13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கத்தை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக பெற்றுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.அப்படியான விரிவான அதிகாரங்களை எந்த வகையிலும் வழங்க முடியாது என இலங்கை அரசாங்கம் மீண்டும் இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புகள் தெரிவித்ததாக திவயின கூறியுள்ளது.
எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கை, வடக்கு பிரதேசத்தை மாத்திரமல்ல, முழு இலங்கையையும் ஆட்சி செய்ய மேற்கொள்ளும் முயற்சி என அரசாங்கம் இந்திய அதிகாரிகளிடம் மேலும் தெரிவித்துள்ளது.
பரந்துபட்ட அதிகார பரவலாக்கம் மூலமாக வடக்கில் கனிய வளம், துறைமுகம், காடுகள், மீன்பிடி, உள்நாட்டு நீர் வழிகள், வெளிநாடு நிதியை பெறுதல் உள்ளிட்ட அதிகாரங்கள் பலவற்றை பெறுவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் திவயின குறிப்பிட்டுள்ளது.
இந்த அதிகாரங்களின் கீழ் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதியை பெற்றுக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட உள்ள முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்குமாறு வடக்கு மாகாண சபை விடுத்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
முதலமைச்சர் நிதியம் ஸ்தாபிக்கப்படும் முன்னர், அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் 5 மில்லியன் ரூபாவை வடக்கு மாகாண சபைக்கு அனுப்பியுள்ளதாக அரசாங்கத்திற்கு தெரிய வந்துள்ளது எனவும் திவயின தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment