• Latest News

    November 08, 2014

    இலங்கையை கண்டித்து திங்கட்கிழமை நீதிமன்றத்தை புறக்கணிப்பதற்கு சட்டத்தரணிகள் முடிவு

    இலங்கையை கண்டித்து திங்கட்கிழமை  10ஆம் திகதி நீதிமன்றத்தை புறக்கணிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் முடிவு எடுத்துள்ளனர்.

    சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம், அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-

    1. இலங்கை அரசாங்கம், இனவெறியோடு தமிழர்களை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக மீனவர்களை தொடர்ந்து அழித்து வருகிறது. அதன்தொடர்ச்சியாக 5 தமிழக மீனவர்கள் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டு, அந்த வழக்கில் இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதை கண்டிக்கின்றோம். இது மனிதாபிமானமற்ற செயலாகும்.

    2. இந்த செயலை தடுக்காத மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தை கண்டிக்கின்றோம். 5 அப்பாவி மீனவர்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதற்காக இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக சட்டத்தரணிகளை மத்திய அரசு நியமித்துள்ளதுபோல், தமிழக அரசும் தமிழகத்தை சேர்ந்த சட்டத்தரணிகளை நியமிக்க வேண்டும். அதேபோல, 5 மீனவர்களுக்காக இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் குழுவையும் எங்கள் சங்கம் சார்பில் அமைக்கின்றோம்.

    மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கட்கிழமை 10ஆம் திகதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல பெண் சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுக்குழு, அந்த சங்கத்தின் தலைவர் வி.நளினி, துணை தலைவர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, செயலாளர் என்.எஸ்.ரேவதி ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.

    அந்த கூட்டத்தில், 10ஆம் திகதி, நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையை கண்டித்து திங்கட்கிழமை நீதிமன்றத்தை புறக்கணிப்பதற்கு சட்டத்தரணிகள் முடிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top