• Latest News

    September 16, 2014

    முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களே பேச வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட்

     எஸ்.அஷ்ரப்கான்: முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களே பேச வேண்டும். ஆனால் பேசுகின்றவர்களுக்கு அல்லது பேச வேண்டியவர்களுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க கூடாது.  முஸ்லிம்களுடைய வாக்குகள் தங்களுக்கே அளிக்கப்பட வேண்டும். என்று ஐக்கிய தேசியக் கட்சி நினைப்பது முஸ்லிம்களுக்குச் செய்கின்ற  துரோகமில்லையா ? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கேள்வி எழுப்புகின்றார்.

    பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையாக தேர்தல் களத்தில் இறங்கியமை குறித்து கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்தும் அவர் குறிப்பிடும்போது,
    தங்களது வாக்கு வங்கியை மட்டும் நிறப்பினால் போதுமானது. முஸ்லிம்களுக்கு ஆசனம் கிடைத்தால் என்ன ? கிடைக்காவிட்டால் என்ன ? தங்களது வாக்குகளின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட வேண்டும். என்பது மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியினரின் குறிக்கோளாகும்.

    பதுளை மாவட்டத்தில் சமூதாய நலன் கருதி முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டிருப்பதையிட்டு நாட்டின் மொத்த முஸ்லிம் சமூதாயமும் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை, தங்களது அரசியல் நலன் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்ற சிலர்  இதனை விமர்சிக்க முற்படுவது துரதிஸ்ட வசமானதாகும்.

    முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட பல தரப்பட்ட முயற்சிகளும் மிக நீண்ட காலமாக கைகூடவில்லை. அதே நேரம் இக்கட்சிகள் ஒற்றுமைப்படாததை விமர்சித்தும் பல ஆக்கங்கள் கடந்த காலங்களில் ஊடகங்கள் வாயிலாக நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்த ஒற்றுமை இன்று ஏற்பட்டிருக்கின்றபொழுது இதனை  மேலும் பலப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்வதற்குப்பதிலாக இவ்வொற்றுமை அரசின் பின்புலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்று கொச்சைப்படுத்தி ஊவா மாகாண முஸ்லிம்களுக்கு உரித்தான பிரதிநிதித்துவத்தை இம்முறையும் இல்லாமலாக்கச் செய்வதற்கு இச்சக்திகள் முனைகின்றன.

    எமது கட்சியைப் பொறுத்தவரையில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடுகின்றஎந்த எண்ணமும் எமக்கு ஏற்கனவே இருந்ததில்லை. ஆனால் பதுளை மாவட்ட பொது ஸ்தாபனங்கள், முஸ்லிம்கள் வௌ;வேறு கட்சிகளில் போட்டியிடக் கூடாது என்றும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒற்றுமையாகப் போட்டியிட வேண்டும் என்றும் ஒரு கோரிக்கையை முன்வைத்து முஸ்லிம் கட்சிகளை அனுகியதோடு மாத்திரமல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளிடமும், அக்கட்சிகளில் போட்டியிட இருந்த வேட்பாளர்களிடமும் அக்கோரிக்கையை முன்வைத்தனர்.

    எல்லாக்கட்சிகளும் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் வேட்பாளர்களை தமது பட்டியலில் நிறுத்துவதில் விடாப்பிடியாக இருந்தது. இதற்கான முதலாவது காரணம் வட கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் வரலாற்று ரீதியாக தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்து வருகின்றார்கள். இரண்டாவது காரணம் அண்மைக்காலமாக பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளினால் முஸ்லிம் கட்சிகளின் மீது முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றார்கள். எனவே முஸ்லிம்களுடைய வாக்குகள் ஒட்டுமொத்தமாக தங்கத் தட்டில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாரை வார்க்கப்படும். எனவே, இவ்வாறான ஒரு கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியதில்லை என்பதாகும். ஆகவே தங்களுடைய இலக்கினை அடைவதற்கு அவர்கள் கையாளுகின்ற உக்திதான் இந்த முஸ்லிம் கூட்டணி  அரசின் பின்புலத்தில் செயற்படுகின்றது. தேர்தலின் பின் அவர்கள் ஆளும் கட்சியின் பக்கமே நின்று விடுவார்கள் என்ற பிரச்சாரமாகும்.

    இன்று முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய விடயம் கடந்த 2 வருடங்களாக முஸ்லிம்கள் முகம் கொடுத்து வருகின்ற இனவாத செயற்பாடுகள் வட கிழக்கிற்கு வெளியே நடைபெறுகின்ற சூழ்நிலையில் இம்முஸ்லிம்களின் அதிகபட்ச பெரும்பாண்மை வாக்குகளைப் பெற்றுவந்த இன்னும் பெற இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி இந்த செயற்பாடுகள் தொடர்பாக என்ன செய்தது. அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தமது கடமையைச் செய்ததாக முஸ்லிம் சமூகம் திருப்தி கண்டிருந்தால் வட கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களின் குறைந்தபட்ச வாக்குகளையே இதுவரை பெற்று வந்திருக்கின்ற (எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த மேல்மாகாண சபைத்தேர்தலுக்கு முன்பதாக வட கிழக்கிற்கு வெளியே முஸ்லிம் வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை)  முஸ்லிம் கட்சிகள் மீது அதிருப்தியடைய அல்லது அதிருப்தி அடைந்திருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி நம்புவதற்குக் காரணம் என்ன ?

    தம்புள்ள பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பித்தது. தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் றணில் விக்ரம சிங்ஹ பேசினாரா ? அல்லது கரு ஜயசூரிய பேசினாரா ? அல்லது சஜித் பிரேமதாச பேசினாரா ? அல்லது வேறு யாராவது பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசினார்களா ? ஏன் பேசவில்லை ? தம்புள்ள பள்ளிவாசல் வட கிழக்கிற்கு வெளியே அமைந்திருக்கின்றது. எனவே, அதிகபட்ச முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசயக்கட்சி ஏன் பேசவில்லை ? தமது பௌத்த வாக்குகள் சரிந்துவிடும் என்பதற்காகவா ? இரண்டொரு ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் பேசினார்கள். இல்லை முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஏசினார்கள். ஐக்கிய தேசியக் கட்சி என்பது இந்த மாகாண சபை உறுப்பினர்கள் தானா ? அவ்வாறில்லை எனில் தங்களது தலைவர்கள் பேசவில்லை என்று அவர்களை விமர்சிப்பதற்குப் பதிலாக  வட கிழக்கிற்கு வெளியே முஸ்லிம் வாக்குகளைப் பெறாத அல்லது குறைவாகப் பெற்ற  முஸ்லிம் அமைச்சர்களை அல்லது முஸ்லிம் தலைவர்களை ஏன் விமர்சித்தார்கள் ? ஏனென்றால் அவர்களது மனச்சாட்சிக்குத் தெரியும், முஸ்லிம்களுக்காக முஸ்லிம்கள்தான் பேச வேண்டும். பேரினவாதிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் பேச மாட்டார்கள் என்று,

    தம்புள்ள பள்ளிவாசலைத் தொடர்ந்து அழுத்கம சம்பவம் வரை இரண்டே இரண்டு தடவைகள் மாத்திரம் திரு றணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில்  இவை தொடர்பாகப் பேசினார். அதிலும் பாதி நேரம் முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஏசினார். ஏனென்றால் முஸ்லிம்களுக்காக முஸ்லிம்கள்தான் பேச வேண்டும். என்பதை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.

    மறுபுறத்தில் அண்மைக் காலங்களில் முஸ்லிம்கள் இனவாதச் செயற்பாடுகளுக்கு முகம் கொடுத்தபொழுது அவர்கள் தமது ஆதங்கங்களை அல்லது ஆத்திரங்களை முஸ்லிம் அமைச்சர்கள் மீதே கொட்டினார்கள்.  ஏனெனில் தமக்குத் தன்பம் வருகின்றபோது தோள் கொடுக்கின்ற பொறுப்பு முஸ்லிம் தலைமைத்துவங்களுக்கே இருக்கின்றது. பேரினவாத தலைமைத்துவங்கள் அப்பணியனைச் செய்யாது என்பது அவர்களின் நம்பிக்கையாகும். அவ்வாறெனில் பேரினவாத கட்சிகளுக்கு எந்தவொரு முஸ்லிமும் வாக்களிக்க முற்படுவதை அல்லது வாக்களிக்குமாறு கூறுவதை நியாயப்படுத்த முடியுமா ?

    அளுதளுதேனும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும் என்பதுபோல, அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பாக ஜனாதிபதியுடனும், அமைச்சரவையிலும் சண்டை  பிடிப்பதும்,  முஸ்லிம்களுக்கு பாதிப்பென்று வருகின்றபோது அந்த இடங்களுக்கு உடனடியாக விரைவதும் முஸ்லிம் கட்சிகள்தான் என்ற யதார்த்தத்தையும் முஸ்லிம் சமூகம் ஜீரணித்தாக வேண்டும்.

    துரதிஷ்டவசமாக இந்த அரசாங்க காலத்தில்தான் இவ்வினவாத செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அரசாங்கம் இவ்விடயத்தில் தன் கடமையை சரியாகச் செய்யவில்லை என்ற ஆதங்கம் அவ்வரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிகள் மீது சில நேரங்களில் விசனப்படுகிறார்கள். ஆனால் இலங்கையை ஒரு மியன்மாராக மாற்ற வேண்டும் என்ற இந்த இனவாதிகளின் செயற்பாடுகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தி வைப்பதற்கு இந்த அரசில் இருப்பது துணை புரிகின்றது. இவ்வினவாதிகளும் இம்முஸ்லிம்களை அரசிலிருந்து வெளியேற்றிவிட்டு அரசை முழுமையாகத் தமது செல்வாக்கிற்கு உட்படுத்தி, முஸ்லிம்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்றுதான் துடிக்கின்றார்கள்.

    எனவே நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்த ஒரு ஜனாதிபதித் தேர்தல்  அல்லது பொதுத் தேர்தல் வருகின்றவரை இந்த ஆட்சிதான இருக்கப்போகின்றது.

    எனவேதான் நோயாளிக்கு சத்திர சிகிச்சைதான் சரியான  தீர்வென்றாலும் சத்திர சிகிச்சைக்கான நேரம் வரும்வரை வைத்தியசாலையில் நோயாளியை வைத்து  மாத்திரைகளைக் கொடுத்து நோயாளியின் உயிரைக்காப்பாற்ற வேண்டும். ஆகவே சத்திர சிகிச்சைக்கான நேரம் வந்து சத்திர சிகிச்சை செய்து நோயாளியின் நோயைக் குணப்படுத்துகின்றவரை நோயாளியை குளிசை மருந்துகளின் மூலம் பராமரிக்காமல் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு நோயாளியை வீட்டுக்குக் கொண்டுவந்தால் சில வேளை வழியிலேயே நோயாளி மரணித்து விடலாம். என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொண்டு அறிவு ரீதியாகச் செயற்பட வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களே பேச வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top