• Latest News

    September 30, 2014

    உலமாக்களும் ஏனையோரும் உலமா கட்சியில் இணைந்து முஸ்லிம் அரசியலை பலப்படுத்த வேண்டும்

    முனையூரான்:
    பொதுபல சேனா என்பது சிங்கள பௌத்த இனவாதத்தை பரப்பி அரசியல்வாதிகளுக்கு வாக்கு சேர்ப்பதற்காக அரசால் உருவாக்கப்பட்டது என்பதை எமது கட்சி மட்டுமே அன்று முதல் சொல்லி வருகிறது. அதனை அண்மைய சேனாவின் கொழும்பு மாநாடு நிரூபித்துள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.

    கட்சியின் உயர் சபை கூட்டதின் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

    இன்றைய நிலையில் பொதுபல சேனாவை எதிர் கொள்ள முஸ்லிம் கட்சிகளால் முடியாது என்பது நூறு வீதம் உறுதியாகியுள்ளது. அதே போல் ஜம்இய்யத்துல் உலமா சபை, சேனாவைக்கண்டு மிரண்டு போயுள்ளது. இந்த சனாவை எதிர் கொள்ளவென உருவாக்கப்பட்ட சூறா சபை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த சபைகள்; சிவில் அமைப்புக்களாக  இருப்பதனால் நழுவல் போக்கையும், அனைவரையும் சமாளித்தாக வேண்டுமென்ற நிலையிலும் இருப்பதால் இவர்களாலும் பொது பல சேனாவை எதிர் கொள்ள முடியாது என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது.
    இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் இந்த சேனாக்களை எதிர் கொள்வது என்பதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். இதற்கு பலரும் பல கருத்துக்களை சொன்னாலும் அவை யதார்த்தமானதாக இல்லை. எனவேதான்; அரசியல் சார்ந்த அமைப்பில் உலமாக்கள் இணைவதன் மூலம் மட்டுமே பொது பல சேனாவை எதிர் கொள்ள முடியும் என்பதை மிக தெளிவாகவே நாம் சொல்கிறோம்.

    இன்று சேனாவை இந்த அரசு ஆசீர்வதிக்கிறது என்றால் அதற்கு பிரதான காரணம் அந்த அமைப்பால் தமது வாக்கு வங்கியை நிரப்ப முடியும் என்பதுதான். இன்னொரு அர சுவந்தாலும் இதே நிலைதான் தொடரும். காரணம் அரசாங்கம் பணத்துக்கோ, ஆயுதத்துக்கோ செல்வாக்குக்கோ அடிபணியாது. மாறாக வாக்குப்பலத்துக்கு மட்டுமே அடி பணியும்.

    அரசாங்கம் உலமா சபையை கொஞ்சமும்  கவனத்தில் எடுக்காமைக்கான காரணம் அச்சபை அரசியலில் அனைவருக்கும் நல்ல பிள்ளையாக இருக்குமே தவிர அரசியல் ரீதியாக தமக்கு வாக்குகளை பெற்றுத் தராது என்பது அரசுக்குத் தெரியும். அதே போல் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய காங்கிரஸ்களும்  வாக்கு வங்கியைக்கொண்ட கட்சிகளாக இருந்தாலும் தலை முதல் நுணி வரை சுயநலம் கொண்ட கட்சிகளாக உள்ளன என்பதால் அக்கட்சிகளுக்கு சில எலும்புத்துண்டுகளை வீசுவதன் மூலம் முஸ்லிம் வாக்குகளை பின்கதவால் பெறலாம் என்பது அரசுக்கு நன்கு தெரியும் என்பதால் அக்கட்சிகளின் வீறாப்பு பற்றி அரசு கணக்கில் எடுப்பதில்லை.

    இந்த நிலையில் எதிர் காலத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் பொதுபலசேனாவுக்கு முகம் கொடுப்பதாயின் இந்த நாட்டின் உலமாக்களும், ஏனையோரும் உலமா கட்சியில் இணைந்து தமது அரசியல் சக்தியை பலப்படுத்த வேண்டும். இது தவிர வேறு எந்த வழியும் நம் முன் இல்லை என்பதுதான் யதார்த்தம். இந்த நாட்டில் சுமார் 5000 க்கு மேற்பட்ட உலமாக்கள் உள்ளனர். இவர்கள் உலமா கட்சியுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் அரசியலில் செயற்பட முன்வந்தால் அதனை அரசு நிச்சயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும். ஏன் பொதுபல சேனா கூட உலமாக்களின் அரசியல் கட்சியுடன் பேச்சு வார்த்தைக்குக்கூட முன் வரலாம். காரணம் எந்தளவுக்கு பௌத்த பிக்குகளுக்கு பௌத்தர்களிடம் செல்வாக்கு உள்ளதோ அதே போல் உலமாக்களுக்கும் முஸ்லிம்களிடத்தில் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியும்.

    உலமா கட்சியினால் நடாத்தப்படும் கூட்டங்களுக்கு உலமாக்கள் திரள வேண்டும். இதில் கலந்து கொள்வதாயின் பணமும் சாப்பாடும் கிடைக்குமா என்ற கேள்விகளை விட்டு விட்டு தமது சொந்தப்பணத்தை செலவு செய்து சமூகத்துக்காக செயலாற்ற உலமாக்கள் முன் வர வேண்டும். அதே போல் முஸ்லிம் தனவந்தர்கள் தாமாக முன் வந்து உலமா கட்சியை பலப்படுத்த முன்வர வேண்டும்.

    இவற்றை செய்யாமல் வெறுமனே பொதுபல சேனா பற்றி புலம்புவதால் எந்த நன்மையும் சமூகத்துக்கு ஏற்படப்போவதில்லை மட்டுமல்ல பரிய ஆபத்துக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. பௌத்த குருமார்கள் முன்பாக அல்லது அவர்கள் அருகில் கூட சரி சமமாக முஸ்லிம் கட்சித்தலைவர்கள் அமர்ந்து பேசுவதை சிங்கள சமூகம் அனுமதிக்காது. ஆனால் உலமாக்களுக்கு அதற்கான அனுமதியை அவர்கள் வழங்குகிறார்கள்.

    ஒன்றை நாம் மிகத்தெளிவாக நினைவில் வைக்க வேண்டும். நாளைய நாடாளுமன்றத்தில் பொது பல சேனாவின் பௌத்த பிக்குமார் அதிகம் இருக்கலாம். அவர்கள் அமைச்சர்களாகவும் இருக்கலாம். அப்போது அவர்களின் இனவாத கருத்துக்களுக்கு சாதாரண முஸ்லிம் உறுப்பினரால் நாடாளுமன்றத்தில் பதில் தர முடியாது. அவர் கொஞ்சம் கார சாரமாக பேசினால் அதுவும் விபரீதத்தை உண்டாக்கும். எனவேதான் உலமாக்கள் நாடாளுமன்றத்தில் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. இதனை நாம் எப்போதோ உணர்ந்து உலமா கட்சியை ஸ்தாபிக்க இறைவன் எமக்கு வழி காட்டினான். அதனை நாம் சரியாக செயற்படுத்திக்காட்டியதுடன் எமது கடமை முடிந்து விட்டது. இனி இதனை பலப்படுத்தும் கடமை உலமாக்களுக்கும், பொதுமக்களுக்கும்தான் உண்டு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலமாக்களும் ஏனையோரும் உலமா கட்சியில் இணைந்து முஸ்லிம் அரசியலை பலப்படுத்த வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top