• Latest News

    December 14, 2014

    கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தனி நபர்கள் தீர்மானங்களை மேற்கொண்டால் கடுமையான நடவடிக்கை: ஹக்கீம்

    கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தனி நபர்கள் தீர்மானங்களை மேற்கொண்டாலோ, கட்சி உறுப்பினர்களைக் காவுகொள்ளவும், அவர்களைக் கையாளவும் எந்தத் தரப்பினராவது எத்தனித்தாலோ அத்தகையோர் மீது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமென அதன் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்தார்.

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் கம்பஹா மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் நடாத்திய கலந்துரையாடலின் போது தலைவர் ஹக்கீம் இதனை மிகவும் காட்டமாகக் கூறினார்.

    அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
    எல்லாக் கட்சிகளிலும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. ஆளும் பிரதான கட்சியிலேயே பிளவு ஏற்பட்டு அதன் விளைவாக அதன் செயலாளராகவும், முக்கிய அமைச்சரொருவராகவும் இருந்தவர் பிரிந்து சென்று ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அரசாங்கத்திலிருந்து இன்னும் சிலரும் பிரிந்து சென்றனர்.
     
    எங்கள் கட்சியையும் பிளவுபடுத்தி எங்களது ஒற்றுமையைக் குலைப்பதற்கு காலத்திற்குக் காலம் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாங்கள் ஒருபோதும் சதி முயற்சிகளில் ஈடுபடவில்லை. இனியும் ஈடுபடப்போவதில்லை. 
     
    கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கண்ணியமிக்க உலமாக்கள் முன்னிலையில் தலைமைத்துவத்தின் தீர்மானங்களுக்கு கட்டுப்படுவதாக என்னிடம் பைஅத் செய்துள்ளனர்.
     
    இவ்வாறான சூழ்நிலையில் தலைமையினதும், கட்சியினதும் தீர்மானத்தை எமது உறுப்பினர்கள் எவராவது மீறுவார்களாயின் அதனை எமது மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டார்கள்.
     
    ஜனாதிபதியின் சகோதரர்களான அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ,
     
    ஜனாதிபதின் செயலாளர் லலித் வீரதுங்க, பொது நிர்வாக உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோர் எங்களோடு கலந்துரையாடினார்கள். எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வுகளைக் காண்பதில் இப்போது அவசரம் காட்டப்படுகிறது. இதனை எமது மக்கள் ஏளனமாகப் பார்க்கிறார்கள் என்றார்.
     
    இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஷாபி ரஹீம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அல்பா நௌபல், எம். நயீமுல்லாஹ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தனி நபர்கள் தீர்மானங்களை மேற்கொண்டால் கடுமையான நடவடிக்கை: ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top