• Latest News

    December 03, 2014

    80 பேரை புலிகள் கொன்று புதைத்ததாகக் கூறப்படும் இடத்தில் ஆய்வு

    விடுதலைப் புலிகளினால் சிறை வைக்கப்பட்டிருந்த 80 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இடம் ஒன்றை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் நேற்று அகழ்ந்திருக்கின்றார்கள்.

    முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பெரிய இத்திமடு என்ற இடத்திலேயே இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார்.

    பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் போது, நான்கு சாட்சிகள் தெரிவித்த தகவல்களின் பின்னணியில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.ஐ.வஹாப்தீனின் உத்தரவுக்கமைவாக இந்த அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

    இதன்போது அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள், சட்ட வைத்திய பிரிவினர் மற்றும் கொழும்பு ஜயவர்தனபுர, ரஜரட்ட ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தோர் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

    பொலிஸ் பரிசோதகர் ஜெயரத்னம், இராணுவ கேப்டன் ஒருவர் உள்ளிட்டோரும் இவ்வாறு விடுதலைப் புலிகளினால் சிறை வைக்கப்பட்டிருந்து பின்னர் கொல்லப்பட்டதாகக் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

    நேற்றைய அகழ்வு பணிகளின்போது, கொல்லப்பட்டவர்களின் உடல் எச்சங்கள் போன்ற தடயப் பொருட்கள் கிடைக்கவில்லை. ஆயினும் கொல்லப்பட்டவர்கள் எரியூட்டப்பட்டதற்கான அடையாளங்களைக் கொண்ட தடயங்களையே இராசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் சேகரித்திருப்பதாக சம்பவ இடத்திற்குச் சென்று திரும்பியுள்ள செய்தியாளர்களில் ஒருவர் கூறினார் என பிபிசி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

    இந்த அகழ்வு நடவடிக்கைகள் மூன்று தினங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 80 பேரை புலிகள் கொன்று புதைத்ததாகக் கூறப்படும் இடத்தில் ஆய்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top