சுழியோடி-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தராஜபக்ஷவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார்கள். மு.காவின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அமைச்சர்கள் எம்.ஐ.மன்சூர், ஏ.ஹாபீஸ் அஹமட், ஏ.எம்.ஜெமீல், எம்.நசீர், ஆர்.அன்வர், ஏ.தவம், மற்றும் ஜுனைடீன் முஹம்மட் லாஹீர் ஆகியோர்கள் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தராஜபக்ஷவை ஆதரிக்க தீர்மானித்துள்ளார்கள்.
கடந்த 09.12.2014இல் நடைபெற்ற மு.காவின் உயர்பீடக் கூட்டத்தில் ஏ.தவம் மஹிந்தராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டும். மாகாண சபை உறுப்பினர்களாகிய நாங்கள் அத்தகையதொரு முடிவில் உள்ளோம் என்றுள்ளார். மைத்திரியை ஆதரிப்பதற்கு எந்த காரணமும் கிடையாது என வாதிட்டுள்ளார்.
இதே போன்று ஜெமீல், மன்சூர், நசீர், ஹாபிஸ் நசீர் அஹமட், அன்வர் ஆகியோர்களும் மஹிந்தராஜபக்ஷவுக்கே மு.கா ஆதரவு வழங்க வேண்டுமென்று கேட்டுள்ளார்கள்.
இதே வேளை, கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரும், கட்சியின் பிரதித் தலைவருமான முழக்கம் மஜீத் மஹிந்தராஜபக்ஷவை ஆதரிப்பதே சிறந்ததென்று பட்டும் படாமலும், தொட்டுக் காட்டியுள்ளார். இவரின் கருத்து உயர்பீட உறுப்பினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாம். இவர் வழக்கமாக இன்றைய அரசாங்கத்திற்கு எதிராகவே கருத்துக்களை முன் வைப்பாராம்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது போனால், ஜனாதிபதி கிழக்கு மாகாண சபையை கலைத்துவிடுவார் என்ற பயம்தான் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் முடிவுக்கு காரணமாம். கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடப்பதற்கு இன்னும் 02 வருடங்கள் உள்ளன.
இதே வேளை, மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு அமைவாக மைத்திரிக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளார்கள். ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சுமார் இரண்டு மாதங்களின் பின் பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால், அத்தேர்தலில் தாங்கள் தோற்றுவிடக் கூடாதென்பதற்காகவே இந்த முடிவினை எடுத்துள்ளார்கள்.
இதே வேளை, கட்சியின் தலைவர், செயலாளர், தவிசாளர் ஆகியோர்கள் உயர்பீடக் கூட்டங்களில் மௌனமாக இருந்து வருவதாகவும், தலைவர் ஹக்கீம் இடையே சமாளிப்பு கருத்துக்களை முன் வைத்துக் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

0 comments:
Post a Comment