• Latest News

    September 14, 2014

    சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டிய நிலையிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ்

    சஹாப்தீன் -
    ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படுமா என்பது பற்றிய சிந்தனைகள் அரசியல் கட்சிகளிடையே பரவலாக இருக்கின்றன. இதே வேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு முஸ்லிம் கட்சிகள் யாவும் முடிவு செய்துள்ளதாகவே இருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் தாங்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் தெரிவிக்கின்ற கருத்துக்கள் இதனை தெளிவுபடுத்துகின்றன.

    இதே வேளை, ஊவா மாகாண சபைத் தேர்தலில் தங்களது வேட்பாளர்களை இரட்டை இலைச் சின்னத்தில் நிறுத்தியுள்ள மு.கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தும், பௌத்த இனவாத அமைப்புக்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் பற்றி கடுமையான தொனியில் கருத்துக்களை முன் வைத்தும், முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவுக்கான அவசியம் பற்றியும், இதனை தேசிய ரீதியில் கொண்டு செல்லுவதற்கு ஊவா மாகாண முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் தெரிவித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.

    மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மு.கா எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது பற்றி இது வரைக்கும் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என்றும் அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் தெரிவிக்கின்றார்கள்.

    ஆனால், மு.கா அரசாங்கத்தை விமர்சனம் செய்வதும், ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்று இன்னும் கட்சி தீர்மானிக்கவில்லை என்று உயர்பீட உறுப்பினர்கள் பலரும் தெரிவித்துக் கொண்டிருப்பதும் உண்மைக்கு மாற்றமானதோ என்று எண்ணும் வகையிலேயே அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்கள் அமைந்துள்ளன.

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மு.கா ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவையே ஆதரிக்குமென்று ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் உள்ள மு.காவின் அமைச்சர் ஒருவர் கருத்துக்களை முன் வைத்திருந்தார்.

    தற்போது அம்பாரை மாவட்டத்தில் உள்ள மு.காவின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாடசாலைகளின் கல்வி பற்றிய கலந்துரையாடல் ஒன்றில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மு.கா மஹிந்தராஜபக்ஷவை ஆதரிக்கும் என்ற கருத்தை முன் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதே கருத்துக்களை மு.காவின் ஒரு சில மாகாண சபை உறுப்பினர்களும் தவிசாளர்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    ஜனாதிபத தேர்தல் பற்றி கட்சி எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துக் கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்று இப்போதே ஆங்காங்கே கருத்துக்களை மு.காவின் மக்கள் பிரதிநிதிகள் சொல்லிக் கொண்டிருப்பது, அக்கட்சி ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்று மறைமுகமாக முடிவு எடுத்துள்ளதோ என்று எண்ண வேண்டியுள்ளது.

    அவ்வாறு, மு.கா முடிவுகளை எடுத்திருக்குமாயின் ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தை விமர்சனம் செய்வது வெறுமனமே முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே எனலாம். தமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதித் தேர்தல் பற்றி கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருப்பது பற்றி கட்சியின் தலைமையோ அல்லது வேறு பதவிகளில் உள்ள முக்கியஸ்தர்களோ இது வரைக்கும் எக்கருத்துக்களையும் முன் வைக்கவில்லை.

    இவர்களின் மௌனம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் உண்மையானதாகவும், கட்சியின் முடிவாகவுமே பார்க்கப்பட வேண்டியுள்ளது. மு.கா அத்தகைய முடிவுகளை எடுக்கவில்லை என்பது உண்மையாயின், அக்கட்சி ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டுமென்பதற்கு இப்போதே அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றனவா என்று கருத வேண்டியுள்ளது. இதே வேளை, மு.காவிற்குள் கட்சிக் கட்டுப்பாடு, கட்டுக்கோப்பு போன்றன தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    ஊவா மாகாண சபைத் தேர்தலில் மு.கா அரசாங்கத்தையோ, எதிர்க்கட்சியையோ பலவீனப்படுத்துவதற்காக போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து தேர்தலில் வெற்றி கொள்வதென்ற கோட்பாட்டுக்கு முரணாகவே இருக்கின்றது. ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால், மற்றுமொரு கட்சியை பலவீனப்படுத்த வேண்டும். அப்போதுதான் அக்கட்சியினால் வெற்றி பெற முடியும். ஆனால், ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ.தே.க ஆகிய கட்சிகள் (மு.காவையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும்) முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவை பலவீனப்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் மு.காவின் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தையோ, எதிர்க்கட்சியையோ பலவீனப்படுத்துவதற்கு ஊவா மாகாண சபைத் தேர்தலில் தாங்கள் ஒற்றுமைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இவரின் இக்கூற்று முஸ்லிம் கட்சிகளின் பலவீனத்தையே காட்டுகின்றது. அக்கட்சிகள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் எதனை சாதிக்க முற்படுகின்றதென்பதனை தெளிவுபடுத்துகின்றது.

    மு.காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தட்டுத்தடுமாறி, கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கும் அதே வேளை, அக்கட்சியின் தலைவரின் கருத்துக்கள் முஸ்லிம்களை மட்டமாக கருதிக் கொள்வதாகவே அமைந்துள்ளன.

    சில வேளை, வேண்டுமென்று செய்கின்ற பிழைகளும், தெரியாமல் செய்கின்ற தவறுகளும் வெற்றிகளைக் ஈட்டித் தருவதுண்டு. ஆனால், மு.காவின் தலைவரின் விடயத்தில் இது தவறு, வரலாறு தங்களை கேள்வி கேட்குமென்று மிகச் சரியாக தெரிந்து கொண்டு செய்த பிழை ஒன்று, அவருக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அதாவது, 18வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு கையுயர்த்தி அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஒத்துழைத்ததன் காரணமாக நடைபெறும் அநியாயங்களுக்கு நாங்களும் பொறுப்புக் கூற வேண்டும். கட்சியைக் காப்பாற்றுவற்காக அப்போது அவ்வாறு நடந்துகொள்ள நேரிட்டது. அந்தத் தவறை நாங்கள் இழைத்ததினால்தான், இப்பொழுது உரிமையோடு தலைநிமிர்ந்து அவர்களிடம் உரத்துக்கூற வேண்டிய கடப்பாடு எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என ஊவா மாகண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பதுளை முஸ்லிம் வாலிபர் இயக்க மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல்  பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

    18வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு தாங்கள் ஆதரவு வழங்கியமை வரலாற்றுத் தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கும் மு.காவின் தலைவர், அத்தவறான செயல் அநீயாங்களை தட்டிக் கேட்கும் துணிச்சலைக் கொடுத்திருப்பதாக ஊவா மாகாண சபை தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளமை, சிறுபான்மைக் கட்சிகளினாலும், சிறு கட்சிகளினாலும், அரசியல் ஆய்வாளர்களினாலும் இன்று வரைக்கும் பெரும் துரோகச் செயலாக கணிக்கப்படுகின்ற விடயத்தினை மறைப்பதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும்.

    தாங்கள் செய்துள்ள இத்தவறு காரணமாக ஏற்பட்டுள்ள துணிச்சலின் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடிந்துள்ளதென்று மு.காவின் தலைமையிடம் கேட்கின்றோம்.

    மு.கா தமது மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்களுக்காக ஒரு விடயத்தினைச் செய்வதும், பின்னர் அதனை தவறு என்று சொல்லுவதும் புதியதல்ல.

    இன்றைய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னர் எதிர்க்கட்சி வரிசையில் மு.கா அமர்ந்திருந்தது. எதிர்க்கட்சியில் தொடர்ந்து இருப்பது தவறு, அபிவிருத்திகளைச் செய்ய வேண்டுமென்று கருதி, நிபந்தனைகளின்றி அரசாங்கத்தோடு இணைந்து கொண்டது.

    அரசாங்கத்தில் இணைந்து கொண்ட மு.காவுக்கு அரசாங்கத்திற்குள் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அபிவிருத்திகளிலும் சரியான பங்கு வழங்கப்படவில்லை. இதனால், அரசாங்கத்தில் இணைந்து கொண்டது தவறு. அரசாங்கம் தங்களை போடுகாயாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றதென்று சோகக் கதைகளைச் சொன்னார்கள். என்றாலும், மு.காவினால்; அரசாங்கத்தைவிட்டு விலக இயலாது.

    திவிநெகும சட்ட மூலத்திற்கு மு.காவின் மாகாண சபை உறுப்பினர்கள் குறிப்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கையுயர்;த்திய போது, அதனை தவறு என்றும், மாகாண சபையின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கை என்று மு.கா ஆவேசப்பட்டுக் கொண்டது. பின்னர், இச்சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, மு.காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைகளை உயர்த்தி ஆதரவளித்தார்கள்.

    இவ்வாறு தவறுகளை செய்வதும், மக்கள் மத்தியில் மன்னிப்பு என்ற வார்த்தைகளை பயன்படுத்தாது, தாங்கள் செய்தது தவறுதான் என்று சொல்லிக் கொள்வதும். அவற்றை கட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே செய்தோம் என்று ஆதரவாளர்களை ஆற்றுப்படுத்துவதும்தான் மு.கா இது காலவரைக்கும் செய்தமையாகும். ஆனால், இந்த ஆற்றுப்படுத்தல் இனிமேல் ஆகாது, மக்கள் மத்தியில் வேகாது என்று எண்ணி, செய்த தவறு துணிச்சலைக் கொடுத்துள்ளதாகவும், அநீதிகளை தட்டிக் கேட்க வைத்துள்ளதாகவும் ரவூப் ஹக்கிம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். தவறுகள்தான் துணிச்சலைத் தருமாக இருந்தால், அவற்றை செய்யாதிருப்பதே சிறந்ததாகும். தவறுகள் அநீயாயத்தை கேட்க வைக்கின்றதென்றால், தவறுகளை செய்கின்றவர்கள் நியாயங்களை கேட்பதற்கான தைரியத்தைப் பெற்றுக் கொள்ளவே தவறுகளைச் செய்வதாக கூறுவார்கள்.

    தவறுகளைச் செய்கின்றவர்கள் திருந்தியாக வேண்டும். தப்பு செய்கின்றவர் வருந்தியாக வேண்டும். ஆகவே, மு.கா தம்மைப் பற்றி சுயமதிப்பீடொன்றினைச் செய்து கொள்ள வேண்டும். கட்சி சார்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள் கட்சியோடு கொண்டுள்ள பற்றுக்களை அளவீடு செய்ய வேண்டும். கட்சிக்காக மக்களா? மக்களுக்காக கட்சியா? என்று பார்த்தால், கட்சியும், மக்களும் மு.காவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்காக என்பதாகவே அக்கட்சியின் நடவடிக்கைகளும், கருத்துக்களும் அமைந்துள்ளன.

    இதே வேளை, ஏனைய முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் அமைச்சர்களையும் நோக்குகின்ற போது மு.காவின் நிலையிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.
    நன்றி: வீரகேசரி ஞாயிறு வெளியீடு



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டிய நிலையிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top