• Latest News

    November 10, 2014

    விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் அம்பாறையில் கைது

    கொலை, கொள்ளை மற்றும் தீவைப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் கடந்த ஒன்பது வருடங்களாக தேடப்பட்டு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ம தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை மாறுவேடத்தில் இருந்து கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

    தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் சங்கர் அணியைச் சேர்ந்த ராசா என்றழைப்பட்ட சின்னவன் மணிமாறன் என்பவரையே தாம் கைது செய்திருப்பதாக கைது நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி ஆர். புருஷோத்தமன் தெரிவித்தார்.

    மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த இச்சந்தேகநபர், 2006 மற்றும் 2007ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொலை, கொள்ளை மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டும் விசாரணைகளுக்கு சமூகமளிக்காததால் அவருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இந்த சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவிலுள்ள அட்டப்பள்ளம் அல்லிமுல்லைச் சந்தி எனுமிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    மாம்பழ வியாபாரிகள் போல் தாங்கள் மாறுவேடத்தில் இருந்தே சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் அதிகாரி புருஷோத்தமன் மேலும் கூறினார்.

    பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனின் பணிப்புரைக்கமைவாக, ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்கிரமவின் வழிகாட்டலுடன், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளான எம்.ஏ.சி தாஹிர் 64931, ஆர்.புருஷோத்தமன் 73595 ஆகியோர் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மேற்படி சந்தேகநபரை கைது செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

    சந்தேகநபரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யவிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் அம்பாறையில் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top