எங்களை
பழிவாங்கும் விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் நிகழ்ச்சி நிரலின்
அடிப்படையில் என்னை ‘ஹேக்’ நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கும்
கொண்டு செல்வதற்காக ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியினர்
உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளனர் என
தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, அன்று பஸ்களில் குண்டுகள்
வெடித்தன. இதனால் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் இருந்த நீங்கள்
இன்று உத்தரவாதத்துடன் தொழில் செய்கின்றீர்கள் என்றும்
தெரிவித்துள்ளார்.
தனியார் போக்குவரத்து பஸ்
உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை கடந்த சனிக்கிழமை அலரி மாளிகையில்
சந்தித்து உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;யுத்தம் முடிந்து ஐந்து
வருடங்களுக்கு பின்னர் துரிதமான அபிவிருத்திகளை மேற்கொண்டு
வருகின்றோம். அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட மக்களின் அடிப்படை
வசதிகளையும் மேம்படுத்தி வருகின்றோம்.
ஆனால், ஒரு சிலருக்கு இது
ஜீரணிக்கவில்லை. நாட்டின் அபிவிருத்தியை பின்னடையச் செய்யும் தேவை
இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இவர்களுக்கு நாட்டில் மீண்டுமொரு
யுத்தம் ஏற்பட வேண்டுமென்பதே ஆவலாகும்.
விடுதலைப் புலிகளும் எம்மை
பழிவாங்குவதற்கு கங்கணம் கட்டி செயல்படுகின்றனர். இவ்வாறான
குழுக்கள் அல்ஜசீரா தொலைக்காட்சி பேட்டிகளில் புலிகள்
அமைப்பினருடனும் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடனும் விவாத
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றன.
இதில் கலந்து கொண்ட இரண்டு இலங்கையர்கள் புலிகளின் கருத்துக்களுக்கு தலையசைத்து தமது ஆதரவை தெரிவிக்கின்றனர்.
மஹிந்த தோற்றால் அவரை ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என்ற புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர்.
இதற்காகத்தான் இந்தக் கூட்டணியினர்
இன்று உடன்படிக்கைகளை செய்து கொள்கின்றனர். எனவே, இந்த பழிவாங்கும்
முயற்சிகள் தொடர்பாக நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். உங்களது
தொழிற்துரை ஒரு காலத்தில் எதுவிதமான திட்டமிடலும் இன்றியே
முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாமல்
இருந்தது. அன்று நீங்கள் உங்கள் பஸ்களில் ஏறுபவர்களை
சந்தேகத்துடனேயே பார்த்தீர்கள்.
எந்த பஸ்ஸில் குண்டு வெடிக்குமோ என்ற
அச்சம் உங்கள் மனங்களில் குடி கொண்டிருந்தது. பிரயாணிகளினதும்
உங்களினதும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை காணப்பட்டது.
ஆனால், இன்று அந்த நிலை மாறியுள்ளது. நாட்டில் சுதந்திரமாக நடமாடும்
நிலைமை ஏற்படுத்தப்பட்டு உங்கள் உயிர்களுக்கும் உத்தரவாதம்
வழங்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின்
பயங்கரவாதத்திலிருந்து உங்களை மீட்டெடுத்து அபிவிருத்தியின்
பாதையில் வழி நடத்திக் கொண்டிருக்கின்றோம். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி
வீதம் 7.8 ஆக உள்ளது. ஆனால்இ வட பகுதியின் வளர்ச்சி நூற்றுக்கு 22 ஆக
அதிகரித்துள்ளது. அதிலிருந்து நாம் வடக்கின் அபிவிருத்திக்கு முதலிடம்
வழங்குவதை உங்களால் உணர முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். -VK
