• Latest News

    December 17, 2014

    நிறைவேற்று அதிகாரம் கொண்ட எந்த ஜனாதிபதியும் தமிழர்களுக்கு தீர்வினைப் பெற்றுத் தரவில்லை: அரியநேத்திரன்

    இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஐனாதிபதி எவரும் தமிழ் மக்களின் தீர்வுக்காக தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்த வில்லை எதிராகவே பயன்படுத்தியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

    ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

    இம்முறை இடம்பெறவிருக்கும் தேர்தலானது ஏழாவது ஐனாதிபதித் தேர்தலாகும். இதற்கு முன்னர் இலங்கையை ஆண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதிகளில் ஜே.ஆர்.ஜேயவர்த்தனவாக இருக்கலாம், அல்லது சந்திரிக்காவாக இருக்கலாம், தற்போது இருக்கின்ற மகிந்த ராஐபக்ஷவாக இருக்கலாம், இவர்கள் அனைவரும் தமக்குரிய நிறைவேற்று அதிகாரத்தினை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுத் தரவில்லை மாறாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்க எதிராகவும் தங்களது பதவி நலனுக்காகவுமே பாவித்துள்ளனர்.

    இத் தேர்தலில் பலர் போட்டியிட்டாலும் மகிந்த அல்லது மைத்திரி ஆகிய இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறப்போகின்றார்கள். இவர்களினால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து எவரும் வாக்களிக்க வேண்டாம்.

    இதற்காக எவரும் வாக்களிக்காமல் விடக்கூடாது, அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

    காரணம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தனித்துவமானர்கள் என்பதனையும் 65 வருடகாலமாக இன விடுதலைக்கான போராடி வருகின்ற இனம் என்பதனை நம் ஒற்றுமையாக வாக்களிப்பதன் மூலம் பறைசாற்ற வேண்டும்.

    எனவே இம்முறைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் அக்கறையாக இருக்க வேண்டும்.

    மகிந்த ராஐபக்சவை ஆதரிக்கின்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அமைப்பாளர்கள் அனைவரும் தற்பொழுது கூறிவருவது என்னவென்றால். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை, மற்றும் தமிழ் மக்களின் ஆதரவும் தேவையில்லை,எமது ஐனாதிபதி வெற்றி பெறுவார் என தெரிவிக்கின்றனர்.

    இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. மாறாக கெடுதலையே செய்துள்ளது என்பதனை உணர்ந்து கூறுகின்றதா அல்லது வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவு தேவையில்லை என்பதன்னூடாக நாங்கள் சிங்கள மக்களின் தலைவர் என்பதனை காட்ட வெளிக்கிடுகின்றார்களா என தெரியவில்லை.

    இவ்வாறு தமிழ் மக்களை செல்லாக் காசாக நினைக்கும் இந்த மஹிந்த அரசுக்கு மக்கள் வாக்களிக்க தேவையில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை என கூறுவது வடகிழக்கு மக்களின் ஆதரவு தேவையில்லை என்பதற்கு சமனாகும்.

    அப்படியாக இருந்தால் வடக்கு கிழக்கில் தேர்தல் பிரசாரம் செய்ய தேவையில்லை, ஏன் பிரச்சாரம் செய்வதற்காக ஆங்காங்கே திருவிழாக் காலங்களில் மிட்டாய் கடை போடுவது போன்று மேற்படி பிரதியமைச்சர்கள், அமைப்பாளர்கள் தேர்தல் அலுவலகங்களை திறந்து வைத்து பிரச்சாரம் செய்கின்றார்கள்.இது தேவையற்ற விடயமாகும்.

    இதே நேரத்தில் கடந்த கால தேர்தல் வரலாறு என்பது விடுதலைப் புலிகள் மௌனித்த கால பகுதிக்கு பின்னர் ஏறக்குறைய 6 தேர்தல்களை சந்தித்துள்ளோம். இதனை பிரதேச சபை, மாகாணசபை, பாராளுமனறத் தேர்தல் என கட்டம் கட்டமாக சந்தித்துள்ளோம்.இதில் எமது பலத்தினை நிருபித்தும் காட்டியிருக்கின்றோம்.

    இத்தேர்தல்களின் போது எல்லாம் எமது மக்கள் கட்சி காரியாலங்களையும்,ஒட்டுகின்ற சுவரொட்டிகளையும் பார்த்து வாக்களிக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்மைப்பின் விருப்பத்திற்கு அமைவாகவே வாக்களித்துள்ளனர்.

    இதன் பிரகாரம் இந்த ஐனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை எமது தலைவர் சம்பந்தன் ஜயா முடிவெடுப்பார் என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்றார்
    TW -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிறைவேற்று அதிகாரம் கொண்ட எந்த ஜனாதிபதியும் தமிழர்களுக்கு தீர்வினைப் பெற்றுத் தரவில்லை: அரியநேத்திரன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top