காசிம் சமத்: அண்மையில் முஸ்லிம்
சமூகத்திற்கெதிராக தனது இனவாத கருத்துக்களை வெளியிட்டார் என பிரதியமைச்சர்
சரத் வீரசேகரவுக்கு எதிராக நான் வெளியிட்ட கருத்துகளுக்கு அவரது முகவர்கள்
பதிலுரைக்க முனைந்துள்ளதையிட்டு மிகவும் விசனமடைவதாக பாராளுமன்ற உறுப்பினர்
பைசல் காசீம் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் அவர் இது பற்றிக்
குறிப்பிடுகையில் பின்வருமாறு தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்திற்கெதிராக
அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டு மிரான்டித்தனமான தாக்குதல்களின் போது பெரும்பான்மை சமூகத்தைப் பிரதி
நிதித்துவப்படுத்தும் இந்நாட்டின் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களிலுள்ள
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா, ஜனக பண்டார தென்னக்கோன்,
வாசுதேவ நாணயக்கார போன்றோர் அத்தாக்குதல் செயற்பாடுகளைக் கண்டித்தும்,
முஸ்லிம்கள் சார்பாக தங்களது கருத்துக்களையும் மிகப்பகிரங்கமாக
வெளியிட்டும் வந்த ஒரு சூழ்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின்
வாக்குகளை அபகரிக்கும் நோக்குடன்,முஸ்லிம் பிரதேசங்களில் தனக்கான முகவர்களினூடாக
முஸ்லிம்களின்
நண்பன் போன்று தன்னை அடையாளப்படுத்துகின்ற பிரதி அமைச்சர் சரத் வீரசேகர
அவர்கள், அண்மையில் அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்
ஒன்றின் போது, ‘பொதுபல சேனா’ அமைப்பின் முகவர் போன்று முஸ்லிம்களால்தான்
அளுத்கம காட்டுமிரான்டித்தனம் ஆரம்பித்தது எனவும் முஸ்லிம்களின்
நொந்துபோன உணர்வுகளின் மீதேறி நின்று தனது துவேசத்தை வெளியிட்டிருந்த
சம்பவத்தை முஸ்லிம் சமூகத்திடம் நான் எடுத்தியம்பியிருந்தேன்.
‘எரிகிற
வீட்டில் எண்ணை ஊற்றுவது போல’ தனது நச்சுக் கருத்துக்களை நாட்டின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் விதைக்க சரத்வீரசேகர முற்பட்ட
போதிலும்கூட, அவரின் பூர்வீகம் அறியாத முகவர்கள் ஒரு சிலர் தங்களது அரசியல்
வங்குரோத்துத் தனத்தை மறைத்துக் கொண்டு, முஸ்லிம் சமூகத்தின்
வாழ்வுரிமைக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் இன்றைய சூழலில், அவர்
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில்லறை அபிவிருத்திகளுக்கு பணம் ஒதுக்கியதை பூதாகரமாக்கிக்காட்டி,
முஸ்லிம்களுக்கெதிரான அராஜகத்தை அளவு குறைத்துக்காட்ட முற்பட்டு தங்களது
சுயரூபத்தையும் வெளிக்காட்டியிருக்கின்றார்கள்.
அன்று மறைந்த மாமனிதர்
அஷ்ரப் அவர்கள் ஒலுவில் மக்கள் இழந்து நின்ற பொன்னன் வெளிக்காணிகளுக்கு மாற்றுக் காணிகளை வழங்க எடுத்த
முயற்சிகளுக்கெதிராக ‘புத்தங்கள’ விகாரையின் விகாராதிபதியாக இருந்த ஆனந்த
தேரர் என்பவர் முன்னின்று செயற்பட்டு ஒலுவிலில் காணி இழந்த மக்களுக்கு
காணிகள் கிடைக்காமல் செய்திருந்தார்.
01) புத்தங்களவின் ஆனந்த தேரர் என்பவர் வேறு யாருமல்ல பிரதியமைச்சர் சரத் வீரசேகரவின் உடன் பிறந்த சகோதரரே. முன்னாள் படையதிகாரியாக இருந்து அம்பாறை மாவட்ட பூர்வீகம் இல்லாத
நிலையிலும், புத்தங்கள விகாரையின் விகாராதிபதியாக மாறி அன்று தலைவர்
அஷ்ரப் எடுத்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக நின்று அஷ்ரப் நகரின் சுமார்
916 ஏக்கர் காணியினை முஸ்லிம் மக்களிடமிருந்து பறித்தெடுத்தார்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின்
பணிப்பாளராக இருந்து அதனூடாக நியமிக்கப்பட்ட சிங்களப் படையணியூடாக சிங்களப்
பிரதேசங்களில் சிங்கள பௌத்த இனவாதத்தைத் தூண்டி, முஸ்லிம் ஒருவருக்கு
சிங்களவர்கள் வாக்களிக்கக் கூடாது என அன்று பேரியல் அம்மையாருக்காக
தேர்தலில் செயற்பட்ட அனைவரையும் அச்சுறுத்தி, அடித்து, அடாவடித்தனம்
செய்தவர்தான் பிரதியமைச்சர் சரத் வீரசேகர. அதற்கு முழுமையாக நின்று
செயற்பட்டவர்தான் அவரது சகோதரர் ஆனந்த தேரர்.
ஆனால்,அதேவேளை அவருக்காக
முஸ்லிம் பிரதேசங்களில் வாக்குச் சேகரித்தார்கள் முகவர்கள். அதுமாத்திரமன்றி இன்று பொத்துவில்
பிரதேசத்தில் 100 அடி சிலை. முஸ்லிம்களின் பூர்வீகக் காணியில் முகுது
மகாவிகாரை என பொத்துவிலை பெரும்பான்மை இனத்தவர்களுக்குரிய நிலமாக்க
முன்னின்று இவர் செயற்பட்டு வருகின்றார்.
தனது சமூகம் பாதிக்கப்பட்ட போது, ஒரு
தலைவனாக எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பொறுப்புடன் மிகவும்
நேர்த்தியாக அதற்கெதிராக செயற்பட்ட போது, அச்செயற்பாடுகளை
பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகமான அமைச்சர்களே ஆதரித்த
நிலையில், தனது இனவாத முகத்தை மறைத்துக் கொள்ள முடியாமல் போனது
சரத்வீரசேகரவுக்கு.
அதுமட்டுமல்ல, ஞானசார தேரர் கூறும்
கருத்தை அப்படியே திருப்பிச் சொல்லும் ஒருவரை சரிகாணும் முகவர்களின்
கருத்திலிருந்து நாம் எதை விளங்கிக் கொள்ளப் போகிறோம்? ஞானசார தேரரும்,
பொதுபல சேனாவும் சொன்னது சரி என்றே முகவர்களும் ஏற்றுக் கொள்கின்றார்களா?
தஜ்ஜால் வந்தால் அவனது சொர்க்கத்தில் ஓடிப்போய் விழும் கூட்டம் இல்லாமலா
போய்விடும்?
இவ்வாறு பிரதி அமைச்சரின் பூர்வீகமே
முஸ்லிம் விரோத சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான். ‘தாய்வீடு பற்றி
எரிந்தாலும், தனக்கு கையூட்டு வழங்கும் தனது தாய் வீட்டை எரியூட்டும்
பாதகன் நல்லவன்’ எனக்கூறும் முகவர்களின் விடயத்தில் முஸ்லிம் சமூகம்தான்
இனி முடிவெடுக்க வேண்டும்.
02) எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களாக
இருந்தபோதும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த போதும்
மக்களின் தேவையறிந்து முடியுமான சேவைகள் அனைத்தையும், மக்களுக்காக நாம்
செய்துள்ளோம். ஆனால், கிணற்றுத்தவளைகளாக உள்ள முகவர்களுக்கு அவை பற்றி
அறிய வாய்ப்பில்லை.
எனக்கு வாக்களித்த மருதமுனை மக்களுக்கு
நான் என்றும் நன்றிக்கடன் உடையவனாக இருந்து செயற்பட்டு வருகின்றமையை
மருதமுனை மத்திய குழுவும், அந்த மக்களும் நன்கு அறிவர். மருதமுனை அல்
மனார் மத்திய கல்லூரிக்கு கேட்போர் கூடம் உள்ளமையால், விளையாட்டு கட்டிடத்
தொகுதி
(Sports Complex
) ஒன்றினை நிர்மாணித்து வழங்குமாறு என்னிடம்
கோரிக்கை விடுக்கப்பட்ட அதேவேளை, சம்ஸ் மத்திய கல்லூரிக்கு கேட்போர் கூடம்
ஒன்றை நிர்மாணித்துத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மருதமுனை மத்திய குழுவினருடன்
நான் கலந்தாலோசித்த போது, சம்ஸ் மத்திய கல்லூரிக்கு கேட்போர்
கூடமின்மையால் எதிர்கொண்டு வருகின்ற அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளும்
பொருட்டு முதலில் அக்கல்லூரிக்கு கேட்போர் கூடத்தை நிர்மாணிக்க நடவடிக்கை
எடுப்பதென்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே இதற்கான முயற்சிகளை நான்
மேற்கொண்டு வருகிறேன். மேலும், மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரிக்குரிய
விளையாட்டு கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தி
வருகிறேன். எனவே இந்த விடயங்கள் பற்றித் தெரியாமல் பிரதி அமைச்சர் சரத்
வீரசேகரவின் மருதமுனையூர் முகவர் தடுமாறித் திரிவது கவலையளிக்கிறது.
முகவர்களெல்லாம் முதிர்ச்சியடைந்தவர்கள்
போல தமது முகத்திரை களைந்து பேச வந்துவிட்ட நிலையிலான ஒரு
நிர்ப்பந்தத்திலேயே நான் மீள ஒரு முறை பிரதி அமைச்சரின் இனவாத முகத்தை
திரையகற்றி காண்பிக்க வேண்டிய தேவையேற்பட்டது தவிர, இதுவெல்லாம் எனது
வழமையான செயற்பாடுகளல்ல என்பதை பிரதியமைச்சரின் முகவர்களில் ஒருவரான ஐ.பீ.
றஹ்மான் விளங்கிக் கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment