• Latest News

    October 03, 2014

    தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் வாணி விழா

    எம்.வை.அமீர் :
    தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இந்துமாமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நவராத்திரி விரதத்தின் ஒரு பகுதியான வாணி விழா தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இந்துமாமன்றத்தின் பிரதித்தலைவர் சந்திரு தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மத அனுஷ்ட்டானங்களை அம்பாறை மாவட்ட மல்வத்தை பிள்ளையார் கோவில் முருகன் ஐயா அவர்கள் நடத்தி வைத்தார்.

    இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இந்துமாமன்றத்தின் பிரதித்தலைவர் சந்திரு, புரட்டாதி மாதத்திலே சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரதத்தின் அடிப்படை யாதெனில் இச்சை, கிரியை, ஞானம் ஆகிய மூன்று சக்திகளும் ஒரு மனிதனுக்கு ஒருங்கே அமைய வேண்டும் என்பதாகும். நீங்கள் ஒரு செயலில் வெற்றி காணவேண்டுமெனில் முதலில் அச்செயலில் விருப்பம் கொள்ள வேண்டும். அடுத்து அதைச் செய்வதற்குரிய அறிவினைத் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது ஞானசக்தி. பின்பு அச்செயலை நேர்த்தியாக செய்ய வேண்டும். இது கிரியா சக்தி. இவற்றினை உணர்த்துவதே நவராத்திரி.

    இவை முறையே துர்க்கை – இச்சாசக்தி, இலக்குமி – ஞானசக்தி, சரஸ்வதி – கிரியா சக்தி என தத்துவ நோக்கில் பார்க்கப்படுகின்றது. முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு நோய்கள், கிரக சூழ்நிலை, ஜோதிட தாக்கங்கள் நீங்குவதற்காகவும் அடுத்த மூன்று நாட்கள் இலக்ஸ்மி வழிபாடு வற்றாத செல்வம்,மனவளம் வேண்டுமென்பதற்காகவும் இறுதி மூன்று தினங்கள் சரஸ்வதி வழிபாடு அறிவு, ஆற்றல்,தீயசக்திகளை எதிர்க்கும் தன்மைக்காகவும் இயற்றப்படுகின்றன. என்றார்.

    தொடர்ந்து கருத்து வெளியிட்ட சந்திரு, பொதுவாக இந்துமதம் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கின்றது. என்றும் அதனை வெளிப்படுத்துவதாகவே இவ்விழா அமைகின்றது. என்றும் மனித ஆற்றலுக்கு தெய்வத்தன்மை ஊட்டி இவ்வழிபாடு இயற்றப்படுகின்றது. அதிலும் பெண் சக்தியை அதற்கு உருவகித்து கொடுத்திருப்பது பெண்ணுக்கு இந்துமதம் கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகின்றது. இந்துமதம் ஆணை இருப்பாற்றல் எனவும் பெண்ணை இயங்காற்றல் எனவும் குறிப்பிடுவது இந்த நியதிக்கமையவே.

    புரட்டாதி,அக்டோபர் கால தட்பவெப்ப நிலைப்படி மனிதனுக்கு அதிகமான புரதச்சத்து அவசியமாகின்றது. இதனால் இவ்வழிபாட்டில் அதிக புரதச்சத்துள்ள தானிய வகைகள் சேர்க்கப்படுகின்றன. எனவே இது மருத்துவ ரீதியிலும் நிறைவைத் தருகின்றது. இவ்வடிப்படையில் கலைகளின் வளர்ச்சியிலும் நவராத்திரி முக்கிய பங்கெடுக்கின்றது. நடனம்,நாடகம், இசை, சொற்பொழிவு போன்ற பல்வேறு கலைகள் ஒவ்வொரு நவராத்திரி விழாவில் கோவில்களிலும் பொதுமன்றங்களிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்றார்

    அந்தவகையில் தமிழர்களின் ஆற்றுகைக் கலைகளில் சிலவற்றை எமது பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்த்திக் காட்டுவதற்கு முன்வந்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இது அவர்களது முதல் முயற்சி. அந்த முயற்சிக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே நிகழ்வு முடியும் வரை அனைவரும் இருந்து அவர்களுக்கு ஒத்துழைப்பும் உற்சாகமும் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

    எமது மன்றத்தின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்கும் மன்றத்தின் பெருந்தலைவர்,பெரும் பொருளாளர் மற்றும் ஏனைய விரிவுரையாளர்களுக்கு எனது நன்றிகள். அத்தோடு மாணவ மாணவிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து இவ்வாறான நிகழ்வுகளில் நீங்கள் சிறப்பாக ஈடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இறுதியாக பல்லின சமூக மாணவர்களையும் ஒன்றிணைத்து எமது நாட்டில் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் எமது மன்றத்தின் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றது. இதற்காக எமது துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் வாணி விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top