எதிர்வரும்
ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக
முஸ்லிம் சமூகத்துக்கான வழிகாட்டல்களை தேசிய ஷூறா நேற்று வெளியிட்டுள்ளது.
குறித்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன:
1. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை
வாழ் மக்களது வரலாற்றில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக அமையவிருப்பதுடன்
பிராந்திய, சர்வதேசிய அரசியலிலும் இலங்கையுடனான பிறநாடுகளது உறவிலும் பாரிய
தாக்கங்களை விளைவிக்கவிருக்கிறது. எனவே, வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள
ஒவ்வொரு முஸ்லிமும் தேர்தல் நடைபெறவுள்ள தினத்தில் நேர காலத்தோடு
வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பது அவசியமாகும்.
2. வாக்களிப்பது ஓரு ஜனநாயக உரிமை மட்டுமன்றி, இஸ்லாமிய நோக்கில் அது ஒரு அமானிதமும் கடமையும் சாட்சியமளித்தலுமாகும்.
3. பொதுவாக முஸ்லிம் பெண்கள், வயோதிபர்கள்,
நோயாளிகள் வாக்களிக்கச் செல்வதில் கவனமெடுப்பது குறைவாகும். எனவே, அவர்கள்
இது விடயமாகக் கூடிய கவனமெடுப்பதற்கு அவர்களைத் தூண்ட வேண்டும்.
4. வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல
முன்னர் ஆள் அடையாள அட்டையையும் வாக்குச் சீட்டையும் கொண்டுசெல்வதை
ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5. வெளிநாட்டில் தொழில் புரிவோரது
வாக்குகளை வேறு எவருக்காவது கைமாற்றுவதோ கள்ள வாக்குப் போடுவதோ நாட்டின்
சட்டப்படி குற்றச் செயலாகும் என்பதுடன் இஸ்லாமிய நோக்கில் அது ஒரு
நம்பிக்கைத் துரோகமாகும். எனவே, இவற்றிலிருந்து முற்றுமுழுதாகத்
தவிர்ந்தகொள்ள வேண்டும்.
6. நாட்டிலிருந்து குற்றச் செயல்களை
ஒழித்து நீதி, நேர்மை, இனங்களுக்கு இடையிலான சௌஜன்யம், சமாதானம், பொருளாதார
சுபீட்சம் போன்றவற்றை உருவாக்குவதற்கு அதிகபட்சம் உழைப்பார் என்று கருதும்
வேட்பாளருக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும். பொருத்தமானவர் ஒருவர்
இருக்க தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி பொருத்தமற்றவருக்கு வாக்களிப்பது
மாபெரும் தவறும் பாவமுமாகும்.
7. பொருத்தமான வேட்பாளர் யார் எனத் தீர்மானிப்பதற்கு பின்வரும் ஒழுங்குகளைக் கையாளலாம்:-
A.குறித்த ஒரு வேட்பாளர் பற்றியும் அவரைச் சார்ந்தவர்கள் பற்றியும் அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் நல்ல அறிவைப் பெற்றிருப்பது.
b.ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் காலங்களில்
வெளியிடும் கருத்துக்கள்இ அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் திட்டங்கள்
பற்றி அறிந்து கொள்வது.
c.நாட்டின் போக்கு பற்றிய தெளிவான அறிவைக்
கொண்ட அனுபவசாலிகள், முஸ்லிம் சமூகத்திலுள்ள உண்மையான சமூக ஆர்வலர்கள்
போன்றோரது அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்ளவது. வேட்பாளர் குறிப்பாக
முஸ்லிம் சமூகத்தினது நலனில் அக்கறை கொண்டவராகவும் இன, மத, வேறுபாடுகளைக்
கடந்து தேசிய நலனில் பொதுவாக கவனம் செலுத்துபவராகவும் இருப்பாரா
என்பதை நாம் அறிய வேண்டும்.
8. தேர்தல் காலங்களில் தேர்தலை
மையப்படுத்தி பல்வேறு குற்றச் செயல்கள் நாட்டில் இடம்பெறுவது வழக்கமாக
மாறியிருக்கிறது. ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை அத்தகைய எந்தவொரு வன்செயலிலும்
சம்பந்தப்பட்டுவிடக் கூடாது.
9. எந்தவொரு வேட்பாளரைப் பற்றியும்
பொய்யான, அபாண்டமான தகவல்களைப் பரப்புவதை விட்டும் முற்று முழுதாகத்
தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், ஒருவர் தான் விரும்பாத வேட்பாளரின்
ஆதரவாளர்களுடன் சச்சரவில் ஈடுபடுவதுஇ தூசிப்பது,தாக்குவது என்பனவும்
இஸ்லாம் விரும்பாத பாவங்களாகும்.
10. தேர்தலின் காரணமாக குடும்பங்களுக்கு
உள்ளேயும், ஊர்களுக்குள்ளும் பிளவுகள் ஏற்படும் வகையில் எவரது
நடவடிக்கைகளும் அமைந்து விடலாகாது.
11. தேர்தல் காலங்களில் அரசியலைப்
பற்றியும் வேட்பாளர்களைப் பற்றியும் அவர்களது கட்சிகளது செயற்பாடுகளைப்
பற்றியும் ஆங்காங்கே அளவு மீறிப் பேசிக் கொண்டு நேரத்தை கழிப்பது
தவிர்க்கப்பட வேண்டும். நேரம் பொன்னானது. ஒரு முஸ்லிம் பல வகையான
பொறுப்புக்களை நிறைவேற்றவே உலகில் படைக்கப்பட்டிருக்கிறான். அதில் அரசியல்
ஒரு பகுதி மாத்திரம் தான்.
12. பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப்,
டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பரிமாறும் போது மிகுந்த
ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். இந்த வலைத்தளங்களில் அதிக நேரத்தை
கழிப்பது நேர விரயம், பண விரயம் ஆகியவற்றுக்கு வழி வகுக்கும்.
13. தவவல்களைப் பறிமாற முன்னர் அவற்றை
ஊர்ஜிதப் படுத்திக் கொள்வது அவசியமாகும். அத்துடன் கிடைக்கும் தகவல்
ஊர்ஜிதப்படுத்தப்பட்டதாயினும் அதனைப் பிறருக்குப் பகிர்வது
பொருத்தமாகயிருக்குமா என நன்கு சிந்திக்க வேண்டும். “ஒருவர் தான்
செவிமடுக்கும் தகவல்கள் அனைத்தையும் பிறருடன் கதைப்பதானது அவர் பொய்யர்
என்பதற்குப் போதுமான சான்றாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
14. அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு யார்
பொருத்தமானவர் என எம்மிடம் ஒரு தீர்மானம் இருக்கலாம். ஆனால், அல்லாஹ்வின்
தீர்மானம் எப்படியிருக்கும் என எம்மில் யாருக்கும் தெரியாது. எனவேஇ
அல்லாஹ்விடம் நாம் பிரார்த்திக்க வேண்டும். அது ‘இஸ்திஹாரா’ எனப்படும்.
‘யாஅல்லாஹ்! அடுத்து வரும் காலங்களில் இந்நாட்டுக்கு யார் பொருத்தமான
ஆட்சியாளர்கள் என்று நீ கருதுகிறாயோ அவர்களுக்கு நீ வெற்றியைக்
கொடுப்பாயாக.’ என்று நாம் பிரார்த்திப்பது அவசியமாகும்.
மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களை இலங்கை
முஸ்லிம் சமூகம் கடைப்பிடித்து ஒழுகும் என தேசிய ஷூறா சபை
எதிர்பார்க்கிறது. உலமாக்கள்,கல்விமான்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள்
மேற்கூறப்பட்ட வழிகாட்டல்களை சமூகத்தின் எல்லா மட்டங்களுக்கும் எடுத்துச்
செல்ல தம்மாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என வினயமாக வேண்டிக்
கொள்கிறது. எமது முயற்சியும் அல்லாஹ்வின் நாட்டமும் இணையும் போது நல்ல
விளைவுகள் பிறக்கும்.
வல்ல அல்லாஹ் எமது தாயகமான இலங்கை
நாட்டுக்கும் அங்கு வாழும் சகல சமூகங்களுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நல்க
வேண்டும் என்றும் நல்ல தலைவர்களை உருவாக்குவதற்கு துணைபுரிய வேண்டும்
என்றும் தேசிய ஷூறா சபை பிரார்த்திக்கிறது.
