• Latest News

    October 16, 2014

    முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

    எஸ்.றிபான் -
    எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால், ஐ.தே.க, ஜே.வி.பி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

    நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு, மக்களின் வருமானத்தில் வீழ்ச்சி, பௌத்த கடும் போக்குவாதிகளின் ஆதிக்கம் போன்ற பல காரணங்களினால் அரசாங்கத்தின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை மத்திய மாகாண சபை, மேல் மாகாண சபை, தென்மாகாண சபை, ஊவா மாகாண சபை ஆகியவற்றின் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆதலால், அரசாங்கத்தின் செல்வாக்கு காலம் செல்லச் செல்ல வீழ்ச்சியை நோக்கிச் செல்லவே வாய்ப்புக்கள் உள்ளன. அரசாங்கம் மக்களை கவரும் திட்டங்களையும், சலுகைகளையும் முன் வைக்கும் போது, அரசாங்கத்தின் செல்வாக்கு அதிகரிக்கலாம்.

    அரசாங்கம் தமக்கு  ஏற்பட்டுள்ள பின்னடைவினை கருத்திற் கொண்டு எரிபொருட்களின் விலையையும், சமையல் எரிவாயுவின் விலையையும், மின்சாரக் கட்டணத்தையும் குறைத்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள்ள இன்னும் பல சலுகைகளை அரசாங்கம் அறிவிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை முன்னிலைப்படுத்தி சலுகைகளை அறிவித்தாலும், அவை மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்ய உதவுமா? ஏனெனில், இன்றைய அரசாங்கம் சிறுபான்மையினருக்கு (குறிப்பாக முஸ்லிம்களுக்கு) எதிராக பொதுபல சேன போன்ற பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளை பராமுகமாக இருந்து கொண்டிருப்பதனையிட்டு சிறுபான்மையினர் விசனமடைந்துள்ளார்கள். இதனால், இன்றைய அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் வேட்பாளரை சிறுபான்மையினர் ஆதரிப்பர் என்று எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது.

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து சிறுபான்மையின மக்களிடையே குறிப்பாக முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றுசிந்தனை, இம்மக்களை பிரதிநிதித்துத்துவப்படுத்திக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் முடிவு என்னவென்று துணிந்து சொல்ல முடியாதவர்களாகவே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், முக்கிய பதவிகளில் உள்ளவர்களும் உள்ளார்கள்.

    இன்றைய அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. இக்கட்சகளின் அதிகபட்ச செல்வாக்கு வடக்கு, கிழக்கு முஸ்லிம்களிடம்தான் உள்ளன. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளின் போதும், அரசாங்கம் மௌனமாக இருந்த அதே வேளை, இக்கட்சிகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற வெறுப்பும், மனக் குறையும் முஸ்லிம்களிடையே பரவலாக உள்ளன.

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தராஜபக்ஷதான் வெற்றி பெறுவார் என்றதொரு எடுகோள் அமைச்சர்களான ரவூப் ஹக்கிம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, றிசாட் பதியுதீன், பசீர் சேகுதாவூத் ஆகியோர்களிடம் மட்டுமன்றி, ஏனைய முஸ்லிம் அமைச்சர்களிடமும் உள்ளன. அதே வேளை, இன்றைய அரசாங்கத்தை பெரும்பான்மையான முஸ்லிம்கள் எதிர்மறையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இன்றைய அரசாங்கத்தின் போக்கை மிகவும் மோசமான வகையில் விமர்சனம் செய்தவராக ரவூப் ஹக்கிம் உள்ளார். இவரின் விமர்சனங்கள் முஸ்லிம்களிடையே பசுமரத்தாணி போன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆதலால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் என்று கருதப்படுகின்றவரை ஆதரிப்பதா அல்லது மக்களின் உணர்வுபூர்வமான எண்ணங்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதா என்பதில் முஸ்லிம் கட்சிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

    தாங்கள் பெரும் விமர்சனம் செய்த அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் முஸ்லிம்களிடையே சந்தைப்படுத்துவது எப்படி என்பதே முஸ்லிம் கட்சிகளுக்கு இருக்கின்ற மிகப் பெரிய சிக்கலாகும். முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தவாதிகளின் நடவடிக்கைகளில் மாற்றமில்லாத நிலையிலும், அவர்கள் சட்டத்திற்கு முன்னால் நடமாடிக் கொண்டிருப்பதும் முஸ்லிம்களை பொறுத்தவரை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகயில்லை.

    இவ்வாறு ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் நிலைமைகள் இருந்தாலும், முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒரு முடிவில் இருந்து கொண்டிருக்கின்றன என்பது உண்மையாகும். ஆதலால், முஸ்லிம் கட்சிகள் மஹிந்தராஜபக்ஷவை ஆதரிக்கும் என்பதில் ஐயம் காண முடியாது. ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் எடுக்கும் முடிவுகள் பொதுத் தேர்தலில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதுதான் அமைச்சர்கள் ரவூப் ஹக்கிம், அதாவுல்லா, றிசாட்பதியுதீன் போன்றவர்களுக்கு இருக்கின்ற பயமாகும். ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளர் வெற்றி பெறவும் வேண்டும். பொதுத் தேர்தலில் தாங்கள் தோல்வியடையவும் கூடாதென்பதே இவர்களின் திட்டமாகும்.

    ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டுமென்று வெளிப்படையாகவே கருத்துக்களை முன் வைத்தார்கள். தங்களது கட்சி எந்தவொரு முடிவினையும் எடுக்காத நிலையில் கருத்துக்களை முன் வைத்து, முஸ்லிம் காங்கிரஸை மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்கச் செய்யும் வேலை திட்டங்களை கட்சிக்குள் மறைமுகமாக உட்புகுத்திக் கொண்டார்கள். தற்போதும் அதனையே செய்து கொண்டிருக்கின்றார்கள். தமது கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தல் குறித்து தெரிவித்துக் கொண்ட கருத்துக்களை ரவூப் ஹக்கிம் கண்டிக்கவுமில்லை. ஆதரித்து பேசவுமில்லை.

    ஆனால், தற்போது, தமது கட்சி ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவினை நவம்பர் மாதம் முன் வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே கட்சியின் தொண்டர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டுமென்று விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு முடிவுகளை எடுக்கும். வழக்கம் போன்று, மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் முடிவினை கட்சிக்குள் திணிப்பார்கள். இறுதியில் இந்த இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவினை எடுத்துள்ளோம் என்று ரவூப் ஹக்கிம் தெரிவிப்பார். இப்படியாகவே மு.கா தமது அரசியல் நாடகத்தை வெற்றிகரமாக ஓட்டிக் கொண்டிருக்கின்றது. இன்னும் இந்த நாடகம் மக்களிடையே நேர்கணிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதுதான் மு.காவுக்கு இருக்கின்ற பயமும், சவாலுமாகும்.

    ஜனாதிபதித் தேர்தல் குறித்து தாங்கள் நவம்பர் மாதம் தெரிவிப்போம் என்று மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துக் கொண்டுள்ள அதே வேளை, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இன்னும் கருத்துக்களை வெளியிடவில்லை.

    முஸ்லிம்களை பொறுத்த வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அதனையடுத்து வருகின்ற பொது தேர்தல் ஆகியவற்றில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். தற்போது, சிறுபான்மையினரின் ஆதரவு கணிசமாக இருக்கின்ற வேட்பாளரே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியுமென்பதனை இரு பிரதான கட்சிகளும் உணர்ந்துள்ளன. இந்த நிலைமைகளை சாதகமாகப் பயன்படுத்தி முஸ்லிம்களின் தேவைகளையும், பிரச்சினைகளையும் தீர்வுக்கு கொண்டு வருவதற்கு முனைய வேண்டும்.

    கடந்த காலங்களில் கரையோர மாவட்டம், காணி, பாதுகாப்பு, அபிவிருத்தி போன்றவைகளை வேண்டி உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. உடன்படிக்கைகள் எதுவும் இல்லாது, ஏனைய முஸ்லிம் கட்சிகளைப் போன்று நிபந்தனையற்ற ஆதரவையும் மு.கா அரசாங்கத்திற்கு வழங்கியது. ஆனாலும், அரசாங்கத்திடம் இவை பற்றி கேட்டுள்ளேம். தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். அரசாங்கம் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது போனால், அரசாங்கத்தை விட்டு விலகவும் தயங்க மாட்டோம் என்று மு.கா சொல்லிக் கொண்டாலும், அமைச்சர் பதவிகளையும், சில கொந்தராத்துக்களையுமே அக்கட்சி பெற்றுக் கொண்டது.

    இதே போன்றுதான், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் முஸ்லிம்களின் தேசிய பிரச்சினைகள் பற்றி மௌனமாகவே இருக்கின்றன.

    முஸ்லிம்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தேர்தல் உடன்படிக்கைகள் மூலமாக தீர்வுகளை காணலாம் என்பதனை மர்ஹும் அஸ்ரப் நிரூபித்தார். ஆனால், அவரின் மரணத்தின் பின்னர் இதனை காண முடியாதுள்ளது. தற்போது, முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும் சமூகத்திற்குரிய இணக்க அரசியலைச் செய்யாது, தங்களுக்குரிய வகையில் இணக்க அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்கள். இணக்க அரசியலானாலும், பிணக்க அரசியலாயினும் சமூகத்திற்காவே இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக முஸ்லிம் கட்சிகள் கட்சியில் உள்ள மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பசிக்கு தீனி போடும் வகையில் தீர்மானங்களை எடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் இத்தகைய மலினப் போக்குத்தான் முஸ்லிம்களின் மீதான நெருக்குவாரங்களுக்கு காரணமாகும்.

    தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசியாகவே வேண்டும். தமிழர்களுக்கான தீர்வுகளை முன் வைக்காது காலத்தை வீணடிக்கலாமே தவிர, தீர்வுகளை தரமாட்டோம் என்று கூற முடியாது. தமிழர்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு குரல் கொடுப்பதற்கு உள்நாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் உள்ளன.

    ஆனால், முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதற்கு உள்நாட்டிலும் அரசியல் கட்சிகளில்லை. வெளிநாடுகளிலும் அமைப்புக்களில்லை. தமிழர்களின் பிரச்சினைகள் சர்வதேசமயப்படுத்தியது போன்று, முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்படவில்லை.

    இத்தகைய நிலையில் உள்ள ஒரு சமூகமாக முஸ்லிம்கள் உள்ளதால், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் சமூகம் எதிர் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கான உறுதியான உடன்படிக்கைகள் செய்யப்பட வேண்டும். அந்த உடன்படிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். பெரும்பான்மை மக்கள் குழம்பிவிடுவார்கள் என்று கடந்த காலங்களைப் போன்று பொய்களை சொல்லி, முஸ்லிம்களின் ஆதரவை பெற்றுக் கொடுத்ததற்கு வெறும் அமைச்சர் பதவிகளையே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்நிலை நீடிக்க முடியாது. அரசியலில் சாத்தியமானதை அடைந்து கொள்வதற்கு சாணக்கியம் வேண்டும். ஆனால், அமைச்சர் பதவிகளையும், கொந்தராத்துக்களையும் சாத்தியமாக்கிக் கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் பலியாகிக் கொண்டிருப்பதனை அனுமதிக்க முடியாது.

    முஸ்லிம் சமூகத்தின் பெயரால், தனிநபர்களின் ஆசைகள் நிறைவேற்றப்படுவதனை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் தடுத்து நிறுத்த வேண்டும். தலைவர்கள் வந்து முடிவுகளை கேட்பது போல் கேட்பார்கள், பின்னர் தங்களின் இஸ்டத்திற்கு முடிவுகளை எடுப்பார்கள். இவர்களின் இஸ்டத்திற்கு சுயநலப் போக்கில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்தான் முஸ்லிம்களை இன்று கஸ்டப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

    நன்றி 'விடிவெள்ளி'
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top