• Latest News

    September 20, 2014

    விடிவெள்ளியிலிருந்து.....


    எஸ்.றிபான் -
    இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய பெருமை மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பையே சாரும். அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சி மூலம் இலங்கையில் மூலை
    முடுக்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தார். மட்டுமன்றி, முஸ்லிம் அரசியலை மக்கள் மயப்படுத்தியும் வைத்தார். இதனால், பணவசதி படைத்தவர்களின் கைககளில் இருந்த முஸ்லிமகளின்; அரசியலை சாதாரண மக்களின் காலடிக்கு கொண்டு வந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவராலும் மக்கள் சக்தி மூலமாக பாராளுமன்றம் செல்ல முடியுமென்று நிரூபித்தார். பெருமளவிற்கு முஸ்லிம்களின் உரிமைகளுடன் கூடிய அபிவிருத்திகளையும் மெற்கொண்டார். ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்தார்.

    இவ்வாறு முஸ்லிம்களின் அரசியலில் தனக்கென்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தி, இலங்கை முஸ்லிம்களின் மனங்களில் நீங்கா நினைவில் நிலைத்திருக்கும் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்புக்கு நேற்று முன்தினம் (16.09.2014) 14வது நினைவு தினம் நாட்டின் பல பாகங்களிலும் 'தலைவர் தினம்: எனும் பெயரில் நினைவு கூறப்பட்டது. அன்னாருக்கு விசேட துஆக்களும் இடம்பெற்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளும், ஆதராவாளர்களுமே இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

    அம்பாரை மாவட்டத்தில் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் 14வது நினைவு தினம் பரந்த அளவில் வழமைக்கு மாற்றமாக நடைபெற்றது. பொத்துவில், கல்முனை தொகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு தலைவர் அஸ்ரப்பின் நிழல்படம் பொறிக்கப்பட்ட போஸ்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. பாடசாலைகளில் நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன. இந்த ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் மற்றும் எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

    போஸ்டர்களை அடித்து, நினைவுப் பேருரைகளை வழங்கினால் அஸ்ரப்பின் கொள்கைளை வாழ வைத்ததாக அமையுமா? இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு யாருமில்லை என்றிருந்த நிலையிலும், முஸ்லிம்களின் அரசியல் பேரினவாத கட்சிகளிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையிலும், தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்களை அடக்கி ஆள ஆயுதங்களை பயன்படுத்திய நிலையிலும்தான் அஸ்ரப் துணிச்சலுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார்.

    அடமானம் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் அரசியலை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். அரசாங்கத்தை அமைக்கும் சக்தியை முஸ்லிம்களின் கைகளுக்குள் கொண்டு வந்தார். இதனால், அவர், இலங்கை அரசியலில் ஒரு கிங் மேக்கராக திகழ்ந்தார்.

    இத்தகைய சிறப்புக்களை கொண்டுள்ள அஸ்ரப்பின் கட்சியை சேர்ந்தவர்கள், தங்களை அவரின் வாரிசுகள் என்றும், அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று சொல்லி பெருமை பேசிக் கொள்ளுகின்றவர்கள்  இன்றைய அரசியல்வாதிகளில் பலர் உள்ளனர். அவர்கள் அஸ்ரப்பின் கொள்கைகளுக்கு மாற்றமாக நடந்து கொண்டிருக்கின்றார்கள். துணிச்சல் மிக்க தலைவனின் வழியை தொடர்கின்றவர்கள் என்று தங்களுக்கு முத்தரை குத்திக் கொள்ளுகின்றவல்கள், அஸ்ரப்பை பெருமனே போஸ்டர்களில் வருடா வருடம் நினைவு கூர்ந்து கொண்டிருப்பது அஸ்ரப்பை உண்மையாக நேசிக்கின்றவர்களுக்கு மன வேதனையை அளிக்கக் கூடியதாகவே இருக்கின்றன.

    இலங்கை அரசியலில் அஸ்ரப்பின் அகன்ற பார்வையையும், சமூகத்தின் மீது காட்டிய பற்றுதலையும் பௌத்த இனவாத அமைப்புக்கள் மாத்திரமின்றி, சிங்கள பேரினவாதமும், தமிழ் பேரினவாதமும் பொறுத்துக் கொள்ளவில்லை. தலைவர் அஸ்ரப்புக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் விஷமக் கருத்துக்களை பரப்பினார்கள. தலைவர் அஸ்ரப்; அவற்றை எதிர்கொண்டு வெற்றியும் கண்டார்.

    பேரினவாத கட்சிகளில் இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளில் பெருந் தொகையினரை தமது கட்சியோடு இணைத்துக் கொண்டார். முஸ்லிம்களில் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் பேரினவாத கட்சிகளுக்கு இருந்த செல்வாக்குகளை முறியடித்தார்.

    இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விடுதலைத் தலைவனாக வெற்றிக் கொடி நாட்டிய அஸ்ரப் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆந் தேதி அரநாயக்கவில் ஹெலிகொப்டர் விபத்தில் மரணமடைந்தார். இந்த தினம் முஸ்லிம்களுக்கு சோகமான தினமாக இருக்கின்ற அதே வேளை, தங்களின் தனித்துவமான அரசியலை மீண்டும் பேரினவாத கட்சிகளிடம் அடகு வைத்ததொரு தினமாகவும் இருக்கின்றது.

    தலைவர் அஸ்ரப்பின் மரணத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவப் போட்டி காரணமாக இரண்டாக துண்டாடப்பட்டது. பின்னர் மென்மேலும், அக்கட்சி பல உடைவுகளைக் கண்டது.

    முஸ்லிம்களுக்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளுக்கு பாதகமாகவும் நடந்து கொண்டவர்களுக்கு உடனுக்கு உடன் தைரியமாக பதில்களை கொடுத்து, அவர்களின் நடவடிக்கைகளை முடக்கினார். சில வேளைகளில் மட்டுப்படுத்தினார்.

    ஆனால், இன்று முஸ்லிம்களுக்கு எதிராக என்றுமில்லாத வகையில் பல தாக்குதல்களும், நெருக்குதல்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. அகற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. அஸ்ரப்பின் வழியை பின்பற்றி நடக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அடக்கு முறைகளுக்கு எதிராக அடங்கி ஒடுங்கி குரல் கொடுத்துக் கொண்டிருப்பதனையே காணுகின்றோம். இதனால், முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கெடுபிடிகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

    தலைவர் அஸ்ரப் என்ற தனிமனிதனின் அயராத உழைப்பினால், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற முகவரியை பலரும் பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் இன்று தலைவர் அஸ்ரப்பின் கொள்கைகளை பதவிகளுக்கும், கொந்தராத்துக்களுக்கும் விற்றுக் கொண்டிருகின்றார்கள். பெயரளவில் ஒவ்வொரு தரப்பினரும் கட்சிகளை வைத்துள்ளார்கள். தங்களின் வேட்பாளர்களை பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டு வைத்தும், தனித்தும் பெரும் பேரினவாதிகளின் எண்ணங்களுக்கு ஏற்ப போட்டியிடச் செய்து கொண்டு வருகின்றார்கள். அதன் ஒரு தொடர்ச்சியே ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டும், இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடுவதுமாகும்.

    இலங்கையில் பல அரசியல்வாதிகள் அகால மரணங்களை அடைந்துள்ளார்கள். அவர்களின் இறப்புக்கு காரணமானவர்கள் யாரென்று விசாரணைகளின் போது, தெரிய வந்துள்ளது. ஆனால், தலைவர் அஸ்ரப் இறந்து 14 வருடங்களான போதிலும், அவரின் மரணத்திற்கு யார் காரணமென்று இன்று வரைக்கும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் அரசியல்வாதிகள் தலைவரின் மரணத்திற்குரியவர்கள் யார் என்று காண்பதற்கு ஆர்வம் காட்டாருக்கும் நிலையில், அஸ்ரப்பின் கொள்கைளை முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்காக பின்பற்றுவார்கள் என்று முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது மடத்தனமாகும்.

    அஸ்ரப்பின் கொள்கைகளையும், படத்தையும் தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சமூகத்திற்காக எதனையும் சாதிக்காதவர்கள் கடந்த சுமார் 14 வருடங்களாக அஸ்ரப்பை வைத்தே அரசியல் செய்து கொண்டிருகின்றார்கள்.

    பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அஸ்ரப்பின் 14வது நினைவு தினத்திற்கு போஸ்டர்களை அடித்து, பாடசாலைகளில் தொங்கவிட்டு, மாணவர்களுக்கு உரைகளை நிகழ்த்;துகின்றார்கள். துஆக்களில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் அஸ்ரப்பின் நினைவு தினத்தை தங்களின் அரசியலுக்கு விளம்பரமாகவே மாற்றியுள்ளார்கள். அஸ்ரப்பின் கொள்கைகளைத்தான் பின்பற்றவில்லை. நினைவு தினத்தையாவது அனுஸ்டிக்கக் கூடாதென்று மக்கள் கேட்பார்கள் என்பதற்காகவே நினைவு தினத்தை நினைவு கூறுகின்றார்கள்.

    உரிமையுடன் கூடிய அபிவிருத்திகளையே அஸ்ரப் மேற்கொண்டார். அபிவிருத்திகளுக்காகவும், சலுகைளுக்காகவும் முஸ்லிம்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை. இன்று அபிவிருத்திகளுக்காக உரிமைகள் தாராளமாக விலை பேசப்படும் நிலையே தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதனைச் செய்வதற்கு அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    அரசாங்கத்திற்கு ஏசிக் கொண்டே, அரசாங்கத்தின் அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொள்ளும் தலைவர்களும், அரசியல்வாதிகளுமே முஸ்லிம்களிடையே நிரம்பிக் காணப்படுகின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை விற்று பெற்றுக் கொள்ளும் அபிவிருத்திகளைக் கூட பிரதேசவாதம், கொமிஷன் போன்றவைகளுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அமோக ஆதரவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை பெற்றுக் கொண்ட ரவூப் ஹக்கிம் இம்மக்களுக்கு செய்த பாரிய அபிவிருத்திகள் என்ன? பெற்றுக் கொடுத்த உரிமைகள் யாவை?

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூலமாக அரசியலுக்கு வந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரிடமும் அஸ்ரப்பின் கொள்கைளில்லை. அனைவரும் செல்வங்களை தேடிக் கொள்வதில் அதிக அக்கரை காட்டுகின்றார்கள்.

    கல்முனை பிரதேச செயலளாராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தமிழ் தெரியாது. பிரதேச செயலகத்திற்கு வருகின்ற பொது மக்களில் பெரும்பான்மையினருக்கு சிங்களம் தெரியாது. மொழி அடிப்படையில் பொது மக்கள் பலத்த சிரமங்களை எதிர் கொள்கின்றார்கள். இதனை நிபர்த்தி செய்யும் வகையில், முஸ்லிம் ஒருவரை பிரதேச செயலாளராக நியமனம் செய்து கொள்ள முடியாதுள்ளார்கள். தலைவர் அஸ்ரப்பின் போஸ்டர்களை அடிப்பது சமூகத்திற்கு பிரயோசனம் தராது. தமது மக்களின் சாதாரணதொரு பிரச்சினைக்கு கூட தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாக சக்தி இழந்துள்ளார்கள். வெறும் தலையாட்டி பொம்மைகளாகவே இருக்கின்றார்கள்.

    அஸ்ரப் மேடைப் பேச்சுக்களின் போது, நான் மரணித்தால், எனக்கு பின் ஆயிரம் அஸ்ரப்புக்கள் வருவார்கள் என்று ஆரூடம் கூறினார்கள். ஆனால், ஒரு அஸ்ரப்பை கூட காண முடியவில்லை. அஸ்ரப்பின் கொள்கைளை பின்பற்றுகின்றவர்கள் ஒரங்கட்டப்படுகின்றார்கள்.

    தங்களுக்கு அரசியலை கற்றுத் தந்து, முகவரிகளையும் பெற்றுக் கொள்வதற்கு வழிசமைத்த ஒரு தேசிய தலைவனுக்கு காட்டுகின்ற மரியாதையும், கௌரவமும் அவரின் கொள்கைளை பின்பற்றுதல், அவரினால் தொடங்கி வைக்கப்பட்ட அபிவிருத்திகளை முடித்து வைப்பத்தல், அவரின் பெயரால் நல்ல காரியங்களையும், தர்மங்களையும் செய்வதாகும்.

    இதற்கு மாறாகவே பெரும்பான்மையான முஸ்லிம் அரசியல்வாதிகள் காணப்படுகின்றார்கள். மது, சூது, , களவு, பொய், விபச்சாரம் போன்ற அனைத்து பாவங்களையும் செய்கின்றார்கள். ஒவ்வொரு அரசியல்வாதியும் மேற்படி பாவங்களில் ஏதோ ஒன்றில் திறமைசாலிகளாகவும் இருக்கின்றார்கள்.

    மர்ஹும் அஸ்ரப் பொது மக்களை சந்திப்பதற்காக புதன்கிழமையை ஒதுக்கி வைத்தார். மக்கள் பெருமளவில் வந்தாலும், பெரும்பாலும் அனைவரையும் சந்தித்து, அவர்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால், இன்றைய தலைவர்களுக்கு தொலைபேசிகள் மூலமாகவோ, நேரிலோ சந்திப்பதென்றால் கடினமானதாகும். தேர்தல் காலங்களில் மாத்திரம் பொது மக்களை சந்திப்பார்கள். ஏனைய காலங்களில் கொழும்பில்தான் அதிகமாக இருப்பார்கள். வாக்களித்த மக்கள் சந்திப்பதற்கு கொழும்புக்குத்தான் போக வேண்டும். போனாலும், சந்திக்க முடியாது. இவ்விதமாக முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் சுயநலவாதிகளின் கைகளில் அகப்பட்டு, குரங்கின் கையில் பூ மாலை கதையாக இருக்கின்றது.

    பேரினாதிகளும், அரசாங்கங்களும் (முஸ்லிம்களின்) உங்களின் கால்களை தாருங்கள்; தங்கச் செருப்பு தருகின்றோம் என்கின்றார்கள். நாங்கள் கால்களை இழந்து நொண்டிச் சமூகமாக மாற முடியாது. தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று அஸ்ரப் முஸ்லிம்களுக்கு துணிச்சலை வரவழைத்தார். ஆனால், இன்றுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் கால்களை தருகின்றோம் எங்களுக்கு தங்கக் செருப்புக்களை தாருங்கள் என்று பேரினாவதிகளின் கால்களில் விழுந்து கிடக்கின்றார்கள்.

    நிந்தவூரில் அஸ்ரப்பினால் அடிக்கல் வைத்து கட்டப்பட்டு, இடைநடுவே முடிக்கப்படாதிருக்கும் 'அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபம் கடந்த 17 வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இதனைச் செய்வதற்கு முடியாதுள்ளார்கள் அஸ்ரப்பின் வாரிசுகள் என்போர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விடிவெள்ளியிலிருந்து..... Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top