கொண்டு செயற்பட்டவர்களை கூட, அமைச்சர் பதவி கிடைத்ததும் கணக்கில் எடுக்காது செயற்பட்டு வருவதாகவும், தொலைபேசியில் கூட கதைப்பது கஸ்டமாக இருப்பதாகவும் அந்த உயர்பீட உறுப்பினர்கள் எம்மிடம் தெரிவித்துக் கொண்டார்கள்.

    மட்டுமன்றி, கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சராக அவர் இருந்தாலும், சம்மாந்துறை ஆதார வைத்திசாலைக்குத்தான் முன்னுரிமை அளித்துக் கொண்டிருக்கின்றார். இங்கு வளம் தேவைக்கு அதிகமாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டும் வருகின்றன. இதனை அமைச்சர் மன்சூரே தனது பேச்சின் போது கடந்த 31.05.2014 அன்று சம்மாந்துறையில் வைத்து தெரிவித்தார்.
    ஏனைய வைத்திசாலைகளுக்கு மாத்திரை முதல் ஆளணியினர் வரை பற்றாக்குறை இருக்கின்ற போது, சம்மாந்துறை ஆதார வைத்திசாலைக்கு மாத்திரம் தனியான முறையில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக பகிரங்கமாக, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், ஹரிஸ், ஹஸன்அலி, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், எம்.ஏ. தவம், எம்.ஏ. நசீர் ஆகியோர்களும் இன்னும் பலர் மேடையில் இருக்கின்ற போதே பெருமையாக மேற்படி கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தார்.

    இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளராக சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டால், கடந்த பொதுத் தேர்தலில், சம்மாந்துறை மண்ணுக்கு வெளியே அவருக்கு கிடைத்த அதிகமான வாக்குகள் கிடைக்குமா என்பதுதான் கேள்வியாகும்.

    அம்பாரை மாவட்டத்தில் நிந்தவூர், பாலமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை போன்ற இடங்களில் உள்ள வைத்திசாலைகளில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றில் பெரும்பகுதியை கூட நிறைவேற்றிக் கொடுக்காது, சம்மாந்துறை ஆதார வைத்திசாலைக்கு தேவைக்கு அதிகமாக எல்லா வளங்களையும் அள்ளிக் கொடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் தெரிவித்தமை மற்ற ஊர்களின் அரசியல்வாதிகளை மூக்கில் விரல் வைக்கச் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஆகவே, சம்மாந்துறையை தமக்கு ஏற்றவாறு வளைத்துப் போட்டால், ஏனைய பிரதேசத்தவர்கள் மு.காவுக்கு வாக்களிக்கும் போது, தமக்கும் வெற்றிக்கு வாக்களிப்பார்கள் என்று கருதிக் கொண்டமை, அக்கரைப்பற்று அரசியலை ஞாபகப்படுத்துவதாக இருக்கின்றது. அக்கரைப்பற்றில் உள்ள நிலைமை, சம்மாந்துறையில் இல்லை. மட்டுமல்லாது மு.காவின் ஏனைய பிரதேச ஆதரவாளர்கள் சிந்திக்கத் தெரியாதவர்களா என்ன?

    இதே வேளை, ரவூப் ஹக்கிம் சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டால், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை ரவூப் ஹக்கிம், சுகாதார அமைச்சராகவுள்ள மன்சூருக்கு பெற்றுக் கொடுப்பாரா என்பதும் சந்தேகமே. ஏனெனில், தான் அம்பாரையில் போட்டியிடுவதாக இருந்தால், சம்மாந்துறைக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர்தான், தலைவர் பாராளுமன்றத்திற்கு செல்வதனைப் பற்றி சிந்திப்பார் என்ற கருத்துப்பட ரவூப் ஹக்கிம் 31.05.2014 அன்றைய கூட்டத்தில் தெரிவித்தார். அப்படியாயின் சம்மாந்துறைக்கு தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுத்தல் என்ற முடிவாகவும் இருக்கலாம். இது சாத்தியமா என்பதும் கேள்வியாகும். சாத்தியம் என்று கருதிக் கொண்டால், சம்மாந்துறைக்கு தேசிய பட்டியலிலும், முதலமைச்சர் பதவியையும் வழங்குவதற்கு அம்பாரை மாவட்டத்தில் உள்ள கிழக்கு மாகாண சபையில் மு.காவின் ஏனைய உறுப்பினர்கள் சம்மதிப்பார்களா? இதற்கு விடை தேட வேண்டும்.

    மேலும், சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி ரவூப் ஹக்கிம் போட்டியிட்டால், அது உண்மையாக சம்மாந்துறையின் பிரதிநிதித்துவமாக இருக்குமா என்ற கேள்விக்கும் விடை காண வேண்டும். சம்மாந்துறைக்கு தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு பதிலாக மன்சூருக்கு முதலமைச்சர் பதவியை வழங்கி, சம்மாந்துறையை சமாளித்துக் கொள்வதற்கு ரவூப் ஹக்கிம் முடிவுகளை எடுத்தாலும், ஆச்சரியப்படுதற்கில்லை. அவ்வாறு, முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டாலும், தனியே சம்மாந்துறைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவராக மன்சூர் செயற்பட மாட்டார் என்பதற்கு உத்தரவாதமில்லை. அதனால், மன்சூருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதாக இருந்தால் கட்சியின் உயர்பீடத்தின் அனுமதியை பெற வேண்டும். ஆனால், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொண்ட சாதக நிலை முதலமைச்சர் பதவிக்கு இருக்குமா?

    இதே வேளை, தேசிய பட்டியல் ஊடாக சம்மாந்துறைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்குவதாக இருந்தால், அது தனக்கு கிடைக்க வேண்டுமென்பதில் பலரும் கண் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    இவ்வாறு, இருக்கும் நிலையில் சம்மாந்துறை தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால், பொதுத் தேர்தலில் சம்மாந்துறையைச் சேர்ந்த பொறுத்தமான வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். எல்லாப் பதவிக்கும் ஒருவரின் முகத்தை காட்டாது, புதிய முகங்களை அறிமுகங் செய்ய வேண்டும். வேட்பாளர் தேர்வு விடயத்தில் ஒற்றுமையான முடிவு எடுக்கப்பட வேண்டும்.

    சம்மாந்துறைக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது நிறுத்தப்படும் வேட்பாளரிடம் உள்ள நேர்மை, கண்ணியம், மக்கள் செல்வாக்கு என்பவைகளிலேயே தங்கியுள்ளது. பொதுத் தேர்தல் வேட்பாளர் விடயத்தில் மரண வீட்டில் நான்தான் மையத்து, கல்யாண வீட்டில் நான்தான் மாப்பிள்ளை என்ற முடிவு எடுக்கப்படுமாயின்  சம்மாந்துறை மீண்டும் ஒரு தடவை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டி ஏற்படும்.
    நன்றி:விடிவெள்ளி

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்குமா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top