மு.காவின் தலைவர் ஹக்கீமின் மறுப்புச் செய்தி
சில இணையத் தளங்களிலும், முகநூல் பக்கங்களிலும் பகிரப்பட்டு வரும்
http://www.jvpnews.com இல் வெளிவந்துள்ள 'ஹக்கீம் உடனடியாக வெளியேறவும் மஹிந்த எச்சரிக்கை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியை பொய்யான புரளியெனவும், முற்றாக திரிபுபடுத்தப்பட்டதெனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஊடகப் பிரிவு ஜே.வி.பி அலுவலகத்தை 0112-785612 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, குறிப்பிட்ட இணையத்தளம் போலி இணையத் தளமென்றும், தமது இணைய முகவரி
http://www.jvpsrilanka.com என்றும் அங்கு பணிபுரியும் அதிகாரி ஜயவிக்கிரம என்பவரால் உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த 8 ஆம் திகதி மாலை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சிப் பிரமுகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், அமைச்சர் அதாவுல்லாவின் ஆதரவாளர்கள் சிலர் தம்மிடம் இதுபோன்ற ஒரு செய்தியைச் சொன்னதாக குறிப்பிட்ட போது, அமைச்சர் ஹக்கீம் அதனை முற்றாக மறுத்ததுடன், ஜனாதிபதி அவ்வாறு சீறிப் பாய்ந்திருந்தால், தமது செயலாளர் லலித் வீரதுங்கவை எனது வீட்டிற்கே அனுப்பி முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருப்பாரா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்வாறான பொய் வதந்திகளை இணையத்தளங்களில் இருந்து பொறுக்கியெடுத்து வெளியிடுபவர்கள் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாமல் செயல்படுவது கண்டிக்கத்தக்கதாகும் என்றும் தனக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் திங்கள் கிழமை காலையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த முஸ்லிம் அமைச்சரின் பெயரை வெளிப்படையாக எந்த இணையத்தளமாவது குறிப்பி;ட முடியுமா என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
மேலும், சம்பிரதாயத்திற்காக ஜனாதிபதியை வாழ்த்துவதற்கு தாம் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், அப்பொழுது ஜனாதிபதி அதற்கு நன்றி தெரிவித்து தம்முடன் சுமுகமாக உரையாடியதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஜனாதிபதி தம்மீது சீறிப்பாய்ந்திருந்தால், அதே பாணியில் தாமும் சீறிப்பாய்ந்திருப்பார் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார். அவ்வாறான சில சம்பவங்கள் முன்னர் அமைச்சரவை கூட்டம் உட்பட இடம்பெற்றிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
அந்தச் செய்தியில் தொடர்ந்து கூறப்பட்டுள்ள தகவல்களைப் பார்க்கும் போது காழ்ப்புணர்ச்சியினால் உந்தப்பட்ட முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இந்த அபாண்டத்தை இணையத்தளங்களின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வர் என்று அமைச்சர் ஹக்கீம் தெரிவித்ததோடு, ஊடக தர்மத்தை அனுசரித்து மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் இவ்வாறான விடயங்களை கையாளுமாறு இணையத்தளங்களை வேண்டிக்கொள்வதுடன், முகநூல் தொடர்புள்ளவர்கள் இவ்வாறான போலிச் செய்திகளை இனங்கண்டுகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின்
ஊடகப் பிரிவு

0 comments:
Post a Comment