• Latest News

    July 18, 2014

    பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் - கட்சி பேதமற்று அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு

    பலஸ்தீனத்தில் காஸாவில் அப்பாவி முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டித்து கொழும்பு – 7, தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் பாதையை இடைமறித்து வெள்ளிக்கிழமை (18) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதமின்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

    அங்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், 'இஸ்ரேலிய அரசாங்கம் இப்பொழுது புரிகின்ற இந்த அட்டூழியத்தினால் அங்கு வாழும் பாலகர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று பாராது கொடூர இஸ்ரேல் அரசு நடத்துகிற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை
    வன்மையாகக் கண்டித்து இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களும் ஏனைய சமயத்தினரும் ஒருமித்து குரல் கொடுக்கின்ற நிலைமை இன்று உருவாகியிருக்கின்றது. கட்சி வேற்றுமையின்றி நாங்கள் இதில் ஒன்றுபட்டிருக்கிறோம். பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ள இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு சாதகமாகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் எங்களது கண்டனத்தை உரத்துச் சொல்கின்ற ஒரு கூட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் மாற்றியிருக்கிறோம்' என்றார்.

    பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறிக்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு இஸ்ரேலுடனான ராஜதந்திர செயல்பாடுகளுக்கு அனுமதியளித்திருப்பதையும், இஸ்ரேலோடு உடன்படிக்கைகள் செய்து கொண்டிருப்பதையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முஸ்லிம் அரசியல்வாதிகளான மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி கண்டித்து கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேல் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான அர்ஷாத் நிஸாம்தீன், ஐ.தே.க உறுப்பினரான பைரூஸ் ஹாஜி, கொழும்பு மாநகர சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான அனஸ் ஆகியோர் உட்பட அநேகர் இஸ்ரேலின் காஸா மீதான மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டிக்கும் அட்டைகளை கைகளில் ஏந்தியவாறும், பலத்த குரலில் கோஷமிட்டவாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.  
       


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் - கட்சி பேதமற்று அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top