இலங்கையில் காலமான முஹம்மத் நவாஸ் என்றஇந்தியப் பிரஜையின் ஜனாஸா ஒரு கிழமையின் பின்னர் அவரது தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பும் வழியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரித்து நின்ற போது சடுதியாக சுகவீனமடைந்து மயக்கமுற்று விமான நிலைய நடை பாதையில் விழுந்ததை அடுத்து நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் காலமானார்.
தமிழ் நாடு, திருச்சியைச் சேர்ந்த 51 வயதான நவாஸ் என்ற சவூதி அரேபியாவில் தொழில் புரிந்த இந்தப் பிரயாணி தம்மாம் நகரிலிருந்து இலங்கை ஊடாக திருச்சி விமான நிலையத்திற்கு செல்லவிருந்த போதே கடந்த மாதம் 30 ஆம் திகதி இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது பற்றி அறிவிக்கப்பட்டதும் அவரது குடும்பத்தினர் சிலர் வந்த போது, ஜனாஸாவை இங்கு நல்லடக்கம் செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும், ஜனாஸாவை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டுமென்பதையே உறவினர்கள் எதிர்பார்த்திருப்பதாக கூறியதை தொடர்ந்தே அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் சில நாட்களாக அங்குள்ள சவச்சாலை குளிரூட்டியில் இந்த ஜனாஸா வைக்கப்பட்டிருந்தது.
இந்தியாவிற்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பின், கொழும்பில் உள்ள பிரபல மலர்சாலையொன்றில் இந்த ஜனாஸா பழுதுபடாதிருப்பதற்கான போர்மலீன் திரவம் ஊசி மூலம் உட்செலுத்தப்பட்டிருந்ததாகத் தெரிய வருகிறது. அந்த மலர்சாலை நிறுவனத்தினர் ஜனாஸாவை பக்குவப்படுத்தி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்.
உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தமது பயணத்தை மேற்கொண்டிருந்த விமான நிறுவனம் ஜனாஸாவை சம்பவம் நடந்து ஒரு கிழமையின் பின்னர் கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தது. பின்னர் ஜனாஸா அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
உரிமை கோரப்படாத அல்லது அடையாளம் காணப்படாத முஸ்லிம் ஜனாஸாக்களை பொறுப்பேற்று உரிய முறையில் இஸ்லாமிய வரையறைகளுக்கு அமைவாக அவற்றை நல்லடக்கம் செய்வதில் ஈடுபட்டு வரும் அமைப்புக்களில் ஒன்று இந்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் துரிதமாக விடயங்களை கையாளக் கூடிய பொறிமுறையொன்றின் அவசியத்தையும், இம்மை மறுமை பயன் கருதி இவ்வாறான காரியங்களில் ஈடுபடுவதில் ஆர்வமுள்ளோருக்கு உரிய பயிற்சி வழங்குவதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் நன்கு உணர்த்துகின்றது.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்

0 comments:
Post a Comment