![]() |
| மஹிந்த ராஜபக்ஷ |
நாட்டில் அரசியல் ஸ்திரமில்லாத நிலைமையை
ஏற்படுத்தி மீண்டும் பயங்கரவாதத்தை உயிர்ப்பிப்பதற்கும்
வெளிநாடுகளின் கைப்பொம்மைகளாக எம்மை ஆட்டுவிப்பதற்கும் ஒரு போதும்
இடமளிக்கமாட்டேன் என உறுதியளித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்திய கிழக்கு நாடுகளில்
தலைதூக்கியுள்ள நெருக்கடிகளை பார்த்து நாம் பாடம்
படிக்கவேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை
இடம்பெற்ற இணக்கப்பாட்டு சபை உத்தியோகத்தர்களுடனான சந்திப்பில்
உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றும்
போது, இன்று மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
நிலைமைகளை நாம் பார்க்கின்றோம். தெரிந்து கொள்கின்றோம்.
இவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் போது ஒரு நாட்டில் முன்னேற்றத்தைக்
காண முடியாது. அங்கு வீழ்ச்சியையே காண முடியும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு அங்கு
அரசியல் ஸ்திரத் தன்மை இருக்க வேண்டும். நாம் எந்தவொரு இனத்திற்கும்
எதிராக செயற்படவில்லை. நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்கவே
நடவடிக்கைகளை மேற்கொண்டோம். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமையை
ஏற்படுத்த இடமளிக்கமாட்டோம்.
நாட்டில் அரசியல் ஸ்திரமில்லா நிலைமையை
ஏற்படுத்த இடமளிக்க மாட்டோம். நாட்டில் ஸ்திரமில்லா நிலைமை
ஏற்பட்டால் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது என்பதை மனதில்
வைத்துக்கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள ஸ்திரத்தன்மையை பாதுகாக்க
அதனை முன்னெடுத்து செல்வது எமது அனைவரினதும் கடப்பாடாகும்.
அப்போதுதான் சமூகத்தில் உங்களுக்கு உங்கள் பிள்ளைகளுக்கு அந்தப்
பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு நாட்டுக்குள் அமைதியாக வாழ முடியும்.
அவ்வாறில்லாமல் நாட்டை பின்நோக்கி
நகர்த்துவதற்கு இடமளிக்க முடியாது. அத்தோடு வெளிநாடுகளுக்கு
தேவையான விதத்தில் எம்மை கைப்பொம்மைகளாக ஆட்டுவிக்க முடியாது.
நாட்டை அடிமைப்படுத்தவும் எவருக்கும் இடமளிக்க மாட்டோம்.
நீங்கள் இந்த நாட்டுக்கு செய்யும் சேவையை
வேறு எவராலும் செய்ய முடியாது. இணக்க சபைக்கு படித்தவர்கள்
புத்திக்கூர்மையுள்ளவர்கள் சிறந்த குடும்பப் பின்புலம்
உள்ளவர்களே நியமிக்கப்படுகின்றனர். நாடு பூராகவும் 328
இணக்கப்பாட்டுச் சபைகள் இயங்கி வருகின்றன. பிரச்சினையில்லாத
சமூகமொன்றில் வாழ்வதையே நாமனைவரும் விரும்புகிறோம்.
இணக்கப்பாடுகளை ஏற்படுத்துபவர்கள்
என்ற ரீதியில் நீங்கள் இன மத குல பேதங்களை பார்ப்பதில்லை. கௌரவமாக
உங்கள் தொழிலை முன்னெடுக்கின்றீர்கள். முன்னைய காலங்களில்
எம்பிலிபிட்டிய நீதிமன்றத்தில் அதிகமாக கொலை வழக்குகளே
விசாரிக்கப்பட்டன.
ஆனால் இன்று அதிகளவில் விவாகரத்து
வழக்குகளே விசாரிக்கப்படுகின்றன. ஏனென்றால் இன்று நடைமுறையில்
உள்ள சட்டம் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றம்
சென்றால் அவர்கள் இருவரையும் தனித் தனியாக பிரித்து விடுகின்றார்கள்.
அன்று வீட்டில் பிரச்சினையை பானையில்
சோறு வேகும் வரைதான் என்று சொல்வார்கள். அதன் பின்னர் சமாதானமாகி
விடுவார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. எனவே இவ்வாறான
பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண இணக்க சபை ஊடாக முயற்சிக்க வேண்டும்.
அதைவிடுத்து கணவன் மனைவியை பிரித்து
பிள்ளைகளை நடுத்தெருவில் கைவிடும் சட்டங்களை முன்னெடுப்பதற்கு
பதிலாக புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். எமது நாட்டு
கலாசாரத்திற்குள் மேற்கத்தைய நாடுகளின் கலாசாரத்தை உள்ளீர்க்க
இடமளிக்க முடியாது.
எமது நாட்டின் கலாசாரம் மற்றும் குடும்ப
விழுமியங்களுக்கமைய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். தற்போதுள்ள
சட்டங்களால் குடும்பங்களை சீரழிப்பதா? பிள்ளைகளை அனாதைகளாக்குவதா? என்பதை
தேடிப் பார்க்க வேண்டும்.
பல வருடங்களுக்கு முன்பதாக சேவை செய்த
போதிருந்த நாடா இன்றுள்ளது? மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கைத்தரம்
உயர்ந்துள்ளது. அடிப்படை வசதிகள் உயர்ந்துள்ளது. கிராமங்களுக்கு மின்சாரம்
கிடைத்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment