• Latest News

    December 19, 2014

    கிழக்கில் முஸ்லிம்கள் அரசுக்கு எதிரான கருத்திலேயே இருந்து வருகின்றனர்: ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்

    எஸ்.அஷ்ரப்கான்:
    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என்ற இறுதித் தீர்மானம் இதுவரையில் எட்டப்படாத நிலையில் கிழக்கில் முஸ்லிம்கள் அரசுக்கு எதிரான கருத்திலேயே இருந்து வருகின்றனர். இந்நிலைக்கான முழுப் பொறுப்பினையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் இன்று (19) தெரிவித்தார்.

    ஜனாதிபதித் தேர்தல்  தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

    கடந்த காலங்களில் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், பள்ளிவாசல் உடைப்புக்கள், ஹலால் மற்றும் ஹிஜாப் மீது மேற்கொண்டு வரும் கெடுபிடிகள், பொதுபலசேனா அமைப்பின் இனவாத நடவடிக்கைகள் போன்றவற்றை அரசு கண்டுகொள்ளாமல் நடந்ததன் காரணமாகவும், எதிர்காலத்தில் இவ்வரசினால் முஸ்லிம்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும் என்ற பல காரணமாகவும் அரசு முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கிழந்து காணப்படுகின்றது.

    அண்மையில் ஹரீஸ் எம்.பி அலறிமாளிகைக்குச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் என்பதை தொடர்புபடுத்தி பல செய்திகள் இலத்திரனியல் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹரீஸ் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் சில நியாயங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன்.

    தேசிய அரசியலில் மத்திய அரசுடன் இணைந்துள்ள எம்பிக்கள் ஜனாதிபதியை சந்திப்பது எவ்வகையில் தவறாகும் என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது. இதனை ஒரு பூதாகரமாக வெளியுலகுக்குக் காட்டி ஹரீஸ் எம்.பியினதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினதும் செல்வாக்கை அழிக்க முற்படுவது முட்டாள்தனமானதாகும். இதில் காழ்ப்புணச்சி கொண்ட சில அரசியல்வாதிகள் மிகவும் ஈடுபாடுகொண்டவர்களாக செயற்படுகின்றனர்.

    கல்முனையில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற விடயத்திலும், கல்முனையை இனரீதியாக பிரித்து அரசியல் இலாபம் தேடமுனையும் அரசியல்வாதிகளை முறியடிக்க முனைந்த விடயத்திலும் தொடர்ச்சியாக மிகவும் அக்கறையுடன் செயற்பட்டுவரும் ஹரீஸ் எம்.பியின் போக்கை வரவேற்பதோடு, இனங்களை தனிப்பட்ட அரசியலுக்காக மூட்டிவிட நினைக்கும் அரசியல்வாதிகளையும் இச்சந்தர்ப்பத்தில் கண்டிக்கின்றேன்.

    கல்முனையை துண்டாட வேண்டும் என கல்முனைக்கு வெளியிலுள்ள அமைச்சர் மற்றும் சில அரசியல் வைரஸ்களும் இன்று கைகோர்த்தக்கொண்டு செயற்பட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது. கல்முனை மாநகரை பிரித்து தனித்தனியான உள்ளுராட்சி மன்ற நிருவாக முறைமைகளை செயற்படுத்த கல்முனையில் எவரும் எதிர்க்கவில்லை. ஆனால் கல்முனையில் உள்ளுராட்சி மன்ற அதிகாரம் கிடைக்கப்பெற்ற காலம்தொட்டு பேணப்பட்டுவரும் தமிழ்-முஸ்லிம் உறவுக்கு எவ்வித பாதகமும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் கல்முனை மக்கள் கரிசனையோடு இருக்கின்றார்கள். சமூக ஒற்றுமையில் பற்றில்லாத இனவாதம் மற்றும் பிரதேச வாதங்களை சுயநல அரசியலுக்காக மக்கள் மத்தியில் ஊட்டுகின்றவர்களை ஊக்குவிக்க முடியாது.

    மிக நீண்டகால அரசியல் வரலாற்றினைக் கொண்ட கல்முனையில் பிறந்த எந்த அரசியல்வாதியும் சமூகத்தை விற்று டீல் பேசி சொத்துக்கள் சேர்த்தவர்கள் கிடையாது. நல்ல குடும்பத்தில் பிறந்து செல்வாக்குடன் வாழ்ந்தவர்களே இங்கு அரசியல் தலைவர்களாக இருந்துவருகின்றார்கள். ஹரீஸ் எம்பி டீல் பேசினார் என்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஹரீஸ் எம்பி மீது காழ்ப்புணச்சி கொண்ட அரசியல்வால்கள் தலைமைகள் இருக்க இவ்வாறாக ஆடிக்கொண்டிருக்கின்றன. இவர்களின் ஆட்டத்தினால் பாதிக்கப்படுவது எமது சமூகமே. இவ்வாறானவர்களுக்கு மக்கள் எதிர்காலத்தில் தகுத்த பாடம் புகட்டுவார்கள்.

    எனவே, யார் எதைச் சொன்னாலும் முஸ்லிம் காங்கிரஸின் முடிவில் நாட்டின் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவது திண்ணம். இன ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பிரிவுகளை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடைய முயற்சித்த எத்தனையோ அரசியல்வாதிகள் இன்று முகவரியில்லாமல் அழிந்துபோனது வரலாறாக இருக்கின்றது. நாட்டை இராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாலும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கில் முஸ்லிம்கள் அரசுக்கு எதிரான கருத்திலேயே இருந்து வருகின்றனர்: ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top