• Latest News

    September 16, 2014

    மர்ஹூம் அஷ்ரபின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு......

    எஸ்.அஷ்ரப்கான்; இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாக இடம்பெறக்கூடிய ஒன்றாகும். வரையறுக்கப்பட்ட காலம் வரை வழிப்போக்கர்களாகவே இவ்வுலகில் மனிதர்கள் வாழ வந்திருக்கின்றார்கள். இந்நிலையினை யாரும் மறுக்கவோ, வெறுத்து ஒதுங்கவோ முடியாது. இளமைப்பருவம், முதுமைப்பருவம் என்று பாராமல் எல்லா நிலைகளிலும் காலம் முடிகின்றபோது யாவரும் மரணிக்கின்றனர்.

    இலங்கையில் முஸ்லிம்களும் தனித்த சிறப்புமிக்க குடிமக்களே என்ற நிலையை ஏற்படுத்த தன்னையே வாழ்நாள்களில் அர்ப்பணித்து அரசியல் விமோசனத்திற்காக உழைத்தவரே மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஆவார்கள். முஸ்லிம்களின் அரசியல் விடிவெள்ளியாக திகழ்ந்த மர்ஹூம் அஷ்ரப் மறைந்து 14 வருடங்கள் கழிந்துள்ளது.

    உண்மையில் மரணம் மனிதனை விட்டு புறம் தள்ளிவிட முடியாத ஒன்று என்றாலும் அகால மரணம் என்பது முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் பெரும் ஜீரணிக்க முடியாத ஒன்று. ஆனால் அதனையும் எம்மவர்கள் ஜீரணித்தாக வேண்டியே இருக்கின்றது. மரணம் எந்த வடிவிலும் வரலாம் என்பதனால்,

    முஸ்லிம்களின் அரசியல் விமோசனத்திற்காக பல்வேறு வழிகளிலும் பாடுபட்ட மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளை பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து பெற்றுக்கொடுப்பதில் சிறப்பாக செயற்பட்டு வந்தார். அதற்கான அத்திவாரத்தை இட்ட அவர், தொடர்ந்தும் முஸ்லிம்கள் மட்டுமல்லாது தமிழ், சிங்கள பௌத்தர்களையும் அரவணைத்து செல்கின்ற ஒரு பாரிய தூரநோக்கு சிந்தனையில் அஷ்ரப் செயற்பட்டு வந்தார். இவரது பணிக்காலத்தில் இதனால் பல்வேறு சாவால்களை இவர் சந்திக்க வேண்டி வந்தது. ஒரு புறம் பெரும்பான்மை பேரினவாதம் மறுபுறம் வெளிநாட்டு நெருக்குதல்கள் என அவர் சவால்களை எதிர்கொண்டாலும் தனது உன்னத பணியில் பின்னிற்கவில்லை. இதன் தொடர்ச்சியே இவரது சிந்தனையில் உதித்த தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) என்ற புதிய கட்சியின் உருவாக்கமாகும். இக்கட்சியில் மூவின மக்களையும் இணைத்து தேசிய அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் தனது பணியை திறம்பட செயற்படுத்தி வருவதற்கு எத்தணித்தார். எளிதில் எல்லோரையும் கவரக்கூடிய, நம்பக்கூடிய தன்மை இவரிடம் நிறையவே காணப்பட்டது.

    பொது நலனில் இவர் கொண்டிருந்த நாட்டம் போன்று இன நல்லுறவு விடயத்தில் பெரும் சிரத்தை எடுத்து செயற்பட்டு வந்தார். இதனால் இன, மத, பிரதேச, மொழி வேறுபாடுகளுக்கப்பால் சகல மக்களாலும் நேசிக்கப்பட்டார்.

    இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கு உரியவர்கள் பலர் இவருக்கு முன்னர் தேசிய அரசியலில் ஜொலித்தாலும் தனித்துவ கட்சி அரசியல் முகவரியை பெறுவதில் பாரிய பங்களிப்பு நல்கியவர் என்ற அடிப்படையில் இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் சிறப்பான இடம் மர்ஹூம் அஷ்ரபுக்குண்டு.

    இதுவரை இவரது அரசியல் வெற்றிடத்தை இதுவரை நிரப்பும் அல்லது இவரது அரசியல் பாதையை பின்தொடர்கிறோம் என்று கூறிக்கொள்ளும் யாரும் உண்மையில் பதவி ஆசைக்காக மட்டுமே செயற்படுவதாக கூறினால் அது மிகையாகாது. குறைந்தது மர்ஹூம் அஷ்ரப் கண்ட கனவு, அவர் விட்டுச் சென்ற செயற்பாட்டு நடவடிக்கைகளை தமது சிரம்மேற்கொண்டு செயற்படுத்த முனைவதை இப்போதுள்ள முஸ்லிம்களின் தலைவர்கள் என்று தங்களை இனம் காட்டிக்கொள்ளும் எவரும் காண முடியாதுள்ளது. இவர்கள் வெறுமனே அபிவிருத்தியை மட்டுமோ அல்லது தனித்து உரிமைகளை மட்டுமோ முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் இருந்த வாதத்திறமை அன்றைய பாராளுமன்றம் கை கட்டி பார்த்துக்கொண்டிருக்கும் அளவிற்கு விவாதங்களை மணிக்கணக்கில் நடாத்தி சாதனை நிலை நாட்டினார்.

    இவ்வாறான நிலையில் பதவிகளும் பட்டங்களும் இவர் பக்கம் சாயத் தொடங்கின. இதனால் முஸ்லிம்கள் தேசியத்தில் மட்டுமல்லாது சர்வதேசத்திலும் கௌரவிக்கப்பட வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தார். தனிப்பட்ட ஆளுமையும், சிறப்பான முன்னெடுப்புக்களும் இவரது சொல் செயலை வெளிப்படுத்தி நின்றன.

    இவ்வாறு முஸ்லிம்களுக்கான முகவரியை ஏற்படுத்திவிட்டு மறைந்த அரசியல் சாணக்கியவாதி மர்ஹூம் அஷ்ரபின் இடத்தை நிரப்ப வந்த தற்போதைய தலைவர் றவூப் ஹக்கீம் பல்வேறு சவால்களை தற்போது அனுபவித்து வருகிறார். முதலில் முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் கவனம் செலுத்துவதற்கு முதல் கட்சியை சின்னாபின்னப்படுத்தும் பெரும்பான்மை கட்சிகளிடமும், கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் படு குழியினை தோண்டும் கட்சிக்காரர்களிடமிருந்தும் கட்சியை பாதுகாக்கும் உன்னத பணியினை என்ன விலை கொடுத்தாவது செய்ய வேண்டும் என்ற விடயத்தில் மிகக் கவனமாக செயற்படுகிறார். இதனால் தற்போது முஸ்லிம்களின் உரிமையோ, பிரதேச அபிவிருத்தியோ றவூப் ஹக்கீமின் தலையில் இல்லை. ஒட்டுமொத்த கட்சிப்பாதுகாப்பு என்ற ஒரு விடயத்தை மட்டுமே அவர் தனது பணியாக நினைத்து செயற்பட்டு வருகிறார் என்றே கூற வேண்டியுள்ளது. காரணம் இன்று முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, பொருளாதாரம், உடமைகள் என்பன பேரினவாதிகளால் இல்லாதொழிக்கப்படும் நிலையில் காத்திரமான எந்த முடிவுகளையும் இவரால் எடுக்க முடிவதில்லை. இதற்கான பேரம் பேசும் சக்தியினை இவர் தற்போது இழந்தே வருகிறார். அதற்காக தமக்குள்ளேயே இருக்கும் பதவியாசை பிடித்த பலரின் செயற்பாடுகளால் இவரால் தற்போதைய ஆட்சியாளரை விட்டு விலகும் நிலை சாத்தியமாகாது. அப்படியே விலகினாலும் ஆட்சியாளரை சிந்திக்க வைக்கின்ற  ஒட்டுமொத்த பலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தற்போதைக்கு இல்லை. அது மாற்று முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவுடனேயே சில வேளை சாத்தியப்படலாம். அதற்கான அத்திவாரமாக இன்றைய ஊவா தேர்தல் களத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து தேர்தலில் குதித்துள்ளமையை எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் அது வெறும் தேர்தல் நாடகம் என்ற கருத்தும் பெருமளவில் நிலவி வருகிறது.

    ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு உதாரண புரிசராக இருந்த மர்ஹூம் அஷ்ரபின் மறைவின் பின்னால் அவரது அரசியல் பயணத்தையோ, விட்டுச் சென்ற பணிகளையோ செயற்படுத்த தனித்துவக்கட்சி என்ற முஸ்லிம் காங்கிரஸாலோ அல்லது இதர முஸ்லிம் கட்சிகளாலோ முடியவில்லை என்பது மட்டும் யாராலும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

    முஸ்லிம்களுக்கு தனித்துவ முகவரி பெற்றுக்கொடுத்த மர்ஹூம் அஷ்ரபின் பணிகளை தன்னலம் பாராது செய்வதொன்றே தலைவர் அஷ்ரபின் அரசியல் பாசறையில் வளர்ந்த தற்போதைய தலைவர்களது கடமைப்பொறுப்பாகும்.  மர்ஹூம் அஷ்ரபின் 14 வது நினைவு காலத்தில் அவரது மறுமை ஈடேற்றத்திற்காக பிரார்திப்போமாக.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மர்ஹூம் அஷ்ரபின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு...... Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top