• Latest News

    October 15, 2014

    காஷ்மீரில் ஐ.எஸ். கொடி ஏந்திய இளைஞர்கள்: கண்காணிக்கிறது பாதுகாப்புத் துறை

     ஜம்மு-காஷ்மீரில் ஐ.எஸ். அமைப்பின் கொடியுடன் இளைஞர்கள் சிலர் காணப்பட்டது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் கடந்த வாரம், பக்ரித் தொழுகைக்கு பின்னர் நடத்தப்பட்ட பேரணியில் சில இளைஞர்கள் இராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.அமைப்பினரின் கொடியை பிடித்து சென்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் படைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சஹா இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, 'கடந்த வாரம் சில பேரணியின் நடுவே ஐ.எஸ். அமைப்பின் கொடியுடன் இளைஞர்கள் சென்றது தொடர்பான விஷயத்தை நமது ராணுவம் பாதிகாப்புத் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளது.

    இந்த செயல் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் உள்ள இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஏதேனும் சதி நடத்தப்படுகிறதா? என்பது குறித்து கண்காணிப்பதில் ராணுவம் முக்கியத்துவம் செலுத்துகிறது.

    ஒருவேளை ஐ.எஸ். அமைப்பு நமது இளைஞர்களை மிகப் பெரிய அளவில் மூளை சலவை செய்ய நினைத்து, இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரியவந்தால், இந்த விவகாரம் முக்கியத்துவம் செலுத்த வேண்டியவையாக பார்க்கப்படும். இங்கு ஐ.எஸ். அமைப்புக்காக செயல்படும் 10,000 முதல் 15,000 ஆதாரவாளர்கள் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஐ.எஸ். அமைப்பினர் மதவெறி கொண்டவர்கள் என்பதால் இதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது' என்றார்.

    இதனிடையே செவ்வாய்க்கிழமை அன்று டெல்லி வந்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவிடம் பேசிய செய்தியாளர்கள் காஷ்மீர் மாநிலத்தில் ஐ.எஸ். அமைப்பின் நடமாட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த ஒமர் அப்துல்லா, 'காஷ்மீர் பள்ளத்தாக்கில் இதுவரை ஐ.எஸ்.அமைப்பினர் இருப்பதாக அடையாளம் காணப்படவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.எஸ்.கொடியை காட்டியது சில முட்டாள்களின் செயல்.

    அவர்கள் இவ்வாறு செய்ததால் காஷ்மீரில் ஐ.எஸ். இருப்பதாக அர்த்தம் அல்ல. இந்த விஷயத்தை சில ஊடகங்கள் வியூகம் செய்து பெரிதாக்கி வருகின்றனர்' என்று ஒமர் அப்துல்லா கூறினார்.

    ஐ.எஸ். அமைப்பினர் ஜம்மு-காஷ்மீரில் இல்லை என்று கூறிய ஒமர் அப்துல்லாவின் பதில் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சுப்ரதா சஹா, 'முதல்வர் உமர் அப்துல்லாவின் கருத்துக் குறித்த விவரம் எனக்கு தெரியவில்லை. எனவே அது குறித்து பதில் அளிக்க முடியாது' என்றார்.

    முன்னதாக கடந்த ஜூலை மாதத்திலும் தொழுகை ஒன்றுக்கு பின்னர் இதே போல ஐ.எஸ். கொடியுடன் சில இளைஞர்கள் ஜம்மு-காஷ்மீரில் காணப்பட்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காஷ்மீரில் ஐ.எஸ். கொடி ஏந்திய இளைஞர்கள்: கண்காணிக்கிறது பாதுகாப்புத் துறை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top