• Latest News

    December 04, 2014

    தமிழர்களை வாக்களிக்க விடாது தடுக்க அரசு நடவடிக்கை

    தமிழர்களை வாக்களிக்க விடாது தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ரோஹணகமகே தெரிவித்தார்.

    வவுனியா கோவில்குளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    82 வீதமானவர்கள் மைத்திரிக்கு வாக்களிப்பார்கள்
    பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் இணைந்து அண்மையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது 90 முதல் 92 வீதமான வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள் இம்முறை வாக்களிப்பார்கள். அதில் 78 முதல் 82 வீதமானவர்கள் மைத்திரிக்கு வாக்களிப்பார்கள் என தெரிய வந்துள்ளது.

    இதன் காரணமாகவும் தற்போதைய அரசாங்கத்தின் திருகுதாளங்களாலும் நடைபெறும் தேர்தல் சுதந்திரமானதாக இடம்பெறுமா என்பது கேள்வியாகவே உள்ளது. அதன் காரணமாகவே சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியமாக உள்ளனர்.

     பொருளாதாரம், பாதுகாப்பு, அபிவிருத்தி, நீதித்துறை 
    யுத்தம் முடிந்த பின்னர் நாடு பல அபிவிருத்திகளை கண்டிருக்க வேண்டும். ஆனால் இன்று நாடு மிக மோசமாக சென்று விட்டது. மக்களின் பொருளாதாரம், பாதுகாப்பு, அபிவிருத்தி, நீதித்துறை, மக்கள் கலாசாரம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு வேண்டும். ஆனால் இன்று அது இல்லை.

     வாக்களிக்க விடாது செய்வார்கள்
    கிளிநொச்சியில் உள்ள பண்ணையில் 6000 குடும்பங்கள் உள்ளன. அவர்களை அரசாங்க கட்சிகளை தவிர வேறு எவரும் சென்று சந்தித்து கலந்துரையாட முடியாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே இவர்களையும் வாக்களிக்க விடாது செய்வார்கள். யாழ்ப்பாணத்திலும் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல முடியாதவாறு தடுக்கப்படுவார்கள்.

     3 இலட்சம் வாக்குகள்
    இவ்வாறு இந்த அரசாங்கம் 3 இலட்சம் வாக்குகளை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து இல்லாமல் செய்து தாம் வெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

    எனினும் இத்தடைகளை தாண்டி மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    ஐக்கிய தேசியக் கட்சியானது இலங்கை  மக்களுக்கான இன, மத மொழிகளை கடந்த கட்சி. இன்று மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஒரு குடும்பமே உள்ளது அது ராஜபக் ஷ குடும்பம். ஆனால் மைத்திரிக்கு பல குடும்பங்கள் பலமாக உள்ளன.

     ஹெல உறுமய புலி என சொல்வார்கள்
    இன்று ஹெல உறுமய அரசை விட்டு வெளியில் வந்து விட்டதால் இனி அவர்களும் புலி என சொல்வார்கள். தற்போதைய அரசாங்கம் எதனையும் சொல்லட்டும் ஆனால் மைத்திரியே வெற்றி பெறுவார்.

    ஏனெனில் அவர் ஊழல் அற்றவர். அவரிடம் கெட்ட எண்ணம் இல்லை. அவரது குடும்பத்திற்கும் இல்லை. எனவே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பிய பின்னர் இந்த நாட்டில் நல்லாட்சி மலரும். நிறைவேற்று அதிகாரத்தை அகற்றிய பின்னர் இந்த நாட்டில் தேசிய அரசு உருவாகும். அதனூடாக அனைத்து இனத்தவர்களும் சுபீட்சமாக வாழும் சூழல் ஏற்படும் எனத் தெரிவித்தார். VK
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழர்களை வாக்களிக்க விடாது தடுக்க அரசு நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top