இன்று நாட்டில் நல்லாட்சி இல்லை.
அனைத்தும் அலரிமாளிகை மூலமே நிர்வகிக்கப்படுகிறது. அமைச்சின்
செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சுயாதீனமாக கடமைகளைச் செய்ய
முடியாத நிலை காணப்படுகிறது. அவர்களது கடமைகள் அலரிமாளிகை மூலம்
கட்டுப்படுத்தப்படுகிறது. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டு
நல்லாட்சி நாட்டில் ஏற்படுத்தப்படும் என எதிரணியின் பொதுவேட்பாளர்
மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று
முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG ) பொதுவேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த
கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்
நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும் தொடர்ந்தும் மக்கள்
பயத்துடனே வாழ்கின்றார்கள். ஏனென்றால் நாட்டில் நல்லாட்சி
நடைபெறவில்லை. நாட்டு மக்களுக்கு சுதந்திரம் இல்லை. நீதிமன்ற
சுயாதீனம் இல்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை. நல்லாட்சியுள்ள
நாடென்றால் மக்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும்.
இன்று ஊடக சுதந்திரமில்லை.
ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாதிருக்கிறது.
எழுதியதைப் பிரசுரிக்க முடியாதுள்ளது. ஊடக நிறுவனங்கள்
அலரிமாளிகை மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. பிரசுரிக்கப்பட
வேண்டிய செய்திகள் படங்கள் கூட அலரிமாளிகையினாலே
நிர்வகிக்கப்படுகின்றன.
வர்த்தகத் துறையில்
ஈடுபட்டுள்ளவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளது.
அரசாங்க ஆதரவாளர்களுக்கு மாத்திரமே வர்த்தகத்திலும்
இறக்குமதித் துறையிலும் வாய்ப்பளிக்கப்படுகிறது. தேசிய வரி
மதீப்பீட்டுத்திணைக்களம், கலால் வரி திணைக்களம், சுங்க வரி
திணைக்களம் அனைத்தும் அரச ஆதரவாளர்களின் செல்வாக்குக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன.
எனது பிரசாரத்திற்கு கட் அவுட்கள்
தேவையில்லை. தேவை ஆசீர்வாதம் போன்று நான் மக்கள் மனதில் இடம்
பிடித்துள்ளேன். மக்கள் ஆசீர்வாதம் என் பக்கமுள்ளது. ஒவ்வொரு
நகரத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வீட்டிலும்
நல்லாட்சியை எதிர்பார்த்து மக்கள் காத்துக் கிடக்கின்றார்கள்.
எனது 49 வருட அரசியல் வாழ்வில் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்து 13 வருடகாலம் கட்சியின்
செயலாளராக இருந்து நிறைந்த அனுபவங்களைப் பெற்றுள்ளேன். நாட்டு
மக்களின் நலனுக்காக எனது கடமையை சரிவர நிலை நாட்டுவேன். நாட்டு
மக்கள் தமது மதங்களை சுதந்திரமாக கடைப்பிடிப்பதற்கு நான் உறுதி
செய்வேன். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்து
நல்லாட்சியை ஏற்படுத்துவேன் என்றார்.
முன்னாள்
அமைச்சர் ராஜித சேனாரட்ன பேசுகையில், யுத்தம் முடிவுக்கு வந்ததும்
நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்த எதிர்பார்ப்புகள் எதுவும்
நிறைவேறவில்லை. நாட்டில் சமயங்களுக்கு எதிரான சம்பவங்களே
நடந்தன. நான் நாட்டில் இல்லாத போது அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு
எதிராக வன்முறைகள் இடம்பெற்றன. யுத்தத்தின் பின் சமாதானம்
கிடைக்கவில்லை.
யுத்தம் முடிவடைந்தும் தமிழர்கள்
பாதைகள் கேட்கவில்லை. அபிவிருத்தி கேட்கவில்லை. தொழில்
கேட்கவில்லை. உரிமைகளுடன் வாழுவதற்கான சூழலையே கேட்கிறார்கள்.
முஸ்லிம்கள் நாட்டுப்பற்று
உடையவர்கள். அவர்கள் இங்கு தனியாக வந்து எமது பெண்களை மனைவியாக்கி
கொண்டார்கள். முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் நாட்டின் சுதந்திரத்தை
சிங்களவர்கள் மாத்திரம் தனித்துப் பெற்றுக் கொள்ளவில்லை. நாட்டின்
சுதந்திரத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பங்கிருக்கிறது. எனவே
நாமனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்.
ஜனவரி 8 ஆம் திகதியின் பின்பு ஜனாதிபதி
வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவது உறுதி செய்யப் பட்டுவிட்டது.
மூவின மக்களும் சேர்ந்து அவருக்கு ஆதரவினை வழங்குவோம் என்றார்- VK


0 comments:
Post a Comment