• Latest News

    November 23, 2014

    புதிய நிதிக் குழுவில் தமிழ் பிரதிநிதித்துவம் இழப்புக்கு உறுப்பினர்களின் அக்கரையின்மையே காரணம்

    சஹாப்தீன்: கல்முனை மாநகர சபையில் நிதிக்குழுவில் தமிழ் பிரதிநிதித்துவம் இடம்பெறாமைக்கு உறுப்பினர்களின் அக்கரையின்மையே காரணமாகும். கடந்தவருடம் தமிழ் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டுமென்று முயற்சிகள் எடுக்கப்பட்டதனால் 16 வாக்குகளை பெற்று ஒரு தமிழ் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார்.

    இவ்வாறு கல்முனை மாநகர சபையின் மு.காவின் உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

    கல்முனை மாநகர சபையின் புதிய நிதிக் குழு உறுப்பினர்கள் தெரிவதற்காக விசேட சபை அமர்வு கடந்த வியாழக்கிழமை மாலை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.

    நிதிக்குழுவின் தலைவராக பதவி வழியில் முதல்வர் அவர்கள் அங்கம் வகிப்பார்.  அதன் உறுப்பினர்கள் ஐவரை தெரிவு செய்யும் பொருட்டு உறுப்பினர்களுக்கிடையில் கடந்த மாத கூட்டத்தின்போது இணக்கப்பாடின்மை ஏற்பட்டது. இதன் காரணமாக விசேட கூட்டத்தில் அவ்வுறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக பகிரங்க வாக்கெடுப்புக்கு வழிசமைத்தது.

    முதல்வர் தவிர்ந்த இன்றைய சபைக்கு சமூகமளித்திருந்த 16 உறுப்பினர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
    வாக்கெடுப்பின் மூலம் உபகுழுக்களைத் தெரிவுசெய்யும் முறையானது மாநகர கட்டளைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவிடயமாக இருந்தாலும,; உறுப்பினர்களுக்குள் பேசி ஒரு இணக்கப்பாட்டுடன் இதுவரை காலமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

    கல்முனை மாநகர சபையைப் பொறுத்தவரையில் அதில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 4 உறுப்பினர்களும் எம்முடன் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற முற்படவேண்டும் என்பதில் நாங்கள் என்றும் ஈடுபாடுகொண்டவர்களாக இருக்கின்றோம்.

    இதற்கு முன்னிருந்த முதல்வருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் பிணக்குகள் ஏற்பட்ட போது, அதனை தீர்த்துவைப்பதற்காக நானும் என்னுடன் சக உறுப்பினர் பிர்தௌஸும்; சேர்ந்து எடுத்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளன.

    அதேபோல் இன்றைய உபகுழுக்கள் தெரிவில் தமிழ் பிரதிநிதித்துவமும் இடம்பெறவேண்டும் என்ற அக்கரையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் நான்வரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அதில் அமிர்தலிங்கம் மற்றும் கமலதாசன் ஆகிய இருவரையும் தொடர்புகொள்ள முடியாமல் போய்விட்டது. ஏனைய இரு உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு ஒருவேளை சென்றமுறை போன்று வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் நாங்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டபோது அமிர்தலிங்கம் அவர்கள்தான் போட்டியிடுவார் என உறுதியாக உறுப்பினர் ஜெயகுமார் என்னிடம் கூறினார்.

    ஆனால், சபை அமர்விற்கு உறுப்பினர் அமிர்தலிங்கம் அவர்கள் சமூகமளிக்கவில்லை. இருந்தபோதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் யார் போட்டியிடுவதுபற்றி தெரிவிக்காமையே அவர்களில் யாருக்கும் வாக்களிப்பது என்பது பற்றி எங்களுக்கு தெளிவில்லாமல் போய்விட்டது.

    கடந்தவருடம் இவ்வாறு பகிரங்க வாக்கெடுப்பு நிகழும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது எங்களுக்குள் பேசிக்கொண்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்து உறுப்பினர் ஜெயகுமார் அவர்கள் அதிகபடியாக 16 வாக்குகள் பெற்று நிதிக்குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார் என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

    இரு சமூகங்கள் வாழும் கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களும் அதனை தலைமை தாங்கி நடாத்துபவர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிதிக்குழு இழப்பானது ஓர் இனவாதம் அல்ல அது உறுப்பினர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடே காரணம் என திடமாக கூறிக்கொள்ள முடியும். இதனை புர்pந்து கொள்ளாது, இனவாதமாக பார்ப்பது வேதனைக்குரியதாகும்.

    இனங்கள் ஒன்றையொன்று முட்டிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் போது, இருதரப்பினரும் விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். ஒரு அசாதரணமான விடயத்தினைகூட அரசியலாக்கி, இனவாத சாயங்கள் பூசி தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் பரப்ப இத்தெரிவினையும் பயன்படுத்தலாம் அதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைத்துவங்களுக்கு இவ்வாறுதான் இத்தெரிவு இடம்பெற்றது என்பதை மனவேதைனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புதிய நிதிக் குழுவில் தமிழ் பிரதிநிதித்துவம் இழப்புக்கு உறுப்பினர்களின் அக்கரையின்மையே காரணம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top