• Latest News

    November 22, 2014

    மைத்திரிபால சிறிசேன: அரசியல் வாழ்க்கையும் பின்னணியும்

    பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.
     
    உள்ளூர் பள்ளிக்கூடமொன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார்.

    அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகத்தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியிருந்தார்.

    1971-ம் ஆண்டில் ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் மைத்திரிபால சிறிசேனவும் இருந்துள்ளார்.

    மாணவர் பருவத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர் இளைஞர் அணி செயற்பாட்டாளராக இருந்துள்ள மைத்திரிபால சிறிசேன,

    1970களில் இறுதியில் அந்தக் கட்சியின் தீவிர உள்ளூர் அரசியல் குழுக்களில் அங்கம் வகித்துள்ளார். அதன் பின்னர், 1980களின் தொடக்கத்திலிருந்தே கட்சியின் தேசிய மட்ட அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகிக்கத் தொடங்கினார்.

    இதில் 1982-ம் ஆண்டில் அகில இலங்கை இளைஞர் அணித் தலைவராகவும் பின்னர் கட்சியின் பொலிட் பீரோவிலும் உறுப்பினரானார்.

    1989-ம் ஆண்டில், 38வது வயதில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவனார்.

    அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று நாடாளுமன்றதுக்கு வந்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.

    பின்னர், சந்திரிகா பண்டாரநாயக்க 1994-ம் ஆண்டில் அமைத்த அரசாங்கத்தில் துணை நீர்ப்பாசனத்துறை அமைச்சராக நியமனம் பெற்ற மைத்திரிபால, மூன்று ஆண்டுகளில் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதிவியொன்றுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைச் செயலாளராகவும் வளர்ச்சி கண்டார்.

    பின்னர், அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்சியின் துணைத் தலைவராக நியமனம் பெற்ற சிறிசேன. 2004-ம் ஆண்டில் சந்திரிகா தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமனம் பெற்றார்.

    அதன்பின்னர், மகிந்த ராஜபக்ஷவின் தலைமைக் காலத்திலும் அதே பதவிநிலையில் நீடித்துவந்த மைத்திரிபால, விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

    அதன் பின்னர், விவசாயம் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் மைத்திரிபால, 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் படி, சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார்.

    விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உச்சகட்டத்தைத் தொட்டிருந்த காலத்தில் 2008-ம் ஆண்டில் கொழும்பின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலையில் மைத்திரிபால சிறிசேன தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் திகதி நடக்கவுள்ள நிறைவேற்று ஜனாதிபதிக்கான அடுத்த தேர்தலில், மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக, எதிரணிகள் சேர்ந்து களமிறக்கின்ற பொது வேட்பாளர் தான் என்று இன்று வெள்ளிக்கிழமை மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

    63 வயதான மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மனைவியான ஜயந்தி புஸ்பா குமாரி தம்பதியருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மைத்திரிபால சிறிசேன: அரசியல் வாழ்க்கையும் பின்னணியும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top