சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா
பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20
நாட்களாக ஜெயிலில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்க பெங்களூரில் உள்ள
கர்நாடகா ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
இதையடுத்து ஜெயலலிதா தன்னை
‘‘ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் தனக்கு 66 வயது ஆகிவிட்டது என்றும், நீரிழிவு நோயால்
அவதிப்படுவதாகவும் எனவே இவற்றை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்’’
என்று கூறியுள்ளார்.
இந்த ஜாமீன் மனு 14–ந்தேதி விசாரணைக்கு வரும்
என்று முதலில் வந்த தகவல்கள் கூறின. ஆனால் ஒரு நாளுக்கு முன்னதாகவே கடந்த
திங்கட்கிழமை ஜாமீன் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
தலைமை நீதிபதி
தத்து உள்ளிட்ட 3 பேர் கொண்ட பெஞ்ச் ஜெயலலிதா மனு பற்றி ஆய்வு செய்தது.
பிறகு 17–ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணை
நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி ஜெயலலிதாவின் ஜாமீன்
மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
ஜெயலலிதா ஜாமீன்
கேட்டிருப்பது போல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் தனிதனியாக ஜாமீன்
மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்களது ஜாமீன் மனுக்களும் நாளை
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட
உள்ளது.
நாளை ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் போது அவர்
சார்பில் ஆஜராகும் வக்கீல், ஜெயலலிதாவின் உடல் நிலையை பிரதானமாக
எடுத்துக்கூறி வலியுறுத்தி ஜாமீன் கேட்பார். அதன் அடிப்படையில்தான்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வெளியிடுவார்கள்.
எனவே
நாளை ஜெயலலிதாவின் வக்கீல் எப்படி வாதிடுவார், நீதிபதிகள் அதை ஏற்றுக்
கொண்டு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுப்பார்களா....? என்ற எதிர்பார்ப்பும்,
பரபரப்பும் தமிழ்நாடு முழுவதும் நிலவுகிறது. குறிப்பாக அ.தி.மு.க.
தொண்டர்கள் நாளை ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை ஆகி வெளியில் வந்து விடுவாரா
என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதற்கிடையே சுப்ரீம்
கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் ஆஜராகப்போவது யார் என்ற கேள்விக்குறி
எழுந்துள்ளது. டெல்லியில் உள்ள பிரபல வக்கீல்கள் பலரது பெயர் இதில்
அடிபடுகிறது. ஆனால் இந்த தடவை ஜெயலலிதா சார்பில் ஆஜராகும் வக்கீல் சட்ட
நுணுக்கங்களை தெளிவாக சொல்லி வாதாட வைக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க.
சட்டக்குழு தீவிரமாக உள்ளது.
சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும்
மும்பை வக்கீல்கள் ஆஜராக உள்ளனர். அரசு சார்பில் பவானிசிங் ஆஜராவாரா என்ற
எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் சுப்பிரமணியசாமி இன்று
சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர்,
‘‘ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மனுதாரர் நான்தான். எனவே
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது எனது
கருத்தையும் கேட்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இதன் மூலம்
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில்
சுப்பிரமணியசாமி வாதாடுவார் என்று கூறப்படுகிறது. அவர் எந்த சட்டப்பிரிவை
சுட்டிக்காட்டி வாதாடுவாரோ என்ற பரபரப்பு நிலவுகிறது.
ஜெயலலிதாவின்
ஜாமீன் மனுவுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரணை நடத்த மாட்டோம் என்று
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் திட்ட வட்டமாக கூறி விட்டனர். எனவே
நாளை சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உரிய வரிசைப்படிதான்
விசாரணைக்கு வரும்.
பொதுவாகவே சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை
தோறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மனுக்களின் எண்ணிக்கை மற்ற
நாட்களை விட அதிகமாக இருக்கும். எனவே ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை
எப்போது நடக்க வாய்ப்புள்ளது என்று தெரியவில்லை.
மேலும் ஜெயலலிதா
ஜாமீன் மனு மீதான விசாரணை முதலில் நடத்தி முடிக்கப்பட்டாலும் சசிகலா,
இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பிறகே
அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக தீர்ப்பு வழங்கப்படும் என்று
கூறப்படுகிறது.
ஆகையால் 4 பேரின் ஜாமீன் மனு விசாரணை எவ்வளவு நேரம்
நீடிக்கும்? எதிர்தரப்பில் இருந்து எத்தகைய எதிர்ப்புகள் தெரிவிக்கப்படும்
என்பன போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இவற்றை கடந்து நாளை ஜெயலலிதாவுக்கு
ஜாமீன் கிடைக்குமா என்ற தவிப்பு அ.தி.மு.க. சட்டக் குழுவினரிடம்
நிலவுகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் நாளை வழக்கமான பணிகள் முடிந்த பிறகு
தீபாவளி விடுமுறை விடப்படும். 18–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை சுப்ரீம்
கோர்ட்டுக்கு தீபாவளி விடுமுறையாகும். மீண்டும் 27–ந்தேதிதான் சுப்ரீம்
கோர்ட்டு செயல்படத் தொடங்கும்.

0 comments:
Post a Comment