• Latest News

    December 09, 2014

    எம்மோடு இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிகின்றேன் - மஹிந்த

    வெற்றிலைச் சின்னம் வெற்றியின் சின்னம் அமோக வெற்றியே எமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

    எமது அரசியல் கூட்டு ஒரு தனி நபரைச் சுற்றியதல்ல. விசாலமான கூட்டமைப்பு. தெளிவான பாதையும். பயணமும். தரிசனமும் எமக்கு உள்ளது. அந்தப் பாதையில் வெற்றிப் பயணத்தை மேற்கொள்வோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

    நேற்றைய தினம் 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட போதே ஜனாதி பதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் :-

    எமது கட்சியின் முன்னாள் செயலாளர் எதிர்க் கட்சியில் போட்டியிடுகின்றார். எனினும் இன்று அங்குள்ள செயலாளர் எம்மோடு இணைந்துகொண்டுள்ளார். இதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் சரிவு. சரிவு ஆரம்பமாகிவிட்டது.

    நாம் நாட்டை மீட்டு முப்பது வருட பயங்கரவாதத்தை இல்லாதொழித்து அனைத்து இன, மத. மக்களுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். நாட்டை சரியான பாதையில் இட்டுச் சென்று நாட்டின் அனைத்துத் துறைகளையும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பியுள்ளோம். நாம் வரலாற்றை மறந்து செற்படுபவர்களல்ல என்பதால் எமக்கு சிறந்த எதிர்காலமுண்டு.

    நாம் மக்களுக்குக் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளோம். 2005 ல் பயங்கரவாத்தை ஒழிக்கும் வாக்குறுதியையும் 2010 ல் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் வாக்குறுதியையும் வழங்கி அவற்றை நாம் நிறைவேற்றியுள்ளோம்.

    2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தலுக்குப் பின் நல்லொழுக்கம் நிறைந்தும் எதிர்கால சந்ததிக்கு சுபீட்சமானதுமான நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம். அந்த பொறுப்பினை நாட்டு மக்கள் என்னிடம் ஒப்படைப்பர் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

    நல்லொழுக்கத்தில் கட்டியெழுப்பப்படும் நாடாகவும் அனைத்து இன, மதங்களுக்கிடையில் ஐக்கியம் மற்றும் சுதந்திரமாக வாழக்கூடிய சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் அதற்காக இம்முறை நாம் அர்ப்பணிப்போம் அபிவிருத்தியின் பயன்களை அடைவதற்காக நாம் நாட்டின் ஸ்திர நிலையைப் பலப்படுத்தியுள்ளோம். நாட்டை முன்னேற்றுவதற்கு நாடு ஸ்திரத் தன்மையுடன் விளங்குவது முக்கியமாகும். அந்த ஸ்திரத்தன்மையை நாம் நாட்டில் ஏற்படுத்தியுள்ளோம். அதனை வீழ்ச்சியுறச் செய்வதை இந்த நாட்டில் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    நாம் இதனைக் கருத்திற்கொண்டு சேறு பூசும் விதத்தில் செயற்படக்கூடாது. எம்மிடம் சேறு பூசும் அரசியல் கிடையாது. நேர்மையான தேர்தலொன்றையே நாம் எதிர்பார்க்கின்றோம்.

    மக்கள் எமது வெற்றியை அமோக வெற்றியாக்கும் போது அதன் பலன்களை அனுபவிக்க அனைவரும் தயாராக வேண்டும். அதேநேரம் இக்காலங்களில் பொறுமையுடனும் வன்முறைக்கு எதிராகவும் செயற்பட்டு இத்தேர்தலை அமைதியான தேர்தலாக்குவதற்கு முடிந்தளவு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எம்மோடு இணைந்துள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் குறிப்பாக மக்கள் ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி, மக்கள் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, இ. தொ. கா., டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி மற்றும் அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    எமது கூட்டு அரசியல் ஒரு தனிநபரைச் சுற்றியுள்ளதல்ல. எமக்கு தூரநோக்குடைய அரசியல் பயணம் உள்ளது. எமக்கு முன்னேறிச் செல்லக்கூடிய பாதையும், தரிசனமும், பயணமும் உள்ளது. அந்த பாதையூடாக வெற்றிப் பயணத்தை மேற்கொள்வோம். எமது தரிசனமும் பாதையும் தெளிவானது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எம்மோடு இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிகின்றேன் - மஹிந்த Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top