• Latest News

    November 06, 2014

    உத்தரவாதங்க​ளை நிறைவேற்றா​விடின் பட்ஜெட்டை மு.கா. எம்.பி.க்க​ள் எதிர்க்க வேண்டும்! ஜெமீல் அழுத்தம்

    கிழக்கு மாகாண சபை ஆட்சி நிறுவப்படும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அரசாங்கம் வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றாவிடின் பட்ஜெட் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

    கடந்த 2012ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. அதன்போது அரசாங்க உயர்மட்டத்தின் அழைப்பை ஏற்று எமது முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு சென்றது.

    இப்பேச்சுவார்த்தைக்கு எமது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தவிர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று சமூகம் சார்ந்த சில கோரிக்கைகளை அரசாங்க உயர் மட்டத்தினரிடம் எழுத்து மூலம் முன்வைத்திருந்தனர்.

    இதன்போது இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அரசாங்க உயர் மட்டத்தினர் அவற்றை நிறைவேற்றித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தனர். அதன் பேரிலேயே நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினோம்.

    ஆனால் கிழக்கின் ஆட்சி நிறுவப்பட்டு- இரண்டு வருடங்கள் கடந்தும் அரசினால் உறுதியளிக்கப்பட்ட எமது கோரிக்கைகளுள் ஒரு விடயம் கூட இன்னும் நிறைவேற்றித் தரப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

    இது விடயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

    இன்று மத்தியிலும் கிழக்கிலும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் எதனைச் சாதித்தது என்கிற பாரிய குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    அரசு நினைத்தால் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு 24 மணித்தியாலம் போதுமானதாகும். ஆனால் முஸ்லிம் சமூகம் தொடர்பில் இந்த அரசாங்கம் எவ்வித கரிசனையுமின்றி மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நடந்து கொள்கிறது. இதனால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களே அதிகம் பாதிக்கப்பட்டு- மனம் புண்பட்டு- விரக்தியின் உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளனர்.

    அண்மையில் நடைபெற்ற கட்சியின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் மீதான தமது கடுமையான அதிருப்தியையும் விசனத்தையும் கட்சி முக்கியஸ்தர்களும் போராளிகளும் வெளிப்படுத்தியமைக்கு இதுவே காரணம் என்பதை எமக்கு உணர்த்துகின்றது.

    நாம் கூட கிழக்கு மாகாண ஆட்சியில் மனம் விரும்பி திருப்தியுடன் செயற்படவில்லை. அங்கு நடக்கும் அர்த்தமற்ற ஆட்சியை பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பங்காளிக் கட்சியான எமது முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு எவ்வித அதிகாரமும் தரப்படாத நிலையில் ஆட்சியின் பங்காளியாக நீடிக்கிறோம். இது பெரும் அநியாயமாகும். எம்மை நம்பி வாக்களித்து இந்த சபைக்கு அனுப்பிய மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் முடக்கப்பட்டிருக்கின்றோம்.

    கிழக்கின் ஆட்சியை நிறுவுவதற்கு ஆதரவு வழங்கிய நாம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் கட்சிக்கும் தனிப்பட்ட வகையில் எமக்கும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்ட போதிலும் இன்றுவரை அதன் ஸ்திரத்தன்மைக்கு பங்கம் ஏற்படுத்தாமல் எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றோம்.

    ஆனால் அரசாங்கம், தான் வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றி தனது நம்பிக்கையை நிரூபிப்பதற்கு இன்னும் முன்வரவில்லை.

    இவ்வாறான காரணங்களினால் கட்சியின் மீதும் எம்மீதும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வீண்போய்- பாரிய அதிருப்திகளையும் குற்றச்சாட்டுகளையும் வெளிப்படுத்துகின்ற துர்ப்பாக்கிய நிலை இன்று தோன்றியுள்ளது. இது எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றோம். ஆகையினால் இந்நிலை நீடிப்பதற்கு இனியும் அனுமதிக்கக் கூடாது.

    இதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதாவது 2015 ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு முன்னதாக, அரசாங்கம் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் கிழக்கின் ஆட்சி நிறுவப்படும் போது தம்மிடம் வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றித் தருமாறு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து நிபந்தனை விதிக்க வேண்டும்.

    இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான வாய்ப்பை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அனைவரதும் நம்பிக்கையாக இருக்கின்றது.

    எனவே அரசாங்கத்தினால் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்ற எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவற விட்டு விடக் கூடாது என்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் சார்பில் மிகவும் அழுத்தமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்" என கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உத்தரவாதங்க​ளை நிறைவேற்றா​விடின் பட்ஜெட்டை மு.கா. எம்.பி.க்க​ள் எதிர்க்க வேண்டும்! ஜெமீல் அழுத்தம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top