ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன்அலி துணிச்சலுடன்
தயக்கமின்றி உண்மைகளை வெளிப்படுத்தும் வழக்கம் கொண்டவர். அது மட்டுமன்றி
தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதில் கூடிய அக்கறை காட்டி வருபவர்.
சில மாதங்களுக்கு முன்பு ஈழ மக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது
“தமிழ் மக்கள் ஒரே தலைமையின் கீழ் ஐக்கியப்பட்டு நின்று உரிமைகளுக்காக
தளராத இலட்சிய உறுதியுடன் குரல் கொடுத்து வருவதைப் பாராட்டிய அவர்
முஸ்லிம்கள் மத்தியில் அப்படி ஒரு ஐக்கியம் உருவாகவில்லை எனத் தனது
கவலையையும் தெரிவித்துக் கொண்டார். அது மட்டுமன்றி தமிழ் மக்களும்
முஸ்லிம் மக்களும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற வகையில்
ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தேவையின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
இப்போது ஊவா மாகாணச் சபைத் தேர்தல் முடிவு
வெளிவந்த பின்பும் அவர் ஒரு துணிச்சலான கருத்தை வெளியிட்டுள்ளார். ஊவா
மாகாணசபைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம்
கட்சிகளின் கூட்டமைப்பு ஒரு அங்கத்தவரைக் கூட பெற முடியாத நிலையில்
தோல்வியடைந்திருந்தது. அந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த கட்சிகள்
அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கின்றமையே தோல்விக்கு காரணம் என்று தெளிவாகவே
விளக்கியிருந்தார்.
இந்தக் கட்சிகள் ஊவா மாகாணத்துக்கு தேர்தல்
பரப்புரையில் ஈடுபட்டபோது தொடர்ந்து பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது
தொடர்பாகவும், பேருவளை அளுத்கம வன்முறைகள் தொடர்பாகவும் தொடர்ந்து
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசமக் கருத்துகள் தொடர்பாகவும்
மக்கள் கேள்வி எழுப்பினார்களாம். அது மட்டுமன்றி முஸ்லிம்களுக்கு எதிரான
நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறியதுடன் மறைமுக ஆதரவும் வழங்கி
அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு முஸ்லிம்கள்
எப்படி வாக்களிக்க முடியும்? என்றும் வாக்காளர்கள் கேட்டார்களாம்.
அதற்குப் பதிலாக ஊவாவில் போட்டியிட்ட
முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் நாம் வெற்றி பெற்றால் அரச தரப்பை
ஆதரிக்கப் போவதில்லை என ஊவா மக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
செய்திருந்தார்கள். ஏறக்குறைய அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்டனர். ஆனால்
மக்கள் அவர்களை மன்னிக்கவில்லை. ஒருவன் தன் பாவங்களை உணர்ந்து மனம்
வருந்தி மன்னிப்புக் கேட்கும் போது அவனின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற
என வேதங்கள் கூறுகிறன.
இங்கு இவர்கள் தங்கள் பாவங்களுக்காக மனம்
வருந்துவதாக மக்கள் உணர்ந்திருந்தால் நிச்சயம் மன்னித்திருப்பார்கள்.
ஆனால் மக்களால் அப்படி உணர முடியவில்லை என்றே தோன்றுகிறது.
ஊவாவில் தேர்தல் பரப்புரைகள் சூடு
பிடித்து நடந்து கொண்டிருந்த வேளையில் தம்புள்ள பள்ளிவாசல் மீது குண்டுத்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பள்ளிவாசல் மீது இடம்பெறும்
ஐந்தாவது தாக்குதல் இது. இந்தத் தாக்குதலும் கூட பலத்த பொலிஸ் காவலுக்கு
மத்தியிலேயே இடம்பெற்றது.
அன்று இரவு இருவர் மோட்டார் சைக்கிளில்
வந்தனர் எனவும், ஒருவர் அங்கு காவலுக்கு நின்ற பொலிஸார் ஒருவருடன் ஏதோ
கதைத்துக் கொண்டிருக்க மற்றைய நபர் உள்ளே சென்று விட்டுத் திரும்பி
வந்துள்ளார். சில நிமிடங்களில் இருவரும் சென்று விட்டனர். அவர்கள்
சென்றவுடனேயே குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாகி
ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியிருந்தார். ஆனால் இந்தச்சம்பவம் தொடர்பாக
எவரும் கைது செய்யப்படவுமில்லை. அங்கு கடயைமில் ஈடுபட்ட பொலிஸார்
சம்பவத்துக்காக விளக்கத்தைக் கொடுக்கவுமில்லை.
ஏற்கனவே இந்தப் பள்ளிவாசல் இருக்குமிடம் பெளத்தர்களின் புனிதப் பிரதேசம் எனவும், அது அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தும் தம்புல விகாரபதி தலைமையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு பள்ளி வாசல் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின்பும் பள்ளிவாசல் மீதும் பலமுறை தாக்குதல்கள் தொடர்ந்தன.
ஆயினும் அவை தொடர்பாக எந்த வித
நடவடிக்கையும் எடுக்கப்படவிலலை. எவரும் கைது செய்யப்படவில்லை. அமைச்சர்
ரிசாட் பதியுதீதின் முஸ்லிம் கவுன்சில் பிரமுகர்கள் பாதுகாப்புச்
செயலரிடம் பேச்சுக்கள் நடத்தியும் எந்தவிதப் பலனும் கிட்டவில்லை. இந்த
நிலையில் நகர அபிவிருத்தி அமைச்சு வேறு இடத்தில் காணி தருவதாகக் கூறி
எப்படியும் அந்த பள்ளிவாசலை அந்த இடத்திலிருந்து அகற்றி விடப் போவதாக
பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.
இப்படியான ஒரு பள்ளிவாசலில் தான்
ஐந்தாவது தாக்குதல் குண்டுத் தாக்குதலாகப் பரிணாமம் பெற்றுள்ளது. அதே
வேளையில் சிரேஷ்ட அமைச்சர் பெளசி “”அங்கு வெடித்தது குண்டு அல்ல வெறும்
சீன வெடிகளே” எனக் திருவாய் மலர்ந்தார். நடு இரவுப் பொழுதில் பள்ளி
வாசலுக்குள் சீன வெடி கொளுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதையோ, சீன
வெடி கொளுத்த பொலிஸாரா தீப்பெட்டி வழங்கினார்கள்? என்பது பற்றியோ அவர்
எதுவுமே சொல்லவில்லை.
ஆனால் வாய் திறந்து சொல்லாமலே அவர் சொன்ன
வியம் என்னெவன்றால் “”நான் அரசாங்கத்தை காப்பாற்ற எப்படியான பொய்யை
சொன்னாலும் முஸ்லிம் மக்கள் நம்ப வேண்டும்” என்பது தான்.
முஸ்லிம் மக்களை இழிவு படுத்தும்
வகையிலான மனிதகுல விரோத மதவெறி மனப்பான்மை கொண்ட அந்தச் சம்பவம்
தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸோ அல்லது
ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸோ ஊவா மக்கள் சபையோ, தேசிய காங்கிரஸோ கண்டனம்
வெளியிடவில்லை.
ஏதேனும் நடவடிக்கை எடுக்கும்படி கூட
அவர்கள் அரசாங்கத்தைக் கோரவுமில்லை. குறைந்த பட்சம் அமைச்சர் பெளசியிள்
நகைப்புக்கிடமான கருத்துத் தொடர்பாக ஒரு சிறு விமர்சனம் கூட
முன்வைக்கவில்லை. இப்படியான நிலையில் இந்த முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம்
மக்களின் நலன்களுக்கு குரல் கொடுப்பார்கள் என எப்படி நம்ப முடியும்?
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது வெறுப்புள்ள முஸ்லிம் மக்களின்
வாக்குகளை முஸ்லிம்கள் என்ற நாமத்தில் பெற்று அதே அரசைப்
பலப்படுத்தமாட்டார்கள் என மக்கள் நினைப்பதில் என்ன தவறு உண்டு.
ஊவாவில்
போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் “”நாம் வெற்றி பெற்றால் அரசாங்கத்தை
ஆதரிக்கப் போவதில்லை”என ஊவா மக்கள் முன்பு செய்த சத்தியப்
பிரமாணத்தையும் மக்கள் நம்பவில்லை.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்
காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. அரசாங்கத்துக்கு எதிராகப் பரப்புரை
செய்து பல ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தது. அரசை எதிர்க்கும் முஸ்லிம்
மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தனர். தமிழ் தேசியக்
கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி தருவதாகக்
கூறி கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் ஆட்சியை அமைக்க ஆதரவு
கோரினர்.ஆனால் அதை நிராகரித்து விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி அரச கட்சிக்கே முதலமைச்சர் பதவியையும்
தாரை வார்த்தது முஸ்லிம் காங்கிரஸ் .
அப்படி முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன்
அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் பேருவளை, அளுத்கம பகுதிகளின்
முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உயிரழிப்பு கொந்தளிப்பு கொடுமைகளுக்கு
எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் கூட அதன் தவிசாளரால்
நிராகரிக்கப்பட்டது.
இப்படியான நிலையில் ஊவா மாகாண சபை
வேட்பாளர்களின் சத்தியப் பிராமாணத்தை எப்படி முஸ்லிம் மக்கள் நம்ப
முடியும்? முஸ்லிம் மக்களிடம் பாவ மன்னிப்புக் கோரியும் ஊவா மாகாண சபைத்
தேர்தலில் தலைவர் அஸ்ரப்பின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற ஒரு ஆசனமும் பெற முடியவில்லை.
முஸ்லிம் தலைமைகள் தாங்கள் ஒடுக்கப்படும்
சிறுபான்மையினர் என்பதையும், தமது நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?
என்பதையும் புரிந்து கொண்டு தங்கள் தவறுகளை உண்மையாக உணர்ந்து மனம்
வருந்தி முஸ்லிம் மக்களிடம் பாவ மன்னிப்புக் கோரினால் மட்டுமே முஸ்லிம்
வாக்களர்களின் மன்னிப்பு கிடைக்கும்.-TC
