• Latest News

    November 16, 2014

    கரைபடியும் இனவாதக் கருத்தும் கரையோர மாவட்ட கோரிக்கையும்


    எஸ்.றிபான் -
     இலங்கையின் இன்றைய அரசியலில் ஜனாதிபதித் தேர்தலுடன் கரையோர மாவட்டம் பற்றியும் பேசப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களை பெரும்பான்மையைக் கொண்டதொரு மாவட்டமாக உள்ள அம்பாரை மாவட்டத்தை பெரும்பான்மையினரின் மாவட்டமாக மாற்றிக் கொள்வதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதனால், அம்பாரை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் நிலபுலங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காகவே கரையோர மாவட்டம் கோரப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் இருப்பார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டத்தினை முஸ்லிம் மாவட்டம் என்று சொல்லுவதும், பிரிவினையை ஏற்படுத்தும் கோரிக்கை எனக் குறிப்பிடுவதும் இனவாதத்தை தூண்டுகின்றதொரு செயலாகும்.

    நாட்டில் சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பல மாவட்டங்களும், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல மாவட்டங்களும் உள்ளன. அவைகளை சிங்கள மாவட்டங்கள் என்றோ, தமிழர்களின் மாவட்டங்கள் என்றோ அழைப்பதில்லை. ஏன், சிங்களவர்களின் குடியேற்றத்திற்காக திட்டமிட்ட வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 1961ஆம் ஆண்டு பிரித்து எடுத்த அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள். 1963ஆம் ஆண்டு; 97,621(46.11வீதம்) முஸ்லிம்களும், 61,996(29.28வீதம்) சிங்களவர்களும், 49,185(23.23வீதம்) தமிழர்களும் இருந்துள்ளார்கள். ஆனால், அன்று அதாவது, 1961ஆம் ஆண்டு சிங்கள பேரினவாதம் முஸ்லிம் மாவட்டம் என்றோ, பிரிவினையை ஏற்படுத்தும் நடவடிக்கை என்றோ அழைக்கவில்லை. இன்றும் கூட 2012ஆம் ஆண்டின் சனத்தொகை மதீப்பீட்டின் பிரகாரம் 282,484(43.59வீதம்) முஸ்லிம்களும், 251,018(38.73வீதம்) சிங்களவர்களும், 112,750(17.40வீதம்) தமிழர்களும் உள்ளார்கள். ஆனால், அம்பாரை மாவட்டத்தினை முஸ்லிம் மாவட்டமென்று எந்த சிங்களத் தலைவரும், தமிழ்த் தலைவர்களும், பேரினவாத கட்சிகளும் கூறுவதில்லை.

    இதே வேளை, 1963ஆம் ஆண்டு 46.11 வீதமாக இருந்த முஸ்லிம்களின் தொகை, 2012ஆம் ஆண்டு 43.59வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், சிங்களவர்களின் தொகை 1963இல் 29.28ஆக இருந்து 2012இல் 38.73வீதமாக உயர்வடைந்துள்ளது. சிங்களவர்களின் சனத்தொகையில் ஏற்பட்ட இவ்வதிகரிப்புக்கும், பிறப்பு வீதத்திற்கும் சம்பந்தமில்லை. பிறப்பின் அடிப்படையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் சிங்களவர்களின் சனத்தொகை சுமார் 30வீதமாகவே இருக்க வாய்ப்புக்கள் உள்ளன. அம்பாரை மாவட்டத்தில் திட்டமிடப்பட்டவாறு சிங்கள குடியேற்றங்கள் பிற மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, குடியேற்றப்பட்டதனாலேயே சிங்களவர்களின் சனத்தொகை பிறப்பு வீதத்தை விடவும் அதிகமாக இருப்பதற்கு பிரதான காரணமாகும். இன்னும் 10வருடங்களின் பின்னர், அம்பாரை மாவட்டம் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதொரு மாவட்டமாக மாற்றப்பட்டுவிடும். இதனால், அம்பாரை மாவட்டத்தில பெரும்பான்மையாக இருந்த முஸ்லிம் சமூகம், பேரினவாதிகளின் சதி திட்டங்களினால்; சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள். இந்நிலை ஏற்படும் போது, தமிழ் பேசும் மக்களின் மீது பெரும்பேரினவாதிகளின் அடாத்து வேலைகள் இன்றிருப்பதனை விடவும் அதிகமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இந்த ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற்று தமிழ் பேசும் இரு சமூகங்களும் வாழ்வதற்கானதொரு நிர்வாக வழிமுறையே கரையோர மாவட்டமாகும். சனத்தொகைப் பெருக்கம், நிர்வாகத்தை இலகுபடுத்தல் போன்ற காரணங்களினால் புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1959இல் மொனராகலை மாவட்டமும், 1961ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டமும், 1978இல் கம்பஹா மாவட்டமும், 1982இல் கிளிநொச்சி மாவட்டமும், 1985இல் முல்லைத்தீவு மாவட்டமும் புதிதாக உருவாக்கப்பட்டன. இவற்றில் கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சிங்களவர்களும், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழர்களும் பெரும்பான்மையாக உள்ளார்கள். இம்மாவட்டங்களை யாரும் இனச்சாயம் பூசிப் பார்க்கவில்லை. ஆனால், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டதாக உள்ள கரையோர மாவட்டக் கோரிக்கை மாத்திரம், முஸ்லிம் கட்சிகளை தவிர மற்றைய கட்சிகள் யாவற்றினாலும் முஸ்லிம் என்ற சாயம் பூசப்பட்டே நோக்கப்படுகின்றன.

    கரையோர மாவட்டக் கோரிக்கையானது முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை என்றும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. முஸ்லிம் காங்கிரஸாரும் இது எங்களின் கோரிக்கை என்றே பெருமை பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், 1978ஆம் ஆண்டு புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கென ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட மொறகொட ஆணைக்குழுவானது, கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளையும் இணைத்து கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தது. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரையையே முஸ்லிம் காங்கிரஸ் தமது கோரிக்கையாக முன் வைத்தது. மறக்கப்பட்டிருந்த கல்முனை கரையோர மாவட்டத்தினை ஞாபகப்படுத்தி, அதனை தருமாறு கோரிய வேலையையே முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளது. இக்கோரிக்கைக்கு முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே அதிக அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், அக்கட்சி, கரையோர மாவட்டத்தை பல தேர்தல்களில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொண்டதனைப் போன்று, தேர்தலுக்குப் பின்னர், அதைப் பெற்றுக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சி போதாதென்றே சொல்லுதல் வேண்டும்.

    கடந்த காலங்களில் தேர்தல்களின் போதும், அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் கரையோர மாவட்டத்தை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐ.தே.கவும் மற்றும் ஜே.வி.பியும், தமிழ்க் கட்சிகளும் இன்று கரையோர மாவட்டக் கோரிக்கையை நிராகரித்துள்ளன. இக்கோரிக்கை பிரிவினைவாதம் என்று கருத்துக்களை வைத்துள்ளார்கள். இக்கோரிக்கையை நிராகரித்து  சிங்கள மக்களிடையே இனவாதத்தை கிளப்பி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகளை எடுக்கின்றன.

    நாட்டில் கோலாட்சி செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் பௌத்த கடும்போக்கு அமைப்புக்களினால்  சிங்கள மக்களிடையே இனவாத சிந்தனைகள் நிறைவாகவே விதைக்கப்பட்டுள்ளன. இதனால், வாக்குகளை கணக்கீடு செய்தே கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. அரசியல் கட்சிகள் பௌத்த இனவாதிகளின் வாக்குகளை குறி வைத்துள்ளமையும், சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களின் விடயத்தில் இக்கட்சிகள் எதிர்மறையாகவே செயற்படுவதனையும் எடுத்துக் காட்டுகின்றன.

    பேரினவாதக் கட்சிகள் கரையோர மாவட்டக் கோரிக்கையை எதிர்ப்பதில் ஒரே கருத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் சிங்கள மக்களின் நலன்களுக்கு மாத்திரமே முன்னுரிமை கொடுத்துச் செயற்படும் என்பதற்கு கரையோர மாவட்டத்தை அக்கட்சிகள் கையாளும் விதம் எடுத்துக் காட்டுகின்றன.

    ஆனால், கரையோர மாவட்டம் என்பது இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமின்றி, தமிழர்களுக்கு எதிர்காலத்தில், இன்றிருப்பதனை விடவும் கூடுதல் நன்மைகளை கொண்டுவரும் என்று தெளிவாக தெரிந்துள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் ரவூப் ஹக்கிம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, றிசாட் பதியுதீன் ஆகியோர்கள் எந்தவொரு பகிரங்க இடத்திலும் கரையோர மாவட்டம் குறித்து கருத்துக்களை முன் வைக்காதுள்ளார்கள். இதனால், கரையோர மாவட்டம் பற்றி அவர்களின் நிலைப்பாடு என்னவென்று அறிந்து கொள்ள முடியாதிருக்கின்றன.

    இதே வேளை, மு.காவின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹஸன்அலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர்கள் கரையோர மாவட்டத்தின் அவசியம் பற்றி கருத்துக்களை முன் வைத்த வண்ணமுள்ளார்கள்.

    முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கரையோர மாவட்டமானது தமிழர்களுக்கு தீமையாக அமையும். முஸ்லிம் பேரினவாதம் பற்றியும் பேசுகின்றார்கள். ஆனால், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் தமிழ் பேரினவாத்தினாலும், சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களில் சிங்கள பேரினவாதத்தினாலும் முஸ்லிம்கள் வெகுவாகபாதிக்கப்பட்டு வருகின்றார்கள். கரையோர மாவட்டக் கோரிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொள்கையளவில் ஏற்றுள்ளது. ஆயினும், அக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சில பிரதேச சபைகளில் கரையோர மாவட்டக் கோரிக்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இப்பிரதேச சபைகளின் இந்நடவடிக்கைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கண்டிக்கவில்லை. இதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு ஒரு முகமும், தமிழர்களுக்கு மற்றொரு முகமும் காட்டிக் கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

    நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தையே தொடர்ச்சியாக கோரிக் கொண்டிருக்கின்றது. இதற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. மு.காவும் இணைந்த வடக்கு கிழக்கை கொள்கையளவில் ஏற்றுள்ளது. இருப்பினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் மக்கள் பிரதிநிதிகள் கரையோர மாவட்டம் முஸ்லிம் இனவாத்திற்கு அடிகோளும் என்றுரைக்கின்றார்கள். அப்படியாக இருந்தால், இணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கப்போகின்றார்கள். அந்நிலை தமிழ் பேரினவாதத்திற்கு அடிகோளுமென்று தெரிவித்தால் கரையோர மாவட்டத்திற்கு எதிராகவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரினால் என்ன சொல்ல முடியும்? கரையோர மாவட்டத்தினை நிராகரிப்பது போல், மு.காவில் உள்ளவர்களில் சிலர் வடக்கு கிழக்கு இணைப்பை நிராகரித்தால், பெரும்பேரினவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். கரையோர மாவட்டக் கோரிக்கை எதிராக செயற்படுகின்றவர்கள் இணைந்த வடக்கு கிழக்கிற்கு எதிராக செயற்படுகின்றவர்களாகவே அடையாளங் காணப்பட வேண்டும்.

    இன்று நாட்டில் முஸ்லிம்களின் கோரிக்கைகள், நலன்கள் போன்ற வியடங்களில் சிங்கள பேரிவாதமும், தமிழ்ப் பேரினவாதமும் கைகோர்த்துக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. கரையோர மாவட்ட கோரிக்கையை எதிர்ப்பதற்கு தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கு விரோதமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பொதுபல சேன அமைப்பின் உறுப்பினர்களை தமிழர்களில் ஒரு குழுவினர் நாடி இருப்பது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு நல்லதொரு பாடமாகும்.

    இதனைக் கருத்திற் கொண்டு, முஸ்லிம் அரசியல் தலைமைகள் நாட்டில் முஸ்லிம்கள் எதிர் கொண்டு வருகின்ற பிரச்சினைகள் அடையாளங் காணப்பட்டு, அவைகளுக்குரிய தீர்வுகள் குறித்து, பொதுவான திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். அரசியலில் வௌ;வேறு கட்சிகளில் பயணித்தாலும், முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒருமித்த கருத்துக்களை முன் வைத்தல் வேண்டும். முஸ்லிம்களின் பிரச்சினைகள் விடயங்களில் முஸ்லிம் கட்சிகளிடையும், தலைமைகளிடையேயும் மாறுபட்ட கருத்துக்கள் இன்னும் தொடருமாயின், முஸ்லிம் சமூகத்தின் மீதான பேரினவாதிகளினதும், பௌத்த கடும்போக்கு இனவாத அமைப்புக்களின் கெடுபிடிகளும், தொல்லைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதில் ஐயமில்லை.
    Vidivelli -

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கரைபடியும் இனவாதக் கருத்தும் கரையோர மாவட்ட கோரிக்கையும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top