• Latest News

    September 20, 2014

    இஸ்ஸதீன் நகர் மஸ்ஜித்தை மூடுமாறு தேரர்கள் அச்சுறுத்தல்

    நகரில் பள்ளிவாசலொன்று அவசியமில்லை. அந்த பள்ளிவாசலை உடனடியாக மூடவும் எனவும் தேரர்கள் தெரிவித்தனர். அவ்வாறு பள்ளிவாசல் மூடப்படாவிட்டால் குறித்த நகரிலுள்ள 13 முஸ்லிம் குடும்பங்களையும் வெளியேற்றுவோம். இதன்மூலம் பள்ளிவாசல் தானாக மூடப்படும் என பௌத்த தேரர்கள் குறிப்பிட்டனர்.

    “அத்துடன் இஸ்ஸதீன் நகரிலுள்ள பள்ளிவாசலை மூடாவிட்டால் மாத்தறை நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை சிங்களவர்கள் பகிஷ்கரிப்பார்கள். இதற்குரிய அனைத்து நடவடிக்கையினையும் நாங்கள் மேற்கொள்வோம். இதற்கு தேவையான இளைஞர் சக்தி எம்மிடமுள்ளது. தம்பிலாவிற்கு இங்கு எந்த அதிகாரமுமில்லை” எனவும் பௌத்த தேரர்கள் மேலும் தெரிவித்தனர்.

    மாத்தறை, இஸ்ஸதீன் நகரிலுள்ள பள்ளிவாசல் தொடர்பிலான முக்கிய கூட்டமொன்று நேற்று மாலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எஸ்.திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே மாத்தறை மாவட்டத்தினை சேர்ந்த தேரர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
    1804ஆம் ஆண்டு காலப் பகுதியின் பிரபல தொழிலதிபரான மீராகாந்து இஸ்ஸதீன் இந்த பிரதேசத்திலுள்ள 85 ஏக்கர் காணியினை கொள்வனவு செய்து பராமரித்து வந்தார். இதன்போது குறித்த பிரதேசத்தில் மூன்று விகாரைகள் அமைப்பதற்கும் காணிகளை அன்பளிப்பு செய்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

    இவ்வாறான நிலையில் இவரது 4ஆவது பரம்பரையின் காலப் பகுதியில் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் காணிக் கொள்கைக்கு அமைய 50 ஏக்கருக்கு மேல் காணி வைத்திருந்தமையினால்  பிரபல தொழிலதிபரான மீராகாந்து இஸ்ஸதீனுக்கு சொந்தமான காணி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டது.

    பின்னர் இந்த காணி  பொதுமக்களுக்கு விற்கப்பட்டது. இதன்போது பௌத்த மக்கள் அதிகமாக காணியினை கொள்வனவு செய்தனர். இதன்போது முஸ்லிம் மையவாடிக்காக ஒரு பகுதி காணியையும் பிரபல தொழிலதிபரான மீராகாந்து இஸ்ஸதீன் ஒதுக்கியிருந்தார். குறித்த காணியில் மூன்று ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது. எனினும் குறித்த காணியும் சிலரினால் சுவீகரிக்கப்பட்டது.

    மேலும் குறித்த பிரதேசத்திற்கு குறித்த தனவந்தரின் நினைவாக அரசாங்கத்தினால் இஸ்ஸதீன் நகர் எனவும் பெயர் சூட்டப்பட்டது. இவ்வாறான நிலையில் தற்போது அங்கு சுமார் 17 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களின் நன்மை கருதி கடந்த 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிறியளவிலான பள்ளிவாசலொன்று ஸ்தாபிக்கப்பட்டது.

    பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு நிரந்தர கட்டிடமொன்றில் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது. இதனையடுத்து 2012ஆம் ஆண்டு வக்பு சபையில் இந்த பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டது. இவ்வாறான நிலையில் இந்த பள்ளிவாசலினை மூடுமாறு கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து சில தேரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது தொடர்பில் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் எந்தவித முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் பிரதேசத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் முகமாக குறித்த பள்ளிவாசலினை மூடுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எஸ்.திசாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.

    புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளரின் சுற்றுநிருபத்தினை மீறி இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறித்த பள்ளிவாசல் விடயத்தில் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எஸ்.திசாநாயக்க தலையிட முடியாது என வக்பு மேன் முறையீட்டு சபை அறிவித்துள்ளது.

    இவ்வாறான நிலையில் மாத்தறைஇ இஸ்ஸதீன் நகரிலுள்ள பள்ளிவாசல் தொடர்பிலான முக்கிய கூட்டமொன்று நேற்று மாலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

    புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எஸ்.திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மாத்தறை மாவட்ட செயலாளர், முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.சமீல் நளீமி, ஜனாதிபதியின் பௌத்த சமய விவகார மாத்தறை மாவட்ட இணைப்பாளர், மாத்தறை மாவட்ட பௌத்த தேரர்கள் சம்மேளன பொதுச் செயலாளர், இஸ்ஸதீன் நகரிலுள்ள விகாரையின் விகாராதிபதி என சுமார் 60 பௌத்த தேரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இஸ்ஸதீன் நகர் பள்ளிவாசலின் பிரதிநிதிகளாக முஸ்லிம் சட்டத்தரணிகளும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மூவரும் பங்குபற்றினார். சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின் வழிகாட்டலில் இளம் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலையில் சட்டத்தரணிகளான றுஸ்தி ஹபீப், சப்ராஸ் ஹம்சா மற்றும் எம்.இம்தியாஸ் ஆகியோருடன் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் ஹாஜி அஸ்லம் ஒத்மானும் கலந்துகொண்டார்.

    எனினும் சட்டத்தரணிகள் இந்த கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு பௌத்த தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். சட்டத்தரணிகள் கலந்துகொள்ள அனுமதிக்காவிட்டால் கூட்டத்தினை பகிஷ்கரிப்போம் என பள்ளிவாசல் நிர்வாக சபையின் தெரிவித்தனர். இதனையடுத்து சட்டத்தரணிகள் பள்ளிவாசல் சட்டரீதியானது என கூட்டத்தில் நிரூபித்ததுடன் இந்த கூட்டம் சட்டவிரோதமானது என தெரிவித்தனர்.

    இதனையடுத்து சட்டத்தரணிகளுக்கும் பௌத்த தேரர்களுக்கும் இடையில் பாரிய வாக்குவாதம் இடம்பெற்றது. இந்த வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து,

    “மாத்தறை, இஸ்ஸதீன் நகரிலுள்ள பள்ளிவாசலை மூடாவிட்டால் நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிப்போம். 13 முஸ்லிம் குடும்பங்களே வாழும் இஸ்ஸதீன் நகரில் பள்ளிவாசலொன்று அவசியமில்லை.  அந்த பள்ளிவாசலை உடனடியாக மூடவும். பள்ளிவாசல் மூடப்படாவிட்டால் குறித்த நகரிலுள்ள 13 முஸ்லிம் குடும்பங்களையும் வெளியேற்றுவோம்.

    இதன்மூலம் பள்ளிவாசல் தானாக மூடப்படும். இதற்குரிய அனைத்து நடவடிக்கையினையும் நாங்கள் மேற்கொள்வோம். இதற்கு தேவையான இளைஞர் சக்தி எம்மிடமுள்ளது. தம்பிலாவிற்கு இங்கு எந்த அதிகாரமுமில்லை” என பௌத்த தேரர்கள் தெரிவித்தனர்.

    முஸ்லிம்களுக்கு எதிராக தேவையாற்ற வார்த்தை பிரயோகங்களை பௌத்த தேரர்கள் பயன்படுத்தியமையினால் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் சார்பில் கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் கூட்டத்திலிருந்து வெளியேறி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
    விடியல்-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இஸ்ஸதீன் நகர் மஸ்ஜித்தை மூடுமாறு தேரர்கள் அச்சுறுத்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top